Published : 21 Apr 2021 09:44 AM
Last Updated : 21 Apr 2021 09:44 AM
மகாவிஷ்ணுவின் அவதாரங்களிலேயே ஒரு மனிதனுக்கு உண்டான அத்தனை குணங்களுடனும் ஒரு மனிதனானவன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரண புருஷனாகவும் அமைந்த அவதாரமாகப் போற்றப்படுகிறது ஸ்ரீராமாவதாரம்!
லட்சோப லட்ச ஆண்டுகளுக்கு முன்னதாக அரசனாக பிறந்தார். சாதாரண மனிதனாக கஷ்டப்பட்டார். ஒவ்வொரு கஷ்டத்திலும் உயர்ந்த நிலையில் நடந்து கொள்வது எப்படி என்று வாழ்ந்தே காட்டினார் என்று ராமாயணம் விவரிக்கிறது.
ஸ்ரீராமர், தன் மனைவியை மட்டும் விரும்பவில்லை. தர்மத்தை விரும்பினார். தர்மத்தின்படி வாழ்ந்தார். தர்மத்தின் உருவமாகவே திகழ்ந்தார். அதனால்தான் தர்ம சங்கடங்கள் வரும்போதெல்லாம் ராமாயணத்தில் ராமன் என்ன செய்தார் என்றிருப்பதை அறிந்து கொண்டாலே உணர்ந்து வாழ்ந்தாலே நம் வாழ்க்கை செம்மையாகிவிடும்!
பெற்ற தாய் தந்தையிடம், எப்படி நடந்து கொள்ள வேண்டும்? ராமபிரான் வாழ்ந்து காட்டினார். சகோதரர்களிடம் எப்படி அன்பும் பிரியமுமாக இருக்கவேண்டும்? அப்படித்தான் வாழ்ந்து உணர்த்தினார். ஒரு அரசன் என்பவன், ஆளுமை மிக்கவன் எப்படி இருக்கவேண்டும்? அதற்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தார். மனைவியானவள் கணவரிடமும் கணவன் என்பவன் மனைவியிடமும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு சீதையும் ராமனுமே சாட்சி. நண்பர்களிடம் எப்படிப் பழக வேண்டும், நண்பர்கள் எப்படி இருக்க வேண்டும் என்கிற அனைத்துக்கும் விடை இருக்கிறது ராமாயணத்தில்!
கம்பர் பெருமானும் தியாகராஜரும் ராம பக்தர்களாகத் திகழ்ந்தார்கள். ஷீர்டி சாயிபாபாவும் திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமார் ராம நாமம் சொல்லி பக்தர்களை வழிநடத்தினார்கள். புராணத்தில் அவ்வளவு பராக்கிரமங்கள் கொண்டிருந்தாலும் அனுமன் தன்னை கடவுளாக பாவிக்கவே இல்லை. ராமரின் பக்தனாகவே தன்னை நினைத்து, பணிவும் பக்தியும் காட்டினான்.
சென்னை செங்கல்பட்டுக்கு அருகில் உள்ளது மதுராந்தகம். 1884-ம் வருடம். ஆங்கிலேயர் தமிழகத்தை ஆட்சி செய்த காலம். இங்கே இருக்கிற ஏரி நீர் நிரம்பியிருந்தது. ஏரியைப் பார்வையிட அப்போதைய ஆட்சித் தலைவர் ப்ரைஸ் எனும் ஆங்கிலேயேர் வந்தார். அவர் ஏரியையும் கோயிலையும் பார்வையிட்டார். அப்போது அடித்துப் பெய்தது பெருமழை. விடாது பெய்தது மழை.
ஏரி உடைப்பு எடுத்துக் கொண்டு ஊர் அழியுமோ என்று மக்கள் பயந்து நடுங்கினார்கள். அன்று நள்ளிரவு... ஆட்சித் தலைவர் தங்குமிடத்தில் இருந்து கிளம்பினார். ஏரியின் நிலையைப் பார்க்கச் சென்றார். மழையில் ஏரி நிரம்பி எந்நேரமும் ஆபத்து வரும் எனும் நிலை. நாடு விட்டு நாடு வந்து இங்கே இறந்து போய்விடுவோமோ என்று கலங்கி மருகினார். அருகில் இருந்த கோயிலில் உள்ள ராமபிரானை வேண்டிக்கொண்டார். “இறைவா… எல்லோரையும் காப்பாற்று! ” என்று வேண்டினார். அப்போது... ஏரிக்கரையில் ராமரும் லக்ஷ்மனரும் வில்லேந்தி காவலுக்கு நிற்பதான காட்சி ஆட்சித்தலைவருக்கு தோன்றியது.
ஏரி முழுவதுமாக நிரம்பியிருந்தது. ஆனால் உடைப்பு ஏற்படவில்லை. மழையும் நின்றது. மகிழ்ந்து நெகிழ்ந்தார் ஆட்சித்தலைவர். நெக்குருகிப் போனவர், ஆலயம் வந்தார். ஸ்ரீராமபிரானை வணங்கினார். கோயிலுக்கு திருப்பணிகள் மேற்கொண்டார். இன்றைக்கும் மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில் இதுகுறித்த கல்வெட்டுகளைப் பார்க்கலாம். இதனால்தான் ஏரி காத்த ராமர் என்றே ராமருக்கு திருநாமம் அமைந்தது.
மனித வாழ்வில், எப்போதெல்லாம் ஆபத்து நேர்கிறதோ, துக்கம் சூழ்ந்துகொள்கிறதோ, வேதனையும் அவமானமுமாகக் கலங்கினாலோ அங்கே ராமபிரானை மனதார வேண்டிக்கொண்டால் போதும்... நம்மையும் நம் குடும்பத்தையும் காத்தருளுவார் ஸ்ரீராமர்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT