Published : 17 Dec 2015 12:39 PM
Last Updated : 17 Dec 2015 12:39 PM
கடுமையான வெயிலில் தகித்துக் கொண்டிருந்தது பாலைவனம். நின்று இளைப்பாறுவதற்கும் வசதியில்லாத அந்த நிலப்பரப்பில் சுமக்க முடியாத சுமைகளுடன் ஒரு மூதாட்டி நடந்து கொண்டிருந்தாள்.
“எல்லாம் போச்சு... நாசமாய்ப் போச்சு. மூதாதையர்களின் வழிமுறைகள் எல்லாம் தகர்ந்து மண்ணோடு மண்ணாய் போச்சு நமது நம்பிக்கைகளைக் காப்பாற்றிக்கொள்ள இங்கிருந்து சென்றுவிடுவதுதான் ஒரே வழி. அப்படி என்னதான் மந்திரமிருக்கிறதோ அந்த அப்துல்லாஹ்வின் மகனிடம்! கேட்பவரெல்லாம் உடனே மாறிவிடுகிறார்களே அந்த முஹம்மதுவின் பேச்சைக் கேட்டு!”
பாலை வெப்பத்தைவிட அவளுடைய வார்த்தைகள் நெருப்புக் கங்குகள் போல உஷ்ணத்துடன் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன.
அந்த நேரத்தில் அவ்வழியாய் வந்த அந்த வழிப்போக்கர், அம்மா என்று அன்பொழுக அழைத்தார்.
“இந்த கடும் வெய்யிலில் இவ்வளவு சுமைகளுடன் எங்கே செல்கிறீர்கள்? கொடுங்கள் நான் சுமந்துவருகின்றேன்!”
“நீ நல்லாயிருக்கணும் தம்பி!” சுமைகளை மாற்றிவிட்ட அந்த மூதாட்டி, “எல்லாம் அந்த முஹம்மதுவால் வந்த வினை. எல்லாரும் அந்தப் புதிய மார்க்கத்துக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள்” என்றவாறு நடந்தாள். சுமைகளைச் சுமந்தவாறு அந்த வழிப்போக்கர் அவளைப் பின்தொடர்ந்து சென்றார்.
தனது கோபத்தை முன்னைவிட அதிகமாய்த் தூற்றலாய் வடித்தவாறே மூதாட்டி முன்னே செல்ல, அத்தனையையும் கேட்டவாறே வழிப்போக்கர் சுமைகளுடன் மூதாட்டியைப் பின்தொடர்ந்து சென்றார்.
அந்த மூதாட்டி, தனது நெஞ்சில் எவ்வளவு கோபத்தை தேக்கி வைத்திருந்தாளோ அத்தனையையும் கொட்டித் தீர்க்கவும் ஊரின் எல்லை நெருங்கவும் சரியாக இருந்தது.
“போதும் தம்பி. இதோ இப்படி இந்த மரத்தின் நிழலில் சுமைகளை இறக்கி வை! ரொம்பவும் நல்லவனாய் இருக்கிறாய் தம்பி. உன் உதவிக்கு நன்றி. அந்த முஹம்மதுவிடம் மட்டும் எச்சரிக்கையாய் நடந்து கொள்!” என்று அறிவுறுத்தினாள்.
புன்முறுவலுடன் விடைபெற்றார் அந்த வழிப்போக்கர்.
திரும்பி நடந்துகொண்டிருந்த ஒரு சில நொடிகளில் மீண்டும் அந்த மூதாட்டியிடமிருந்து அழைப்பு வர திரும்பவும் அவளிடம் சென்றார்.
“தம்பி நான் எவ்வளவு நன்றி கெட்டவள் பார். உன்னுடைய பெயரைக்கூட கேட்க மறந்துவிட்டேனே! உன் பெயர் என்னப்பா?”
முஹம்மது என்று மாறாத புன்முறுவலுடன் அந்த வழிப்போக்கர் சொன்னார்.
இத்தனை நேரமும் தூற்றலுக்கும் நிந்தனைக்கும் ஆளானவருடைய பெயரைக் கேட்டதும் அதிர்ச்சியுற்ற அந்த பெண் நம்ப முடியாமல் திரும்பவும் கேட்டாள்: “அப்படியானால் உனது அப்பாவின் பெயர்?”
“அப்துல்லாஹ். அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது!”
மாறாத புன்னகையுடன் திரும்பி நடக்கலானார் நபிகள் நாயகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT