Published : 10 Dec 2015 12:04 PM
Last Updated : 10 Dec 2015 12:04 PM
சித்தர் எங்கே இருப்பார்?
அடர்ந்த காட்டில் அல்லது உயர்ந்த மலையில் அல்லது குறுகிய குகையில்...
சித்தர் எப்படி இருப்பார்?
நீண்ட காலத் தவத்தால், விரதத்தால் உடல் மெலிந்து மவுனத்தில் ஆழ்ந்து, உடல் முழுவதும் ரோமங்கள் வளர்ந்து, இருக்கும் இடத்தின் பெரும் பகுதியைப் புற்றுகள் சூழ அமர்ந்திருப்பார். நம்மில் பெரும்பாலானவர்களின் கற்பனை இப்படி இருக்கலாம். ஆனால் உண்மை அப்படியல்ல.
கண்ணுடையவர்கள் காண்கிறார்கள்
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு சித்தரின் வாழ்க்கை அன்றைய காலத்தைப் பிரதிபலிப்பதைப் போலவே நமது காலகட்டத்தின் சித்தர்கள் வாழ்க்கையும் நமது காலத்தையே பிரதிபலிக்கின்றன. சாதாரணமானவர்களிடமிருந்தே அசாதாரணமானவர்கள் உருவாகிறார்கள். கண்ணுள்ளவர்கள் - அகப்பார்வை உடையவர்கள் - அவர்களைக் கண்டடையும் பாக்கியம் பெறுகிறார்கள்.
அப்படிப்பட்ட அசாதாரணர் ஒருவரின் கதைதான் இது.
கோவிந்தசாமி எளிய குடும்பத்தில் பிறந்தவர். சிறிய வயதில் படிப்பு வராததால், குடும்பத்தில் கொஞ்சம் தள்ளிவைத்துப் பார்க்கப்பட்ட சிறுவன் அவர். ஒருகட்டத்தில் வீட்டைவிட்டு வெளியேறினார். பிழைப்புக்காகத் துணி வணிகத்தில் ஈடுபட்டார். உண்மையையும் நேர்மையையும் மட்டுமே வாழ்வியலாகக் கொண்டு வாழ்ந்து, பிற்காலத்தில் எல்லோரும் போற்றி வணங்கக்கூடிய தெய்வீக நிலையை அடைந்தார்.
திடீரென ஒரு நாள் கோவிந்தசாமி அசாதாரணர் ஆகிறார். எப்படி? அசாதாரணமான திறன்கள் அவரை வந்தடைகின்றனவா? இல்லை. அவர் தன்னை அறிகிறார். இந்தப் பிரபஞ்சத்தின் முன் தான் ஒன்றுமற்று இருப்பதை உணர்கிறார்; கூடவே, இந்தப் பிறப்பின் சூட்சுமத்தையும் உணர்கிறார். இருக்கும் கொஞ்ச நஞ்சத்தையும் உடனே துறக்கிறார். அவ்வளவுதான். அவரது கதை முடிந்தது.
இதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது என்கிறார்களா தொடர்ந்து படியுங்கள்!
கோவிந்தசாமியின் இளம்பருவம்
கோவிந்தசாமி அற்புதங்களை நிகழ்த்தியவரல்ல. சில அற்புதங்கள் அவரைச் சுற்றி நடந்திருக்கின்றன. கோவிந்தசாமி தன்னை மையப்படுத்தி ஒரு பீடத்தையும் அமைப்பையும் இயக்கத்தையும் உருவாக்கியவர் அல்ல. இந்த மண்ணில் தோன்றிய உண்மையான சித்தர்களும் ஞானிகளும் எதை நோக்கி நம்மை வழிநடத்தினார்களோ அதை நோக்கியே அவரும் சென்றார். தன்னை அறிந்துகொள்ள கோவிந்தசாமி தேர்ந்தெடுத்துக்கொண்ட வழி அது. நமக்குள் இருக்கும் நம்மைக் கண்டுகொள்ள நமக்கு அது ஒரு வழிகாட்டியாக அமைகிறது. அந்த வழி கொஞ்சம் எளிமையாகவும் நம்மோடு நெருக்கமானதாகவும் இருப்பதே அதன் சிறப்பு. ஏனென்றால், அவர் சென்ற வழியை நோக்கி அது நம்மை அழைக்கவில்லை. மாறாக, நமக்கான வழியை நாமே உருவாக்கிக்கொள்ள அது பெரிதும் உதவுகிறது.
சித்தர்களும் சுவாமிகளும் பெரும்பாலும் பின்னாளில் ஏதேனும் ஒரு பெயரால் அழைக்கப்படுவதே இயல்பு. ஆனால் கோவிந்தசாமியை அறிந்தவர்கள் எல்லோரும் அவரை வெறுமனே சாமி என்றே அழைத்தார்கள். இனி, நாமும் அப்படியே குறிப்பிடுவோம்.
சாமி பிறந்த ஊர் திருவையாறு. அப்பா பஞ்சநதம் பிள்ளை. அம்மா கிருஷ்ணவேணி அம்மாள். குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை சாமி. மூத்தவர் ஞானசுந்தரம். சாமியின் அப்பா சைவப் பிள்ளை. அம்மா இசை வேளாளர். வயல், வாய்க்கால் என்று கொஞ்சம் வசதியான குடும்பம் சாமியின் அப்பாவினுடையது. சாமியின் அப்பாவுக்கு விவசாயத்தைவிடவும் நாட்டமுள்ள இன்னொரு விஷயம் இருந்தது. அது, திருவையாறு ஐயாரப்பர் கோயில் சேவகம். கோயில் தர்மகர்த்தாவான அவர், நாளின் பெரும் பகுதியும் கோயிலிலேயே கிடந்தார். கிருஷ்ணவேணி அம்மாளின் உறவினர்கள் பலர் தேர்ந்த இசைக் கலைஞர்கள். அவரும் நன்றாகப் பாடக் கூடியவர். சாமி முறையாக சங்கீதம் கற்றவர் இல்லையென்றாலும், அவருடைய ரத்தத்திலேயே அது ஊறியிருந்தது. அதுபோலவே, சின்ன வயதிலேயே அப்பாவழியிலான இறையுணர்வும் அவருக்குள் கலந்துபோனது!
தித்தி தியாகராஜா
அப்பாவைப் போலவே சாமியும் சின்ன வயதில் வீட்டில், பள்ளிக்கூடத்தில் இருந்த நேரத்தைவிடவும் ஐயாரப்பர் கோயிலில் கிடந்த நேரம்தான் அதிகம். சாமிக்குப் படிப்பில் நாட்டம் இல்லை. பள்ளிக்கூடத்துக்குப் போக விருப்பம் இல்லை. வீட்டிலும் சொல்ல முடியாது. அம்மாவிடம் கண்டிப்பு அதிகம். அதேசமயம், அப்பா ஏதோ உணர்ந்துகொண்டவரைப் போல, சாமியின் போக்குக்குத் தடை விதிக்காதவராக இருந்தார். பிள்ளை பள்ளிக்கூடத்துக்குச் செல்லாமல், கோயிலுக்கு வந்து விளையாடிக்கொண்டிருந்ததை அப்பா தவறாகக் கொள்ளவில்லை. பள்ளிக்கூடம் போவதாகப் போக்குக் காட்டிவிட்டு, பனை நுங்கு வண்டி தேர் செய்து, ‘தித்தி தியாகராஜா... தித்தி தியாகராஜா..’ என்று விளையாடிக்கொண்டிருப்பார் சாமி. சாமியைக் கோயில் வளர்த்தெடுத்தது!
படிப்பு ஏறாத பிள்ளைக்கு வீட்டில் மதிப்பேது? அம்மாவிடம் நிறைய வாங்கிக் கட்டிக்கொண்டார் சாமி. அதேசமயம், சாமியின் அண்ணனுக்கு நல்ல மரியாதை. சாமிக்கு அம்மா மீது கொஞ்சம் வருத்தம்தான். ஆனால், எல்லாவற்றுக்கும் காரணம் தானே என்று நினைத்துக்கொண்டார் சாமி. விளையாட்டுப் புத்தி தன் எதிர்காலத்தை நாசமாக்கும் என்பதை உணர்ந்திருந்தாலும், அதற்காக என்றைக்குமே வருந்தியதில்லை. ஆனால், அம்மாவின் மனம் வாடிப்போக இந்தப் படிப்பார்வமின்மை காரணமாகிவிட்டதே என்பதை உணர்ந்து நிறையவே வருந்தியிருக்கிறார். கிருஷ்ணவேணி அம்மாள் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
அவருடைய கடைசி நாட்களில்தான், அம்மா தன்னிடம் பல சமயங்களில் கோபத்தை வெளிப்படுத்தியதெல்லாம்கூடத் தன் மீது வைத்திருந்த அளவுகடந்த பிரியத்தால்தான் என்பதை சாமி உணர்ந்தார். சாவு நெருங்கிவிட்ட நிலையில், சாமியைத் தன் சகோதரி மகள் அபிதகுசலாம்பாளிடம் கையளித்தார் கிருஷ்ணவேணி அம்மாள். இந்த அக்காவைத்தான் தன்னுடைய இன்னொரு தாய் என்று சொல்வார் சாமி. அந்த அக்காவுக்குத் தன் தம்பி மீது அத்தனை பாசம், அத்தனை பரிவு!
சின்ன வயதிலேயே சாமி ருசித்துச் சாப்பிடுவார். வெல்லம் கலந்த பால் சாதம், மணத்தக்காளி வத்தல் குழம்பு ஆகியவை சாமிக்கு ரொம்பவும் பிடித்தமானவை. சாமியின் அக்கா மிகவும் நன்றாகச் சமைப்பார். ஆனால், சமையலில் சாமிக்குப் பிடித்தமானது கும்புலிங்கத்தின் சமையல். சாமி வீட்டு சமையல்காரராக இருந்தவர் கும்புலிங்கம். பின்னாளில், யார் சமையலேனும் அபாரமாக இருந்தால், அரிதினும் அரிதாக சாமி பாராட்டுவார்: “கும்புலிங்கம் சமையல் மாதிரி இருக்கு!”
கிருஷ்ணவேணி அம்மாளின் மரணத்துக்குப் பிறகு, பஞ்சநதம் பிள்ளை இன்னொரு திருமணம் செய்துகொண்டார். சாமியின் சிறு வயது வாழ்க்கை சற்றுச் சிக்கலாக மாறியது அப்போதுதான். நாட்கள் வளர வளர பேதங்களும், பொறாமையும் விஷமாய் வளர்ந்து, ஒருகட்டத்தில் வீட்டை விட்டே வெளியேறினார் சாமி.
(அடுத்த வாரம் தொடரும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT