Published : 27 Mar 2021 09:23 AM
Last Updated : 27 Mar 2021 09:23 AM
ம்முடைய பிரார்த்தனைகளை குலதெய்வத்திடம் வைத்து வேண்டிக்கொள்ள வேண்டும். நம் வேண்டுதல்களை குலதெய்வம் நிறைவேற்றித் தரும். குலத்தைக் காக்கும். சகல செளபாக்கியங்களுடன் நம்மை வாழவைக்கும் என்பது உறுதி. 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பங்குனி உத்திரம். இந்த நன்னாளில் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வோம். படையலிடுவோம். அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவோம். நம் அல்லல்கள் மொத்தமும் காணாமல் போகும்!
ஒருவரின் பிறவியில் மிக முக்கியமான வழிபாடு என்பது குலதெய்வ வழிபாடாகத்தான் இருக்கும். நம் குலம் வாழையடி வாழையாக, வம்சம் வம்சமாக, பரம்பரை பரம்பரையாக ஒரு தெய்வத்தை வழிபட்டுக் கொண்டே வருவதுதான் குலதெய்வம். தலைமுறைகள் கடந்தும் நடந்துகொண்டிருக்கிற வழிபாடுதான் குலதெய்வ வழிபாடு என்பது!
குலதெய்வம் என்பது நம் முன்னோர்கள் வணங்கி வழிபட்டு வந்த தெய்வமாக இருக்கலாம். அல்லது நம் முன்னோர்களையே தெய்வமாக பரம்பரை பரம்பரையாக வணங்கி வழிபட்டு வந்ததாகவும் இருக்கலாம்.
நம்முடைய துக்கங்களையும் கவலைகளையும் தெய்வத்திடம் சொல்லி முறையிடுவோம். ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி?’ என்று கண்ணீர் விடுவோம். ஆனால், நாம் நம் கஷ்டங்களையும் நஷ்டங்களையும் சொல்லாமலேயே நமக்கு அருள் வழங்கி நம்மை மீட்டெடுப்பது குலதெய்வம்தான். நம் கண்ணீரையும் தோல்விகளையும் துடைப்பதற்கும் மாற்றுவதற்கும் ஓடோடி வந்து அபயக்கரம் கொடுப்பதுதான் குலதெய்வம் என்றெல்லாம் போற்றுகின்றனர் ஆச்சார்யர்கள்.
உங்களின் குலதெய்வக் கோயிலுக்குச் செல்வதையும் குலதெய்வத்தை ஆராதித்து வணங்குவதையும் ஒருபோதும் விட்டுவிடக்கூடாது. மாதம் ஒருமுறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ விடுமுறை காலங்களிலோ அல்லது வருடத்துக்கு ஒருமுறையேனும் குலதெய்வ வழிபாட்டைச் செய்யவேண்டும்.
கோயில் பூர்வீக கிராமத்தில் இருக்கலாம். நாம் எங்கோ வாழ்ந்து வரலாம். அப்படியிருக்க மாதம் சம்பளம் வந்ததும் குலதெய்வத்துக்கு என்று ஒருதொகையை தனியே வைத்துவிடுவது உத்தமம். அல்லது மாதந்தோறும் கோயிலுக்கு நன்கொடை அனுப்பி வைக்கலாம். குலதெய்வத்தை குளிரப் பண்ணினால்தான் நாமும் நம் சந்ததியினரும் சிறப்புற வாழமுடியும். தடையில்லாமல், ஒவ்வொரு தலைமுறைக்கும் வாரிசுகள் பிறப்பதும் வளர்ப்பதும் நிகழும் என்றெல்லாம் விவரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
வீட்டில் இருந்துகொண்டே வீட்டில் இருந்தபடியே நாம் வம்சம் வம்சமாக குலதெய்வ வழிபாட்டைச் செய்யலாம். ஏதேனும் ஒரு கிழமையை தேர்வு செய்துகொண்டு அந்த நாளில், நம்முடைய முன்னோர்களின் வழக்கப்படி வழிபாடுகளை மேற்கொள்ளவேண்டும்.
முக்கியமாக, பங்குனி பெளர்ணமியும் உத்திரமும் இணைந்த அற்புதமான நாள் குலதெய்வ வழிபாட்டுக்கு ரொம்பவே உன்னதமான நாள். இந்த நாளில், நம் வீட்டைச் சுத்தப்படுத்தி, குலதெய்வப் படங்களுக்கு மாலைகளிட்டு அலங்கரித்து, இனிப்பு மற்றும் உணவுடன் படையலிட வேண்டும்.
குலதெய்வப் படங்கள் இல்லையென்றாலும் வீட்டில் இருக்கும் சுவாமிப் படங்களையே குலதெய்வமாக பாவித்து, மலர்கள் கொண்டு அலங்கரித்து படையலிட்டு குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து வணங்கவேண்டும். வழிபடவேண்டும். நம்முடைய பிரார்த்தனைகளை குலதெய்வத்திடம் வைத்து வேண்டிக்கொள்ள வேண்டும். நம் வேண்டுதல்களை குலதெய்வம் நிறைவேற்றித் தரும். குலத்தைக் காக்கும். சகல செளபாக்கியங்களுடன் நம்மை வாழவைக்கும் என்பது உறுதி.
28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பங்குனி உத்திரம். இந்த நன்னாளில் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வோம். படையலிடுவோம். அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவோம். நம் அல்லல்கள் மொத்தமும் காணாமல் போகும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT