Published : 17 Dec 2015 11:39 AM
Last Updated : 17 Dec 2015 11:39 AM
வீட்டிலிருந்து வெளியேறிய கோவிந்தசாமி, நிறைய சில்லரை வேலைகள் செய்திருக்கிறார். கொஞ்சம் காலமாவது நிலைத்திருந்தது, ரேஷன் கடை வேலைதான். ஆன்மிகத்தில் பெரிய தேடல்கள் ஏதும் அந்நாட்களில் இல்லாவிட்டாலும், வேலை தவிர, சாமிக்கு இருந்த இன்னொரு பிரதான விஷயம் கோயிலுக்குச் செல்வதுதான். கிடைத்த சொற்ப சம்பளத்தில், தன்னுடைய செலவுகள் போக மீதிப் பணத்தைச் சேமித்துவைத்தார். வருஷா வருஷம் பங்குனி உத்திரம் அன்று சாமி, தனது வீட்டில் நடத்தும் அன்னம்பாலித்தலுக்கு அரிசி மூட்டை வாங்கப் பயன்பட்டது அந்தச் சேமிப்புப் பணம்.
பின்னாளில் முருகனுக்குத் தனிக் கோயில், ஆசிரமம் உருவாக்கி வழிபாடுகளை நடத்திய நாட்களிலும், அன்னம் பாலித்தலை ஒரு முக்கிய நோக்கமாகக்கொண்டிருந்தார் சாமி. “உள்ளிருக்கும் இறைக்கு நைவேத்தியம்” என்று அதை மகேஸ்வர பூஜையாகக் குறிப்பிடுவார் சாமி. ஆசிரமத்தில் பூஜை புனஸ்காரங்கள் நடக்கும்போது, மகேஸ்வர பூஜைக்கு முக்கிய இடம் உண்டு.
சென்னைக்கு வந்த சாமி
சாமியின் நண்பர் அப்பன் ராவ் துணி வியாபாரம் தொடங்க நினைத்தார். சுயநலம் இல்லாதவராகவும் கணக்கு வழக்கில் நேர்மையானவராகவும் இருந்த சாமியைத் தன்னுடைய வியாபாரத்தில் கூட்டுக்கு அழைத்தார் நண்பர். ஒரு இளைஞனாக வாழ்க்கையை எதிர்கொண்டிருந்த சாமிக்கு அப்போது ஏகப்பட்ட ஆர்வங்கள். ரேஷன் கடை வேலையில் இருந்தபோதே ஜோதிடத்திலும் சித்த வைத்தியத்திலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. நண்பருடன் கைகோத்தார்.
புதிய துணி கொள்முதலுக்காக சாமி அடிக்கடி சென்னை செல்ல வேண்டியிருந்தது. ஊரிலிருந்து சென்னை செல்பவர்களுக்கு அங்கு பல இடங்களைப் போய் பார்க்க ஆசை இருப்பது இயல்பு. சாமிக்கும் அப்படி ஆர்வம் இருந்தது. அது, சென்னையின் தொன்மையான கோயில்களைப் பார்க்கும் ஆர்வம். அப்படிச் சென்றபோது, திருவொற்றியூர் அவரை அதிகம் ஈர்த்தது. அங்கு சென்ற பின், பட்டினத்தார் கோயில் இருந்த கடற்கரை அவரை இழுத்தது.
காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் சுவேதாரண்யர். வணிகர். பெரும் தனவந்தர். எல்லாம் கூடிய வாழ்க்கை. ஆனால், குழந்தை இல்லை. ஒரு நாள் வேறொரு தம்பதியின் வழியே இறைவன் குழந்தை வடிவில் சுவேதாரண்யரை வந்தடைகிறான். அவருடைய குழந்தையாகவே வளர்கிறான். தேர்ந்த வணிகனாகி, சுவேதாரண்யரின் செழிப்புக்கு மேலும் செல்வம் சேர்க்கக் கடல் கடந்து வாணிபம் செய்கிறான். சுவேதாரண்யருக்கு இந்த வாழ்க்கையை உணர்த்தும் நாள் வருகிறது. மகன் வடிவில் இருந்த இறைவன் அந்த நாளில் மாயமாகிறான். ஆறு வார்த்தைகளை சுவேதாரண்யருக்குச் செய்தியாக எழுதிவைத்துச் செல்கிறான்: “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே!”
இந்த ஆறு வார்த்தைகள் சுவேதாரண்யரின் வாழ்வையே புரட்டிப்போட்டன. அவர் அவ்வளவையும் துறந்தார். பட்டினத்தார் ஆனார். கட்டிய கோவணத்தோடு ஊர் ஊராகத் திரிந்தார். முக்திக்கு இறைவன் அவரை அழைத்த இடம் திருவொற்றியூர். ஆயிரம் வருஷங்களுக்குப் பின், இன்றைக்கு சென்னையின் ஒரு பகுதியாக இருக்கும் அதே திருவொற்றியூர்தான். சென்னையின் நீண்ட கடற்கரையில் உள்ள ஏராளமான கோயில்களில் பட்டினத்தார் சமாதியடைந்த கோயிலும் ஒன்று. 18 சித்தர்களில் ஒருவரான பட்டினத்தாரின் வாழ்க்கை சொல்லும் முக்கியமான செய்தி, தன்னையறிந்து இப்பிரஞ்சத்துடன் ஒன்றுகலத்தல். நமக்கென்று தனி வாழ்க்கை என்று ஒன்றுமில்லை; எது ஒன்றுமே இறுதி வரை வராது என்பதே அவர் பெற்ற ஞானம்.
இருவருமே காவிரிக்கரையில் பிறந்தவர்கள் என்பதைத் தாண்டி சுவேதாரண்யருக்குக்கும் சாமிக்கும் இடையே இன்னொரு முக்கியமான தொடர்பும் உண்டு. எந்தத் திருவொற்றியூர் கடற்கரையில் பட்டினத்தார் இந்தப் பிரபஞ்சத்துடன் ஒன்றுகலந்தாரோ, அதே திருவொற்றியூர் கடற்கரையில்தான் சாமி தன்னை அறிந்தார். தன் பிறப்பின் நோக்கம் உணர்ந்தார்.
தன்னை அறிந்தார்
எப்போதும்போல, திருவொற்றியூர் கடற்கரைக்குச் சென்ற சாமியிடம், அங்கு வடக்கிலிருந்து இந்தி பேசும் ஒரு சாமியார் வந்திருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். சாமி விசாரித்துக்கொண்டு சென்றால், அந்த சாமியார் கோயிலில் இல்லை. கோயிலுக்கு அருகில் இருக்கும் குடிசைப் பகுதியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சாமியாரைத் தேடிச் செல்கிறார் சாமி. ஏராளமான குடிசைகள். சாமியார் ஒரு குடிசையில் இருக்கிறார். சாமியை உள்ளே அழைக்கிறார். “எனக்கு டீ வாங்கி வருகிறாயா?” என்று கேட்கிறார். சாமி ஓடிப்போய் டீ வாங்கிவந்து தருகிறார். சாமியார், “நீ தியானம் கற்றுக்கொள்கிறாயா?” என்கிறார். சாமி பதில் சொல்லவில்லை. அப்படியே சாமியாரை நிலைகொண்டு பார்த்து நிற்கிறார். சாமியார் தன் விரல்களால் சாமியின் நெற்றிப் பொட்டைத் தொடுகிறார்: “நீயாக எதையும் தேடாதே; தானாக எல்லாம் வந்தடையும்”.
அது தொடங்கி அப்புறம் நடந்தது எதுவும் தனக்கு நினைவில் இல்லை என்று பின்னாளில் நினைவுகூர்ந்தார் சாமி. ஆனால், தன்னைத் தனக்கு உணர்த்திவிட்டதை மட்டும் உணர்ந்திருக்கிறார் சாமி. ஆழ்நிலை தியானத்திலிருந்து சாமி வெளியே வந்தபோது அந்தச் சாமியார் அங்கே இல்லை. குடிசையும் இல்லை. விசாரித்தபோது, அப்படி ஒருவர் அங்கே வரவே இல்லை என்கிறார்கள் எல்லோரும். சாமிக்கு எல்லாம் புரிந்துவிட்டது!
(அடுத்த வாரம் பார்ப்போம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT