Published : 05 Nov 2015 11:27 AM
Last Updated : 05 Nov 2015 11:27 AM
தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள். தீபாவளியன்று வரிசையாக விளக்கேற்றி வைப்பதை ஒட்டி இந்தப் பெயர் வழங்கப்படுகிறது. எண்ணெய் குளியல், புத்தாடை அணிவது, தீபங்களை ஏற்றிவைப்பது ஆகியவற்றுடன் தீபாவளியன்று பல்வேறு பூஜைகளும் நடத்தப்படுகின்றன. விடியற்காலையில் தீபாவளிபூஜை, பிறகு கேதார கெளரி விரதம், இரவு குபேர பூஜை எனக் கொண்டாட்டங்கள் நாள் முழுவதும் வரிசை கட்டி நிற்கின்றன.
தீபாவளி பூஜை
பூமியில் பிறப்பதால் மக்கள் அனைவரும் பூமி புத்திரர்கள். நரகாசுரனை வதம் செய்த நாளைக் கொண்டாடச் சொல்லும் பூமித்தாயின் வேண்டுகோளை நிறைவேற்றவே நாம் தீபாவளியைக் கொண்டாடுகிறோம்.
எப்படிக் கொண்டாடுவது?
விடியற்காலை பிரம்ம முகூர்த்தமான காலை மூன்றரை மணிக்குக் கண் விழிக்க வேண்டும். உடனடியாக சுவாமி விளக்கு ஏற்ற வேண்டும். ஒரு சரம் வெடியைக் கொளுத்திப்போட வேண்டும்.
குளிக்க வெந்நீர் போட வேண்டும். வெந்நீர் சுடுவதற்குள், தேவையான அளவு நல்லெண்ணையை இலுப்பைச் சட்டியில் ஊற்றி அடுப்பில் ஏற்ற வேண்டும். எண்ணெய் நன்றாகச் சுட்டதும், அதில் ஒரு துண்டு இஞ்சியுடன் தலா ஒரு ஸ்பூன் சீரகம், மிளகு போட்டுத் தாளிக்க வேண்டும். அடுப்பில் இருந்து இறக்கி ஆற விட வேண்டும்.
எண்ணெய் ஆறுவதற்குள், ஒரு தட்டில் இனிப்பு வகைகள், கார வகை பட்சணங்கள், தீபாவளி மருந்து, உரித்த வாழைப்பழம் நான்கு ஆகியவற்றைத் தயாராக வைக்க வேண்டும். மணைப்பலகையில், வீட்டுப் பெரியவரின் ஆடைகளை அடியில் வைத்து, அதன் மேல் வயதுவாரியாகப் பெரியவர் முதல் சிறியவர் வரை உள்ள அனைவரின் புத்தாடைகளையும்அடுக்க வேண்டும். அருகிலேயே பட்டாசுகளையும் அடுக்கலாம்.
மற்றொரு மணைப் பலகையில் கோலமிட்டுத் தயாராக வைக்க வேண்டும். இந்தமனையில் அமர்ந்து தாய் முதலில் தானே எண்ணெயைத் தலைக்குத் தேய்த்துக்கொண்டு,வெந்நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும். தாய், தன் தலைப்பிள்ளையை முதலில் கோலமிட்ட மணையில் உட்கார வைத்து, உள்ளங்கையில் ஆறிய நல்லெண்ணையை மிளகு, சீரகத்துடன் எடுத்து உச்சந்தலையில், கெளரி கல்யாண வைபோகமே என்று பாடியபடி தேய்க்க வேண்டும். அதனையடுத்துத் தலை முழுவதும் எண்ணெயைத் தேய்க்கலாம். நல்லெண்ணையில் போட்டுப் பொறித்த இஞ்சியைத் தின்னக் கொடுக்கலாம்.
குளித்த பின் நன்கு காய்ந்த சாதாராண ஆடைகளை உடுத்திக்கொள்ள வேண்டும். குளித்துத் தயாராக வந்துள்ள பிள்ளைக்குத் தாய் முதலில் இனிப்பு கொடுக்க வேண்டும். அடுத்துக் கார பட்சணம், தீபாவளி மருந்து, வாழைப்பழம் ஆகியவற்றை, இந்த வரிசைப்படி கொடுத்த பின், பிள்ளையின் புத்தாடைகளைத் தன் கையால் எடுத்து இறைவனைப் பிரார்த்தித்து, பின் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்திக் கொடுக்க வேண்டும். புத்தாடை உடுத்தி, இறைவனை வழிபட்ட பின்தான் பட்டாசைத் தொட வேண்டும்.
இது போல் வீட்டில் உள்ள எல்லோரும் செய்துகொள்ள வேண்டும். தீபாவளி அன்று எண்ணெயில் லட்சுமியும், சீயக்காயில் விஷ்ணுவும், வெந்நீரில் கங்கையும் வாசம் செய்வதாக நம்பிக்கை உள்ளது இவை உடலை நனைக்கும்போது, பாவம் போய்ப் புண்ணியம் சேரும் என்பது நம்பிக்கை.
இந்தப் புண்ணியப் பலன் முழுமையாகக் கிடைக்க வேண்டுமானால் தானம் செய்ய வேண்டும். ஏழை, எளியோரைத் தேடிச் சென்று இனிப்புகளை வழங்கலாம். பசுவுக்கு அகத்திக் கீரை மற்றும் இனிப்புகளைக் கொடுக்கலாம். வீட்டில் வேலை செய்பவர்களின் குழந்தைகளுக்குப் பட்டாசும் பட்சணமும் கொடுக்க வேண்டும்.
தீபாவளியைக் கொண்டாடக் காரணமாக அமைந்த அந்த நீல வண்ணக் கண்ணன் அனைவரின் வாழ்வையும் வண்ணமயமாய் ஆக்குவான் என்பது நம்பிக்கை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT