Published : 17 Dec 2015 01:04 PM
Last Updated : 17 Dec 2015 01:04 PM
பவுத்தம் தழைக்கும் பூமியாக சிக்கிம் கருதப்படுகிறது. அந்த மலையக மாநிலத்தில் இயற்கையாகவே நிறைய ஏரிகள் அமைந்துள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை பவுத்த மதத்துடன் தொடர்புள்ளவை. அவையனைத்தும் இன்றளவும் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளப்படுவதற்கு அதுகூட ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம்.
3 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது கெச்சொபால்ரி ஏரி. இந்தப் புனித ஏரி மேற்கு சிக்கிம் மாவட்டத்தில் உள்ளது. இதன் சிறப்பு என்னவெனில், சுற்றிலும் மரங்கள் இருந்தபோதிலும் ஒரு இலைகூட நிர்மலமான ஏரியின் பரப்பின்மீது காணக்கிடைக்காது என்பதாகும். புள்ளினங்கள் அதை உடனே அகற்றிவிடும். கெச்சொபால்ரி ஏரியின் தோற்றம் குறித்து பவுத்தம் சார்ந்த இரண்டு நம்பிக்கைகள் உலவுகின்றன. இந்த ஏரி முதலில் அமைந்திருந்த பகுதியில் மிகவும் மாசுபட்டதாக இருந்ததென்று கூறப்படுகிறது. ஏரியின் தேவியான தாரா ஜெட்ஸன் டோல்மா, தன்னை வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு ஒரு லாமாவிடம் கேட்டுக்கொண்டார். அதன்படி, அந்த லாமாவும் குடுவை ஒன்றில் ஏரியின் நீரைச் சிறிது நிரப்பிக்கொண்டார். தாராவின் வழிநடத்தல்படி கெச்சொபால்ரி மலைப்பகுதிக்கு வந்து சேர்ந்தார். மலையின் அடிவாரத்தில் அழகிய ஓரிடத்தை தாரா தேவி தேர்வு செய்தார். அவ்விடத்தில் பூஜை செய்த லாமா அங்குள்ள பள்ளமொன்றில் தான் கொண்டுவந்த நீரை விட, அது மெள்ள, மெள்ள அதிகரித்து, தாரா தேவியின் புதிய வசிப்பிடமாக அழகே வடிவாக உருவெடுத்தது.
தாரா தேவியின் மடியில் ஏரி
பல்லாண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி மேய்ச்சல் நிலமாகத் திகழ்ந்ததாம். உடம்பில் பட்டால் எரிச்சலையும் அரிப்பையும் ஏற்படுத்தும் களைச்செடி அங்கு மண்டிக்கிடந்தது. திடீரென்று ஒருநாள் வானிலிருந்து சங்குகள் மழையெனப் பொழிந்தன. பின்னர் நிலம் அதிர மண்ணிலிருந்து நீர் பொங்கியெழுந்து அங்கு நிரம்பியது. உயரத்திலிருந்து பார்த்தால், சுற்றியுள்ள மலைப்பகுதியானது தாரா தேவி, ஒரு காலை மடித்தும் மறுகாலை நீட்டியும் அமர்ந்திருப்பது போலத் போன்றும். சிக்கிமில் வசிக்கும் இந்து நேப்பாளியரும் இந்தப் புனித ஏரிக்கு வந்து பூஜை செய்து வழிபடுகின்றனர். அங்கு ஒன்றிரண்டு நேபாளப் பூசாரிகள் இதற்கெனத் தயாராக உள்ளனர்.
சிக்கிமின் வடக்கு மாவட்டத் தலைநகர் கெய்ஜிங்/ கியால்ஸிங் பகுதியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் 1,820 மீட்டர் (5,970 அடி) உயரத்தில் இந்த ஏரி அமைந்துள்ளது.
ஏரியின் நுழைவாயில் அருகிலிருக்கும் சிறிய கடையில் சிக்கிமின் பவுத்தப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் கைவினைப்பொருட்கள் கிடைக்கின்றன. அங்கிருந்து அழகிய வனத்தினூடே பதினைந்து நிமிடங்கள் நடந்தால் ஏரியின் துறையை அடையலாம். வழியில் புத்த லாமாக்களின் சிறிய குடிலொன்றையும் காணலாம். காலணிகளை அங்கு கழற்றிவிட்டு மரப்பாலத்தில் சிறிது தொலைவு நடந்து நீர்ப்பரப்பின் அருகில் நிற்க ஏதுவாக மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இலையும் உதிரவில்லை இறக்கையும் படபடக்கவில்லை
கெச்சொபால்ரி ஏரி மிகப் புனிதமானது என்பதால் இங்கு இதர சுற்றுலா நடவடிக்கைகளுக்கு முற்றிலுமாகத் தடையுள்ளது. ‘விரும்பியதை வழங்கும் ஏரி’ (Wishing Lake) என்ற நம்பிக்கை உள்ளதால் அங்கு பூஜை மட்டும் செய்ய அனுமதியுண்டு.
ஏரியிலிருந்து சிறிய ஓடையொன்று ஆண்டு முழுவதும் நீரை வெளியே எடுத்துச்செல்கிறது. இமயமலைப் பகுதியில் வலசை செல்லும் பறவைகள் இளைப்பாறிச் செல்வதற்கு உகந்த இடமாக கெச்சொபால்ரி ஏரி திகழ்கிறது.
ஆண்டுதோறும் 10,000க்கும் அதிகமானச் சுற்றுலாப் பயணியரும் பக்தர்களும் கெச்சொபால்ரி ஏரிக்கு வருகை தருகின்றனர். நேப்பாளம், பூடான் ஆகிய வெளிநாடுகளிலிருந்தும் பவுத்த பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர்.
மக்கள் பெருக்கத்தால் சற்றே நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது இந்த ஏரி. எனினும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் இருப்பது ஒரு நல்ல அம்சம். புனித ஏரி என்பதாலும், இதில் சுற்றுலா நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளதாலும் பத்திரமாகவே உள்ளது.
நாங்கள் அங்கு சென்றிருந்தபோது இலையேதும் விழுமா, புள்ளினங்கள் அதைக் கொத்தி அகற்றிடுமா என்று கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தோம். இலையும் உதிரவில்லை, இறக்கையும் படபடக்கவில்லை. நம் அதிர்ஷ்டம் அவ்வளவுதான் என்று ஏரித் தண்ணியைத் தலையில் தெளித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT