Last Updated : 09 Apr, 2021 10:19 AM

 

Published : 09 Apr 2021 10:19 AM
Last Updated : 09 Apr 2021 10:19 AM

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்; தேரோட்டம் ரத்து

தஞ்சாவூர்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.

இக்கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரைப் பெருந்திருவிழா 18 நாள்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2020 -ம் ஆண்டில் கரோனா பொது முடக்கம் காரணமாக இக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா நடைபெறவில்லை. இதனால், தேரோட்டமும் நடத்தப்படவில்லை.

நிகழாண்டு இக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. முன்னதாக பஞ்ச மூர்த்தி சுவாமிகள் புறப்பாடு பிரகாரத்தில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கொடி மரத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மங்கள வாத்தியம் முழங்கக் கொடி ஏற்றப்பட்டது.

இதில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் ச.கிருஷ்ணன், கோயில் செயல் அலுவலர் எஸ்.மாதவன் மற்றும் பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கரோனா தொற்றுப் பரவல் இரண்டாவது அலை நிலவுவதால், சனிக்கிழமை முதல் கோயில் விழாக்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. என்றாலும், நிபந்தனைகளுக்கு உட்பட்டு கோயிலுக்குள் புறப்பாடு உள்ளிட்ட வைபவங்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, கோயில் வளாகத்துக்குள் புறப்பாடு உள்ளிட்ட வைபவங்கள் நடைபெறும் எனக் கோயில் அலுவலர்கள் தெரிவித்தனர். ஆனால் ஏப். 23-ம் தேதி நடைபெறுவதாக இருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு பிறகு 2015-ம் ஆண்டு முதல் தேரோட்டம் நடைபெற்று வந்தது. தஞ்சாவூரில் இத்தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் பெரும் திருவிழாவாக இருந்து வந்தது. இந்நிலையில், கரோனா பரவல் காரணமாகத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகத் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x