Published : 16 Mar 2021 03:52 PM
Last Updated : 16 Mar 2021 03:52 PM
திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் நடைபெறும் பூச்சொரிதல் விழாவுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலிருந்து இன்று பூத்தட்டுகள் சமர்ப்பணம் செய்யப்பட்டன.
தமிழகத்தில் உள்ள அம்மன் திருத்தலங்களில் முக்கியமான இடத்தை வகிப்பது சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூச்சொரிதல் விழா மார்ச் 7-ம் தேதி தொடங்கியது. தன்னை நாடிவருவோர் மட்டுமின்றி மண்ணுலகில் உள்ள அனைத்து உயிர்களையும் காக்கவும், உலக நன்மைக்காகவும், அனைத்து மக்களுக்கும் சகல செளபாக்கியங்களும் கிடைக்க பக்தர்களுக்காக மார்ச் 7-ம் தேதி முதல் ஏப்.11-ம் தேதி வரையில் சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நாட்களில் கோயிலில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர் மோர், பானகம், மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. இதனால் அம்மன் உடல் உஷ்ணத்தில் இருப்பதை கட்டுப்படுத்க பூச்சொரிதல் விழாவின் போது பல்வேறு வகையிலான மலர்களை கொண்டு அம்மன் சிலை உள்ள கருவறை முழுவதும் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பூச்சொரிதல் விழாவின் போது திருச்சி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட வண்டிகளில் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றி வழிபடுவர்.
ஸ்ரீரங்கத்திலிருந்து பூத்தட்டு
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஊழியர்கள் சார்பில் இன்று (மார்ச் 16) கோயிலின் ரங்கவிலாச மண்டபத்தில் இருந்து பூத்தட்டுகளுடன் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர், அறங்காவலர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் தெற்குவாசல்வரை ஊர்வலமாக வந்தனர். பின்னர் அங்கிருந்து 25-க்கும் மேற்பட்ட பூத்தட்டுகளை சமயபுரம் கோயிலுக்கு எடுத்து சென்று, அம்மனுக்கு சாற்றினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT