Published : 10 Dec 2015 11:22 AM
Last Updated : 10 Dec 2015 11:22 AM
பிருகு முனிவர் தன்னை மதிக்கவில்லை என்பதற்காக, பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாளைக் காலால் உதைத்தார். பெருமாளோ பதறி எழுந்து, என்மேல் கால்பட்டதால், தங்கள் பாதம் வலிக்குமே என்று சொல்லிப் பிடித்துவிடவா என்று கேட்டார். அவரது கால் பெருமாள் மார்பில் என்றும் இருக்கும் வத்ஸ மருவில் பட்டது. வத்ஸமே தாயார்தானே. அதனால், பிருகு முனிவரைத் தண்டிக்காமல் கால் பிடித்துவிடுவதாகச் சொல்வதா என்று கூறிய தாயார், தானும் பிருகுவுக்கு பெருமாள் காட்டிய அன்பு அளவிற்குக் காதல் பெற வேண்டும் என்று விரும்பினாள். பூலோகம் வந்தாள். பத்மம் என்ற தாமரைப் பூவில் குழந்தையாகத் தவழ்ந்து, பத்மாவதியாக, ஆகாசராஜனின் வளர்ப்பு மகனாள்.
பெருமாளின் அன்னையாக வகுளா தேவி
கண்ணனின் தாய் யசோதா, கண்ணனை வளர்த்து ஆளாக்கி இருந்தாலும், கண்ணனின் திருமணக் காட்சியைக் காண முடியவில்லை. அதனால் வருத்தம் அடைந்த அன்னைக்கு, கலியுகத்தில் தனது கல்யாணக் கோலத்தைக் காட்டுவேன் என கண்ணன் கூறியிருந்தார்.
கலியுகத்தில் வகுளா தேவியாகப் பிறந்த யசோதா, திருப்பதி திருமலையில் வாழ்ந்து வந்தாள். அப்போது இளைய காளை போல் அழகிய தோற்றத்துடன், கண்ணன் தானே மறு அவதாரம் கொண்டு ஸ்ரீநிவாசனாக வந்தார். வகுளா தேவியின் வளர்ப்பு மகனானார், அழகிய ஸ்ரீநிவாசன்.
காதலாகி கசிந்துருகிய ஸ்ரீநிவாசன்
அழகிய ஸ்ரீநிவாசன் தாயுடன் குடிலில் தங்கினார். அவருக்குத் தேவையான உணவை ருசிருசியாய்த் தயாரிப்பதும், அவரது பசி அறிந்து உணவளிப்பதும் அன்னையின் கடமையானது. திருமலையில் இருந்து இறங்கி வந்து வீட்டிற்குத் தேவையான பொருளை வாங்கி வருவது அவரது வேலையானது.
இந்த நிலையில் ஓரு நாள் ஸ்ரீநிவாசன் தனது வெண்குதிரையில் மலை இறங்கி வரும்பொழுது, அங்கே ஆகாசராஜனின் வளர்ப்பு மகள் தனது தோழிகளுடன் பூப்பந்து ஆடிக் கொண்டிருந்தார்.
தெய்வங்கள் மனித உரு ஏற்கும்பொழுது, மனிதர்களைப் போலவே நடந்துகொள்வார்கள் என்பதை ராம, கிருஷ்ண அவதாரங்கள் நிகழ்த்திக் காட்டியுள்ளன.
அவ்வாறே, ஸ்ரீநிவாசனும், பத்மாவதி யாரெனத் தேடி அலைந்தார். அவர் மன்னனின் மகள் என்று அறிந்தார். இல்லம் வந்தார். அன்னையிடம் தன் எண்ணம் சொன்னார். ராஜா மகளை மணக்க முடியுமா எனத் தாயிடம், குடிலில் இருக்கும் தன் நிலையைக் கூறி வருந்தினார். காதலாகி கண்ணீர் மல்க நின்ற புதல்வனைக் கண்ட தாயின் மனம் துடித்தது.
குறத்தியாக மாறிய வகுளாதேவி
அன்னை மகனின் மனம் அறிந்து கொண்டாள். பத்மாவதியின் மன நிலை அறிந்து வருவதாகச் சொல்லி, குறி சொல்லும் குறத்தியாக மாறினாள் வகுளா தேவி. குறத்தியின் கைக்கோல், கூடை, சோழி என அனைத்துமாக மாறிய ஸ்ரீநிவாசன் அன்னையுடனேயே சென்றார்.
அங்கே அரண்மனையில் பத்மாவதிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. ஊன், உறக்கமின்றி, உடல் கொதிக்கக் கிடந்தாள் பத்மாவதி. இந்தச் சரியான தருணத்தில் குறி சொல்லச் சென்றதால் அரண்மனையில் அனுமதிக்கப்பட்டாள் குறத்தி வகுளா தேவி. பத்மாவதியும் ஸ்ரீநிவாசனை எண்ணியே துயறுற்று இருக்கிறாள் என்பதை அறிந்தாள் அன்னை. மன்னனிடம் அவளது காதல் நிலையை எடுத்துச் சொன்னாள். மன்னனும், மகளுக்குக் காதல் மணம் செய்விப்பதாக உறுதி கூறினான்.
மணமகன் ஆனார் ஸ்ரீநிவாசன்
ஸ்ரீநிவாசனின் அழகையும், நற்குணத்தையும் தெரிந்து கொண்ட மன்னன், பத்மாவதிக்கும், ஸ்ரீநிவாசனுக்கும் நிச்சயதார்த்தம் செய்வித்து, திருமண நாளையும் குறித்தார். கல்யாணத்தைத் தன் பங்குக்குச் சிறப்பாகச் செய்து கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் ஸ்ரீநிவாசன். குபேரனிடம் கடன் வாங்கினார். இன்றளவும் அதற்கு வட்டி கட்டிவருவதாகவும், அசலைக் கலியுக முடிவில் திரும்ப அளிப்பதாகவும் திருவேங்கடமுடையான் உறுதி அளித்துள்ளார் என்கிறது வேங்கடேசப் புராணச் செய்தி.
திருச்சானூரில் தாயார் தனித்திருப்பது ஏன்?
ஸ்ரீநிவாச பெருமாளின் திருமணமும் கோலாகாலமாக நடந்தேறியது. சீர் வரிசைகளை இரு வீட்டாரும் சிறப்பாகச் செய்திருந்தனர். மணவீட்டார் செய்திருந்த சீர் வரிசையில் கருவேப்பிலை இல்லை. அக்குறை நீங்க வேண்டும் என எண்ணிய தாயார் தானே சென்று பெற்று வருவதாகக் கூறிக் கிளம்பினாராம். பாதுகாப்பாக இருட்டுவதற்குள் வந்துவிடுமாறும், இல்லையென்றால் அங்கேயே தங்கி விடுமாறும் பெருமாள் பத்மாவதியிடம் கூறியிருந்தார். பத்மாவதி திரும்புவதற்கு முன் இருட்டிவிட்டது. எனவே திருச்சானூரில் தங்கிவிட்டார். திருச்சானூரில் பத்மாவதி தாயார் தனித்திருப்பதற்கு இதுவே காரணம் என்கிறது புராணம்.
ஸ்ரீநிவாசனின் அன்பு
ஸ்ரீநிவாச பெருமாள் இன்றும் தினமும், பத்மாவதி தாயாரை காண்பதற்காக, திருமலையில் இருந்து ஒவ்வொரு நாளும் இரவு இறங்கி வருவதாகக் கூறுகின்றன புராணச் செய்திகள். ஸ்ரீநிவாசனுக்கு இணையாக அனைத்து வைபவங்களும் தாயார் பத்மாவதிக்கும் நிகழ்கின்றன என்பது இன்றைய நிதர்சனம்.
மகாலட்சுமியைப் போற்றும் நூல்கள்
இந்திரன் கூறிய மகாலட்சுமி அஷ்டகம், ஆதிசங்கர பகவத் பாதாள் இயற்றிய கனகதாராஸ்தவம், சுவாமி வேதாந்த தேசிகர் இயற்றிய தயா சதகம், திருப்பாவையில் நப்பின்னையைக் குறிக்கும் பாசுரங்கள் ஆகியவை மகாலட்சுமி தாயாரை போற்றுவனவற்றுள் பிரபலமான நூல்கள்.
சிம்ம வாகனத்தில் தாயார்
திருச்சானூர் தாயார் பிரம்மோற்சவம் டிசம்பர் மாதம் 7-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை திருச்சானூரில் நடைபெற உள்ளது. ஸ்ரீநிவாச பெருமாளுக்கு நிகழ்த்துவது போலவே தாயாருக்கும் பிரம்மோற்சவத்தை திருமலா திருப்பதி தேவஸ்தானம் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் நடத்துகிறது. இந்த உற்சவம் தாயாரின் ஜென்ம நட்சத்திரத்தை முன்னிட்டு அன்றைய தினம் நிறைவு பெறும் வகையில் அமைக்கப்படும். டிசம்பர் 10-ம் தேதியான இன்று சிம்ம வாகனத்தில் தாயார் காட்சி தருவார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT