Published : 20 Mar 2021 09:26 AM
Last Updated : 20 Mar 2021 09:26 AM
சக்தி வழிபாடு என்பதே நம் வாழ்வை வளமாக்குவதற்கும் மேன்மைப்படுத்தி செம்மையுடன் வாழவைப்பதற்கும்தான் என்று போற்றுகின்றனர் பக்தர்கள். சக்தி இல்லாமல் இந்தப் பிரபஞ்சமே இல்லை. சிவத்துக்கே சக்தியாகத் திகழ்கிறாள் பராசக்தி. அதனால்தான் அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகி என்று கொண்டாடி வழிபடுகிறோம்.
அப்படியான சக்திதேவியானவள், பலப்பல வடிவங்களில், வெவ்வேறு திருநாமங்களில் ஒவ்வொரு ஊரிலும் குடிகொண்டு அருள்பாலித்து வருகிறாள். அப்படியான தெய்வங்களில், நம்மை ஆட்கொண்டு ஆட்சி செய்பவள்தான் சமயபுரம் மாரியம்மன்.
அகிலத்து மக்கள் அனைவருக்கும் தாயெனத் திகழ்பவள் சமயபுரம் ஸ்ரீமாரியம்மன். தீராத வியாதிகளையெல்லாம் தீர்த்து வைப்பவள் அன்னை. உடல் நோய்களோடு உள்ளத்து நோய்களையும் தீர்த்து வைக்கும் பரோபகாரி என்றும் பாசக்காரி என்றும் மாரியம்மனைப் போற்றுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.
சக்தி பீடங்களுக்கெல்லாம் தலைவியாகத் திகழ்பவள் காஞ்சி ஸ்ரீகாமாட்சி என்றால், மாரியம்மன்களுக்கெல்லாம் தலைவியாகத் திகழ்பவள் சமயபுரத்தாள்.
படித்தவர்-படிக்காதவர், ஜாதி மதம், பணக்காரர் -ஏழை என்ற பாகுபாடுகள் ஏதுமின்றி அன்றாடம் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளும் கருணைக்கடலென அற்புதமாகக் காட்சி தருகிறாள் சமயபுர நாயகி.
திருச்சிக்கு அருகில் உள்ளது சமயபுரம். ஒருமுறை இவளின் சந்நிதியில் வந்து நின்று, நம் மனக்குறைகளையெல்லாம் மாரியம்மனிடம் முறையிட்டு வேண்டிக்கொண்டால் போதும்... நம் துக்கங்களையெல்லாம் போக்கி அருளுவாள் என்கின்றனர் பக்தர்கள்.
பங்குனி மாதத்தில், சமயபுரம் வந்து மாரியம்மனை தரிசித்துப் பிரார்த்தனை செய்வது இன்னும் விசேஷமானது என்றும் மும்மடங்கு பலன்களை வழங்கக் கூடியது என்றும் சொல்கிறார்கள். நம் சங்கடங்களைத் தீர்க்கும் சமயபுரத்தாளின் கோயிலில் பங்குனி மாதக் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் உத்ஸவம் தொடங்கும். அதையடுத்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த ஒப்பற்ற விழாவின் எட்டாவது நாளன்று அம்பிகையை, இளநீர் வடிவத்தில் (ஆவாஹனம் செய்து) ஊர்மக்கள் தங்களது வீடுகளில் வழிபாடு செய்வார்கள். பங்குனி மாதம் முழுவதுமே எப்போது வேண்டுமானாலும் நம் வீட்டில் விளக்கேற்றி, அம்மனுக்கு இளநீர் நைவேத்தியம் செய்யலாம். அருகில் உள்ள ஏதேனும் ஒரு அம்மன் கோயிலுக்குச் சென்று, இளநீர் அபிஷேகம் செய்யலாம்.
மங்கலம் பொங்கும் பங்குனி மாதத்தில், ஏதேனும் ஒருநாளில், திருச்சி சமயபுரத்தாளை கண்ணாரத் தரிசிப்போம். மனதார வழிபடுவோம். முடிந்தால், அவள் மனம் குளிரும்படி, புடவை வாங்கி சார்த்துவோம். செளபாக்கியங்கள் மொத்தமும் தருவாள் தேவி. சங்கடங்களையும் துக்கங்களையும் போக்கி அருளுவாள் மாரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT