Last Updated : 29 Mar, 2021 10:11 AM

2  

Published : 29 Mar 2021 10:11 AM
Last Updated : 29 Mar 2021 10:11 AM

குல தெய்வ வழிபாடு செய்தால் சகல தெய்வங்களின் அருள் நிச்சயம்! 

குலதெய்வத்தை வணங்கி வழிபட்டு வருவோம். நம் குலத்தை, கண்ணைப் போல் காத்தருள்வார்கள் குலதெய்வங்கள். நம் வழக்கப்படி, குலதெய்வத்துக்குப் படையலிட்டுப் பிரார்த்தனைகள் செய்வோம். சகல பிரச்சினைகளில் இருந்தும் நிவாரணம் தந்தருளுவார்கள்.
குலதெய்வ வழிபாடு செய்தால்தான் அனைத்து தெய்வங்களின் ஆசியும் அருளும் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி!

எந்த தெய்வத்தை வழிபட்டாலும் முதலில் பிள்ளையாரை வழிபட்டுவிட்டுத்தான் அடுத்தடுத்து தெய்வங்களை வழிபடுவோம். அப்படித்தான் எந்தத் தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும் முதலில் நாம் அனைவரும் வழிபட வேண்டியது குலதெய்வத்தைத்தான் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இஷ்ட தெய்வம் என்பதோ பரிகார தெய்வங்கள் என்பதோ நமக்குப் பலன்களைக் கொடுக்க வேண்டுமென்றால் நாம் மறக்காமல் குலதெய்வ வழிபாட்டைச் செய்து கொண்டே இருக்கவேண்டும். குலதெய்வ வழிபாடு செய்யச் செய்யத்தான், இஷ்ட தெய்வங்களோ பரிகார தெய்வங்களோ நமக்கு நன்மைகளை வழங்குவார்கள்.

குலதெய்வம் என்பது புராணத் தொடர்பு கொண்ட தெய்வங்களாக பெரும்பாலும் அமைவதில்லை. குலதெய்வம் என்பது நம்மைப் போலவே வாழ்ந்த நம்முடைய முன்னோர்களாகவும் நம் பூர்வீகத்தைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்களையே நம் குலசாமிகளாக போற்றி வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு தருணத்திலும் மகான்களும் சித்தபுருஷர்களும் வலியுறுத்திக் கொண்டே வந்திருக்கிறார்கள். மதுரை வீரன், கருப்பண்ணசாமி, குழுமாயி அம்மன், செல்லியம்மன் முதலான தெய்வங்களெல்லாம் எப்போதோ வாழ்ந்தவர்கள் என்றும் மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குலதெய்வத்தை தினமும் வணங்கவேண்டும். குலதெய்வக் கோயிலுக்கு மாதத்துக்கு ஒருமுறையேனும் சென்று தரிசிக்க வேண்டும். அமாவாசை, பெளர்ணமி முதலான நாட்களில் மறக்காமல் குலதெய்வ வழிபாடு செய்யவேண்டும்.

குலதெய்வக் கோயிலுக்கு நம்மால் முடிந்த அளவுக்கு ஏதேனும் திருப்பணிகளைச் செய்யவேண்டும். கோயிலை தூய்மைப்படுத்துதல், தண்ணீர் டேங்க் அமைத்துக் கொடுத்தல், சந்நிதிகள் புதுப்பிக்க உதவுதல், மரக்கன்றுகள் நடுதல், ஸ்தல விருட்சங்களை அமைத்தல் முதலான விஷயங்களைச் செய்யலாம்.

குலதெய்வக் கோயிலுக்கு எண்ணெய், திரி முதலானவற்றை வழங்கலாம். திருவிழா உத்ஸவத்தின் போது சுவாமி திருவீதியுலா வருவதற்கு வசதியாக, உரிய வாகனங்களைச் செய்து கொடுக்கலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

நம் வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும் முதலில் குலதெய்வத்திடம் சொல்லி வழிபடுவதை வழக்கமாக் கொள்ளவேண்டும். குலதெய்வத்துக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதை முறையே செய்து வரவேண்டும்.

குலதெய்வத்தை வணங்கி வழிபட்டு வருவோம். நம் குலத்தை, கண்ணைப் போல் காத்தருள்வார்கள் குலதெய்வங்கள். நம் வழக்கப்படி, குலதெய்வத்துக்குப் படையலிட்டுப் பிரார்த்தனைகள் செய்வோம். சகல பிரச்சினைகளில் இருந்தும் நிவாரணம் தந்தருளுவார்கள்.
குலதெய்வ வழிபாடு செய்தால்தான் அனைத்து தெய்வங்களின் ஆசியும் அருளும் நமக்குக் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x