Last Updated : 03 Dec, 2015 05:20 PM

 

Published : 03 Dec 2015 05:20 PM
Last Updated : 03 Dec 2015 05:20 PM

திருத்தலம் அறிமுகம்: பதஞ்சலி சூத்திரம் உருவான தலம்

தாருகாவனத்து ரிஷிகளின் ஆணவத்தை அடக்கிய சிவபெருமான் ஆனந்தத் தாண்டவமாடினார். அண்ட பகிரண்டங்கள் எல்லாம் குலுங்க ஆடிய அந்நாட்டியத்தைப் பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன் ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.

ஆதிசேஷனுக்கும் அந்த ஆனந்த நடனத்தைக் காணும் ஆசை வந்தது. அதை உணர்ந்த மகாவிஷ்ணு சொன்னார்: “பூலோகத்தில் தில்லை வனம் என்றொரு புனிதத் தலம் இருக்கிறது. உன்னைப் போலவே சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவம் காண அங்கே வியாக்ரபாதர் என்கிற புலிக்கால் முனிவர் தவம் செய்துகொண்டிருக்கிறார். நீ புனிதமான அத்திலி மகரிஷிக்கும், அனுசூயாவுக்கும் மகனாகப் பிறக்க வேண்டும். அப்போது வ்யாக்ரபாத முனிவருடன் சேர்ந்து நீயும் ஆனந்தத் தாண்டவம் காணும் வாய்ப்பைப் பெறுவாய்”.

மகாவிஷ்ணுவின் ஆலோசனைப்படியே பூவுலகில் அத்திரி மகரிஷிக்கும் அனுசூயைக்கும் பிள்ளையாகப் பாதி மனித உருவிலும் பாதி பாம்பின் உருவத்தோடும், பிலத்துவாரம் வழியே வந்து விழுந்தார் ஆதிசேஷன். புனிதமான மகரிஷிகளின் பாதத்தில் அஞ்சலிபூர்வமாக அவர் விழுந்ததால் பதஞ்சலி என்று பெயர் பெற்றார்.

அனந்தன் வழிபட்ட ஈஸ்வரன்

தில்லை எனப்படும் புனிதமான இடத்தில் நாகக்குளம் அருகில் ஓர் லிங்கத்தை ஏற்படுத்தி பதஞ்சலியும் வ்யாக்ரபாதரும் வழிபட்டுவந்தனர். அனந்தன் வழிபட்ட ஈஸ்வரன் என்பதால் இவர் திருநாமம் அனந்தீஸ்வரன் ஆனது.

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தைவிட அனந்தீஸ்வரன் கோயில் பழமையானது. ஆதிகோயில் என்று இது வழங்கப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆடிய தாண்டவத்துக்குப் பல காலத்துக்கு முன்னரே இந்த அனந்தீஸ்வரன் கோயிலில் பதஞ்சலி முனிவருக்காகவும் (அனந்தன்) வ்யாக்ரபாத முனிவருக்காகவும் இறைவன் திருநடனமாடி மகிழ்வித்தார் என்பது இந்த ஆலயத்துக்கான சிறப்பு.

நின்ற கோலத்தில் பதஞ்சலி முனிவர்

ஆலயத்துக்கு ராஜகோபுரம் இல்லை. நுழைவு வாயிலை ஒட்டித் திருக்குளம் இருக்கிறது. இடது பக்கம் விநாயகர் சந்நிதி. மகாமண்டபத்திற்கு முன் கொடிமரம். பலிபீடம். பிரகாரத்தில் பதஞ்சலி முனிவர் தனிச் சந்நிதியில் நின்ற கோலத்தில் கைகூப்பிய வண்ணம் காட்சி தருகிறார். பக்கத்தில் சந்திர சூரியர்கள் காட்சி தருகிறார்கள். கன்னி மூலையில் கணபதி சந்நிதியும், தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தியும், மேற்கே சுப்பிரமணியர் சந்நிதியும் இருக்கின்றன.

வடக்கு நோக்கி துர்க்கை அம்மன் சந்நிதி இருக்கிறது. வடகிழக்கு மூலையில் நவக்கிரக சந்நிதி. மகாமண்டபம் சற்று உயரமாக கற்களால் ஆன படிக்கட்டுகளுடன் அமைந்திருக்கிறது.

அம்பாள் பெயர் சௌந்திரநாயகி அம்மன். அர்த்த மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால் சிறிய வடிவில் மூலஸ்தானத்தில் அனந்தீஸ்வரர் காட்சி தருகிறார்.

பதஞ்சலி முனிவர் இத்திருத்தலத்தில் இருந்தபடியேதான் சகல சாத்திர சாரமான பதஞ்சலி சூத்திரத்தை இயற்றி அருளினார். ஆதிகோயிலான இத்தலத்து உச்சிகால பூஜை சிறப்பு மிகுந்தது. காரணம் அப்போது சித்தர்களும், முனிவர்களும் இங்கு வந்து ஈசனை வழிபடுவதாக ஐதீகம்.

நாகதோஷ நிவர்த்திக்கு இத்தலம் சிறப்பு மிகுந்தது. சிதம்பரம் மேலக் கோபுரத்திலிருந்து மேற்கே செல்லும் காசுக்கடைத் தெருவின் தொடக்கத்தில் கிழக்கு நோக்கி இத்திருக்கோயில் அமைந்துள்ளது. தில்லைத் திருத்தலத்தை வழிபடுபவர்கள் அவகாசமிருப்பின் இத்தலத்தையும் வணங்கிச் செல்லலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x