Published : 05 Jun 2014 12:00 AM
Last Updated : 05 Jun 2014 12:00 AM
பிரளயம் முடிந்து உலகில் மக்கள் பெருக ஆரம்பித்திருந்த காலம் அது. நோவாவும் அவருடைய சந்ததியினரும் உலகில் பரவியிருந்தார்கள். வேறு யாரும் இல்லை. கடவுள் நோவாவின் குடும்பத்தினரைத் தவிர மற்ற அனைவரையும் தண்ணீரினால் அழித்திருந்தார்.
எங்கும் ஒரே குடும்பம். ஒரே சந்ததி. அவர்கள் பேசும் மொழியும் ஒன்றுதான். அதைத் தவிர வேறு மொழிகளே அப்போது உலகில் இல்லை.
வாழ்க்கையின் அடிப்படை அம்சங்கள் நிறைவேறி ஓரளவுக்குப் பாதுகாப்பான சூழல் அமைந்த பிறகு சாகச ஆர்வம் தோன்றுவது இயற்கைதானே? நோவாவின் சந்ததியினருக்கும் அப்படித் தோன்றியது.
பல்வேறு இடங்களில் வசித்துவந்த மக்கள் பலர் ஒரு முறை சினயார் நாட்டில் சமவெளி ஒன்றில் கூடினார்கள். அவர்களில் ஒருவர், “நாம் நம்முடைய புகழை நிலைநாட்டுவதற்காக ஏதேனும் செய்தாக வேண்டும்” என்றார். அந்த யோசனை அனைவருக்கும் பிடித்திருந்தது.
“என்ன செய்யலாம் சொல்லுங் கள்” என்று கேட்டார் ஒருவர்.
பல விதமான யோசனைகள் வந்தன. மிகப் பெரிய கோபுரம் ஒன்றைக் கட்டுவது என்னும் யோசனையை ஒருவர் சொன்னார். மனித இனத்தின் புகழை நிரந்தரமாக உலகில் நிலைநிறுத்தக்கூடிய கோபுரமாக அது இருக்க வேண்டும் என்றார் இன்னொருவர்.
“நாம் சொர்க்கத்தைத் தொடும் அளவுக்கு ஒரு கோபுரத்தைக் கட்ட வேண்டும். அது நம்முடைய புகழை இனிவரும் தலைமுறைக்குச் சொல்ல வேண்டும்” என்றார் இன்னொருவர்.
அந்தத் திட்டத்தை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள்.
மண்ணைப் பிசைந்து கற்கள் அமைத்து அவற்றைக் கொண்டு கோபுரம் கட்டும் எண்ணம் ஏற்பட்டது. மண்ணினால் உருவாக்கிய கல் என்றால் உயரமாகக் கட்டும்போது இடிந்து விழும் என்பதால் கற்களை நெருப்பில் சுட்டுப் பதப்படுத்திக் கட்டும் யோசனை வந்தது.
சுட்ட கற்களை வைத்து மாபெரும் கோபுரம் கட்டும் பணி தொடங்கியது. கோபுரம் சொர்க்கத்தை எட்டினாலும் உறுதியாக இருக்க வேண்டும் என்பதால் மக்கள் அனைவரும் பார்த்துப் பார்த்து ஒவ்வொரு விஷயத்தையும் செய்தார்கள்.
“சொர்க்கத்தை எட்டும் கோபுரம் கட்டி முடிக்கும்போது நாம் கடவுளைப் போல ஆவோம்” என்றார் ஒருவர்.
“ஆம். நாம் கடவுளைப் போல ஆவோம்” என்று இன்னொருவர் ஆமோதித்தார்.
“நாம் கடவுளாகவே ஆவோம்” என்றார் இன்னொருவர்.
அந்தச் சொல்லே மயக்கம் தந்தது. அது தந்த உத்வேகத்துடன் முனைந்து தீவிரமாக உழைத்தார்கள்.
கடவுளாகும் ஆசையில் ஊறிய அவர்கள் மனம் நிஜமான கடவுளை மறந்தது. சுய பெருமைகளில் ஆழ்ந்தது. கோபுரம் கொஞ்சம் கொஞ்சமாக மேலெழும்பத் துவங்கியது. மேலே, மேலே என்று உயர்ந்தது.
பரமண்டலங்களில் இருக்கும் பிதா இதையெல்லாம் பார்த்துச் சிரித்துக்கொண்டார். மக்களின் கர்வத்தையும் இறுமாப்பையும் எண்ணிச் சிரித்தார்.
இந்தச் சாதனையின் விளைவு என்னவாக இருக்கும் என்று அவருக்குத் தெரியும். எதையும் தங்கள் முயற்சியினால் சாதித்துவிட முடியும் என்னும் எண்ணம் மனிதர்களுக்குள் வந்துவிடும். இறை சக்தி என்ற ஒன்று இருப்பதையே மறந்துவிடுவார்கள். எல்லாம் என்னாலே ஆனது என்னும் எண்ணம் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படும். தனி மனிதர்களின் கர்வமும் தனி மனித வழிபாடும் பெருகிவிடும்.
இந்த மனிதர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று இறைவன் நினைத்தார். கோபுரத்தை இடித்துத் தன் வலிமையைக் காட்ட அவர் விரும்பவில்லை. அவர்களிடையே தொடர்புக் கருவியாக இருந்த மொழியில் சில சலனங்களை ஏற்படுத்தினார். மொழிக்கு ஆதாரமான உணர்வுகளில் அவர் ஏற்படுத்திய சலனங்கள் வெவ்வேறு அதிர்வுகளாக வெளிப்பட்டன.
சொற்களின் மூலங்கள் மாறிப்போனதால் வெளிப்பாடுகளும் மாறின. சொற்கள் குழம்பின. புதிய சொற்கள் உருவாயின. புதிய ஒலிகள் பேசப்பட்டன.
ஒருவர் பேசுவது ஒருவருக்குப் புரியவில்லை. ஒவ்வொருவரின் பேச்சும் வெவ்வேறு மொழியாக மாறியது.
ஒவ்வொருவரும் இன்னொருவர் பேச்சை உளறல் என்றார்கள். ஏன் உளறுகிறாய் என்று பரஸ்பரம் கேட்டுக்கொண்டார்கள். அந்தக் கேள்வியும் புரிந்துகொள்ளப்படவில்லை.
தன்னைத் தவிர எல்லோருமே உளறுவதாக ஒவ்வொருவரும் நினைக்க ஆரம்பித்தார்கள்.
தொடர்பு அறுந்தது. உணர்வுகள் பரிமாறிக்கொள்ளப் படவில்லை. செய்திகள் புரியவில்லை. உறவுகள் குழம்பின. உளறல்கள் மட்டுமே அங்கு இருந்தன.
எங்கெங்கும் உளறல்கள். மாபெரும் குழப்பம்.
அப்போது ஒருவர் உயரமான ஒரு இடத்தின் மேல் ஏறி நின்று கத்தினார்: “நான் பேசுவது யாருக்கெல்லாம் புரிகிறதோ, அவர்களெல்லாம் இங்கே வாருங்கள்.”
அவர் சொல்வதைப் புரிந்துகொண்டவர்கள் அங்கே வந்தார்கள். அதே போல இன்னொருவர் கத்தினார். அவர் சொன்னதைப் புரிந்துகொண்டவர்கள் அவரிடம் போய் நின்றார்கள். இதேபோல மக்கள் தாங்கள் பேசும் மொழியின் அடிப்படையில் தனித் தனிக் குழுக்களாகப் பிரிந்தார்கள்.
ஒரு குழு இன்னொரு குழுவை அன்னியமாகப் பார்த்தது. ஒவ்வொரு குழுவும் தனக்கான மொழியில் பேசியபடி தனித்தனியே சென்றது. தான் பேசும் மொழியே சிறந்தது என்றும் மற்றவை எல்லாம் உளறல் என்றும் ஒவ்வொரு குழுவும் நினைத்தது.
மனிதர்கள் செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டுத் தனித்தனியாகப் பிரிந்து சென்றார்கள். கோபுரம் பாதியில் நின்றது.
உதடுகளிலிருந்து வெளிவரும் ஓசைகளுக்குப் பொருள் கொள்ள முடிந்தால் அது மொழி எனப்படுகிறது. பொருள் கொள்ள முடியாவிட்டால் உளறல் எனப்படுகிறது. பொருளற்ற ஓசைகளை ஹீப்ரூ மொழியில் பேபல் என்பார்கள்.
உளறல்களால் நின்றுபோன அந்தக் கோபுரம் உளறல் கோபுரம் (பேபல் டவர்) என்று அழைக்கப்பட்டது. மக்களுடைய அகந்தையின் சின்னமாய் அது அரைகுறையாய் நிற்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT