Published : 02 Jul 2021 02:08 PM
Last Updated : 02 Jul 2021 02:08 PM

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம். படம்: ஜி. ஞானவேல்முருகன்

திருச்சி 

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் இன்று நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனிமாதம் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் 2 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜேஷ்டாபிஷேகம் ஜூன் 23-ம் தேதி தொடங்கி 2 நாட்கள் ரங்கநாதருக்கு நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இன்று (ஜூலை 02) தாயார் சன்னதியில் மூலவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவர் ரங்கநாச்சியார் ஆகியோருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி காலை 6 மணிக்கு கருடமண்டபத்தில் இருந்து திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் புறப்பட்டு, காவிரி ஆற்றுக்கு சென்றனர். அங்கு கோயில் வழக்கப்படி கோயில் அதிகாரிகள், பணியாளர்கள், மிராசுதாரர்களுக்கு மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர், காவிரி ஆற்றில் 1 தங்ககுடம், 28 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது. அங்கிருந்து, காலை 6.30 மணிக்கு தங்கக்குடத்தில் உள்ள புனிதநீர் கோயில் யானை ஆண்டாள் மீது வைத்தும், வெள்ளிக்குடங்களை திருமஞ்சன ஊழியர்கள், ஸ்ரீபாதம் தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தோளில் சுமந்தும் அம்மா மண்டபம் சாலை, ராஜகோபுரம் வழியாக மேள, தாளங்கள் முழங்க தனிமனித இடைவெளியை கடைபிடித்து தாயார் சன்னதிக்கு காலை 9.30 மணிக்கு எடுத்து வந்தனர். அங்கு மூலவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் உற்சவர் ரங்கநாச்சியார் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.

முன்னதாக தாயார் சன்னதியில் மூலவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் உற்சவர் ரங்கநாச்சியார் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. சிறு பழுதுகள் செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டன.

இதையடுத்து, பாரம்பரிய முறையில் சந்தனம், சாம்பிராணி, அகில், வெட்டிவேர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட தைலம் ஸ்ரீதேவி, பூதேவி மீது பூசப்பட்டது.

ஜேஷ்டாபிஷேகத்தின் ஒரு பகுதியாக கருவறை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் வருடாந்திர பராமரிப்பு மற்றும் சிறப்பு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நாளை (ஜூலை 03) தாயார் சன்னதியில் திருப்பாவடை எனப்படும் பெரியதளிகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதனையொட்டி, தாயார் சன்னதி மூலஸ்தானத்திற்கு எதிரே தரையில் விரிக்கப்பட்ட துணியில் பெருமளவில் சாதம் பரப்பி வைக்கப்பட்டு, அதில் நெய், பலாச்சுளை, மாம்பழம், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பழவகைகள் கலந்து தாயாருக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்படும். இந்தாண்டு கரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதியில்லை.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் தாயார் ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி, காவிரி ஆற்றில் இருந்து தங்ககுடத்தில் புனித நீர் எடுக்கப்பட்டு, கோயில் யானை ஆண்டாள் மீது வைத்து ஊர்வலமாக தாயார் சன்னதிக்கு எடுத்து வரப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x