Published : 10 Dec 2015 12:00 PM
Last Updated : 10 Dec 2015 12:00 PM

சமணத் திருத்தலங்கள்: மனச்செருக்குகளைக் களையும் சோனாகிரி

பொன்னிற சிகரம் என்று பொருள்படும் சோனாகிரியில் பல வெண்ணிற ஆலயங்கள் அமைந்துள்ளன. இது மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜான்சியிலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பிறவிப் பிணியறுக்கும் பெருமலைகளில் ஒன்றான சோனாகிரி மலைப்பகுதி, 132 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. மலை மீது ஏற முன்னூறு படிகள் உள்ளன. மலையின் மீது ஐம்பத்தேழு சமண ஆலயங்களும் மலையின் அடிவாரத்தில் 31 ஆலயங்களும் இருக்கின்றன. அடிவாரத்திலுள்ள ஊர் சனாவல் என்பதாகும். இங்குள்ள கோயில்கள் கி.பி.ஒன்பது,பத்து நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை.

அமைதியான பரிசுத்தமான சுற்று சூழலில் இந்தக் கோயில்கள், காண்பவர்களின் மனதை ஈர்க்கின்றன. அங்கே சுதந்திரமாகத் திரிந்து ஆர்ப்பரிக்கும் மயில்கள் நெஞ்சை கொள்ளை கொள்கின்றன. முனிவர்களின் இருப்பிடமாகவும் தவ பூமியாகவும் விளங்கும் இவ்விடத்தில் நங்கனங்கா என்ற மன்னன் சமண அறத்தின்படி தன் வினைகளை ஒழித்து வீடுபேறை அடைந்ததாகக் கூறப்படுகிறது. பல முனிவர்கள் இவ்விடத்தில் வீடு பேறு பெற்றுள்ளனர். தீர்த்தங்கரப் பெருமான் சினவரன் தேவன் சிவகதி நாயகன் சந்திரப்பிரபு பகவானின் சமவசரண பேருரை பதினேழு முறை இங்கு நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது.

எட்டாவது தீர்த்தங்கரர் சந்திரபிரபு

இந்தக் கோயில்களில் ஐம்பத்தேழாம் எண்ணுடையக் கோயில் முக்கியமானது ஆகும்.இது மிகவும் எழிலானதும் கலையழகு உள்ளதுமானக் கோயிலாகும். விசாலமான மலையின் சமதளத்தில் இதனை ஸ்ரவேசன்,கனக்கேசன் என்பவர்கள் கட்டியுள்ளார்கள்

கோயிலின் மூலநாயகர் தீதறும் அறமுரைத்த எட்டாவது தீர்த்தங்கரர் சந்திரப்பிரபு ஆவார். பன்னிரண்டு அடி உயரத்தில் தியான நிலையில் வீற்றிருக்கிறார். இவ்வுருவத்தை வடித்தவர் இதனை உயிர்சிலையாகவே வடித்துள்ளார். பகவானின் உருவத்தைப் பார்த்ததுமே பக்தி பெருகும். இதன் அருகில் சீல வழி காட்டிய சீதள நாதரின் சிலையும் பச்சைமாமலை மாதவன் பாரீசநாதர் சிலையும் அமைந்துள்ளன. நம் மனச்செருக்குகளைக் களையும் மனத்தூய்மை கம்பம் 43 அடி உயரம் உள்ளது. கண்கவரும் விதமாகச் சமவசரணம் கட்டப்பட்டுள்ளது. அதில் கந்தக்குடி எனும் மேடையில் வீற்றிருக்கும் இறைவன், அறவுரை ஆற்றுவது போலவே இருக்கின்றது.

ஐம்பதொன்பதாவது கோயில் கும்பஜ்தார் கோயில் எனப்படுகிறது. இங்குள்ள கோபுரங்கள் அரைவட்டவடிவிலான கோபுரங்களால் கவர்ச்சியாகக் காணப்படுகின்றன. நான்கு மூலைகளிலும் அழகியக்கோபுரங்கள் நிற்கின்றன. பல சிறிய கோபுரங்களும் கோயிலுக்கு மெருகு ஏற்றுகின்றன.

ஏழை மாது கட்டிய கோவில்

அறுபதாவது கோயில் குறிப்பிடத்தக்கதாகும்.ஏழை மாது ஒருவர் கல் இயந்திரத்தால் மாவு அரைத்து அதில் கிடைத்த வருமானத்தில் தன் பக்தியின் வெளிப்பாடாக இக்கோவிலைக் கட்டியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள சம்மேதசிகரம் சமணர்களுக்கு அதிமுக்கியத்தவம் வாய்ந்த இடமாகும். இங்கு இருபது தீர்த்தங்கரர்கள் முக்தி அடைந்துள்ளனர். சோனாகிரி சிறிய சம்மேத சிகரம் என்று அழைக்கப்படுகிறது. மலையில் உள்ள ஒரு தேங்காய் வடிவக் குளம் நாரியல் குண்டம் எனப்படுகின்றது. இங்குள்ள பாஜனிசிலா எனும் பாறையைத் தட்டினால் இனிய ஓசை எழுகிறது.

சோனாகிரிக்கு வரும் பக்தர்கள் இறை அருளையும் மன அமைதியையும் ஒருசேரப் பெறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x