Last Updated : 12 Nov, 2015 11:59 AM

 

Published : 12 Nov 2015 11:59 AM
Last Updated : 12 Nov 2015 11:59 AM

நபிகள் வாழ்வில்: ஒளியிலே அடைக்கலம்!

ஒரு முறை அண்ணல் நபியின் துணைவியார் ஆயிஷா அம்மையார் கேட்கிறார்: “இறைவனின் திருத்தூதரே! உஹத் நாளைவிட மிகவும் நெருக்கடியான நாளொன்றைத் தாங்கள் சந்தித்திருக்கிறீர்களா?”

உஹத் போர்க்களம் முஸ்லிம்களின் வாழ்வாதாரத்துக்கு உயிர், உடமைகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அறைகூவலாக அமைந்த ஒரு யுத்தக்களம். அதில் நபிகளார் படுகாயமுற்றார். அவரின் திருமுகம் குருதிமயமானது. பல்லொன்றும் உடைந்து போனது. எதிரிகளின் அம்பில் ஒன்று நபிகளாரின் தலைக்கவசத்தையும் துளைத்துச் சென்றது.

அத்தகைய பேராபத்து மிக்க போர்க்களத்தைவிட கொடிய அனுபவம் உண்டாவென்பதை அறிவதே ஆயிஷா அம்மையாரின் ஆவலாக இருந்தது.

நபிகளின் பதில்

“ஆம், உஹதைவிட கொடிய நாளொன்று எதிர்ப்படவே செய்தது ஆயிஷா. அது தாயிப்!”

மக்காவிலிருந்து 80 கி.மீ. தொலைவில் அமைந்திருந்த மலைவாசத்தலம் தாயிப். 10 ஆண்டுகள் மக்காவில் போதனை செய்தும் அதை யாரும் ஏற்காததால் நபிகளார் இன்னொரு களத்தை தேர்வு செய்த இடம் அது.

நபிகளார் தாயிப் நகரின் சகீப் கோத்திரத்து பெருந் தலைவர்களை சந்திக்கத் திட்டமிட்டு அவர்களை அணுகவும் செய்தார். தமது போதனைகளை அவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவர்களில் ஒருவர் சொன்னார்: “உம்மை விட்டால் இறைவனுக்கு வேறு யாரும் தூதராகக் கிடைக்கவில்லையோ?” அடுத்தவரோ, “நீர் உண்மையிலேயே இறைத்தூதராக இருப்பின் எனக்கு உம்மோடு பேசத் தகுதியில்லை! அப்படி இல்லையென்றால் என்னோடு பேச உமக்குத் தகுதி இல்லை!” என்றார் கிண்டலுடன். மூன்றாவது நபரோ இவர்களுக்குச் சற்றும் சளைத்தவராக இல்லை. நபியை இறைத்தூதராக ஏற்றுக் கொள்வதைவிட கஅபாவின் திரைச்சீலையை கிழித்தெறிந்துவிடுவது உத்தமம் என்றார்.

நபிகளாரை அவமானப்படுத்தியதோடு, அவர்மீது வன்முறையாளர்களையும் ஏவிவிட்டார்கள். கேலி, கிண்டல், கூச்சல் ஆர்ப்பாட்டங்களோடு வெறி கொண்ட அந்தக் கூட்டம் நபிகளாரை தாயிப் நகரின் தெருக்களில் ஓடவிட்டார்கள்.

பகைவரையும் மன்னித்த நபிகள்

இந்தச் சம்பவத்தை ஆயிஷா அம்மையாரிடம் விளக்கிக் கொண்டிருந்த நபிகளார், “அந்தச் சூழலில் நான் எங்கே சென்று தப்பித்துக்கொள்வது என்று திசை தெரியாமல் ஊருக்கு வெளியே இருந்த ஒரு திராட்சைத் தோப்புக்குள் தஞ்சம் புக வேண்டி வந்தது”என்றார்.

கல்லடியால் உடல் வலிக்க, சொல்லடியால் மனம் அதைவிட வலிக்க நபிகளாரின் இரு கரங்களும் வானத்தை நோக்கி விரிந்தன.

“ஓ! இறைவா!! எனது பலவீனத்தை, நாதியற்ற நிலையை, மக்கள் முன் எனக்குள்ள இழிநிலையை உன்னிடமே நான் முறையிடுகிறேன். நீயே எனது எஜமானன். என்னை யாருடைய கையில் நீ ஒப்படைக்கப் போகிறாய்? அதெற்கெல்லாம் நான் கவலைப்படவில்லை. நீ மட்டும் என்னிடம் கோபம் கொண்டுவிடாதே! உனது உதவியை அகன்றதொரு பாதையாக மாற்றிவிடு! உன் பேரருள் பிழம்பின் ஒளியிலேயே நான் அடைக்கலம் தேடுகிறேன். அதன் மூலமே அனைத்து இருள்களிலிருந்தும் ஒளி கிட்டுகிறது. அதன் மூலமே இம்மை, மறுமை அம்சங்கள் யாவும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. உனது கோபத்தை என் மீது இறக்கிவிடாதே! உன் சோதனை என்னைப் பீடிக்கச் செய்துவிடாதே! நீ திருப்தி அடையும்வரை என்னை நீ கடிந்துகொள்வாய்! உன் மூலமே அன்றி எந்தவொரு அதிகாரமும் சக்தியும் இல்லை எனக்கில்லை”.

இப்படியாக முறையிட்டுக் கொண்டிருந்தபோது, தமது தலைக்கு மேலாக கருமேகம் கறுத்து வருவதை நபிகளார் கண்டார். வானவர் தலைவர் நபிகளார் முன் தோன்றினார்.

“முஹம்மதுவே! உமது மக்கள் உம்மிடம் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதை இறைவன் கண்டான். அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதையும் கேட்டுக்கொண்டான். உமக்கு உதவியாக என்னை அனுப்பி வைத்துள்ளான். இதோ இந்த மலைக்குப் பொறுப்பு வகிக்கும் வானவர்கள் என்னோடு இருக்கிறார்கள். நீங்கள் ஒரே ஒரு ஆணையிடுங்கள், இரு மலைகளுக்கு இடையுள்ள இந்த தாயிப் நகர மக்களை நாங்கள் நசுக்கிவிடுகிறோம்”

நபிகளாரின் திருமேனியிலிருந்து வழிந்து கொண்டிருந்த உதிரப்போக்கு இன்னும் நிற்கவில்லை. கல்லடிபட்ட இடங்களின் வலியும், வேதனையும் இன்னும் குறையவில்லை.

இந்நிலையில் பதற்றத்துடன் நபிகளார் சொன்னார். “வேண்டாம்.. வேண்டாம்! இவர்களை விட்டு விடுங்கள். நாளை இவர்களின் சந்ததிகளாவது எனது செய்தியை ஏற்கலாம். வேண்டாம் இவர்களை விட்டுவிடுங்கள்!”

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x