Published : 16 Mar 2021 09:24 AM
Last Updated : 16 Mar 2021 09:24 AM
திருநீர்மலை திருத்தலத்துக்கு தொடர்ந்து வந்து, பெருமாளையும் தாயாரையும் மனதார வழிபடுவோம். மங்காத ஐஸ்வரியங்களையெல்லாம் தந்தருளுவார்கள் என்று போற்றுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.
சென்னை பல்லாவரத்துக்கு அருகில் உள்ளது திருநீர்மலை. அற்புதமான வைஷ்ணவ க்ஷேத்திரம். இங்கே உள்ள ரங்கநாத பெருமாள், மிகுந்த வரப்பிரசாதி. நீர்வண்ணப் பெருமாளும் கனிவும் கருணையும் கொண்டு அருள்பாலிக்கிறார்.
நீர்வண்ணப் பெருமாள் சந்நிதிக்கு அடுத்து வடக்கு மூலையில் தனி அறையில், மலையின் மீது பள்ளிகொண்டுள்ள ரங்கநாதரின் உத்ஸவ மூர்த்திகளைத் தரிசிக்கலாம். ஸ்ரீதேவி பூதேவி சமேதராக புன்சிரிப்புடன் காட்சி தரும் பெருமாளை தரிசித்துப் பிரார்த்தனை செய்து வந்தால், விரைவில் திருமண பாக்கியம் கைக்கூடும் என்பது ஐதீகம்.
அருகில் உள்ள ஆண்டாளும் வரம் கொடுப்பவள்தான். வாழவைப்பவள்தான். மனமொத்த தம்பதியாகத் திகழவும் மனதுக்கு இதமானவர் கணவராக அமையவும் ஸ்ரீஆண்டாள் துணைபுரிகிறாள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அதேபோல், நீர்வண்ணப் பெருமாள் சந்நிதியிக்கு நேராக, பன்னிரு ஆழ்வார்களும் உள்ளனர். திருக்கச்சி நம்பிகளும் மணவாள மாமுனிகளும் அற்புதமாக திருக்காட்சி தந்து அருளுகின்றனர்.
தாயார் திருச்சந்நிதியை அடுத்து, பள்ளியறை. இந்தப் பள்ளியறையில் பலவித நிலைக்கண்ணாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. உத்ஸவ வைபவத்தின் போது, பெருமாள் இங்கே எழுந்தருளி சேவை சாதிப்பார். புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், இங்கே வந்து, தாயாரை தரிசித்துவிட்டு, பள்ளியறைக்கு முன்னே ஒரு ஐந்துநிமிடம் நின்று மனதார வேண்டிக்கொண்டால், திருமண வரம் கொடுத்து அருளுவார் தாயார். மேலும் பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள் என்பது ஐதிகம்.
திருநீர்மலை, புண்ணிய க்ஷேத்திரம். 108 வைஷ்ணவ திருத்தலங்களில் திருநீர்மலை திருத்தலமும் ஒன்று. தொடர்ந்து ஒன்பது புதன் கிழமையோ அல்லது சனிக்கிழமையோ இங்கு வந்து, திருநீர்மலை பெருமாளையும் தாயாரையும் துளசி மாலை சார்த்தியும் வெண்மை மலர்கள் சார்த்தியும் வேண்டிக்கொண்டு வந்தால், கடன் தொல்லையில் இருந்து மீளலாம். கவலைகளும் துக்கங்களும் காணாமல் போகும். வாழ்க்கையிலும் தொழிலிலும் உத்தியோகத்திலும் தடைப்பட்டிருந்த நிலையெல்லாம் மாற்றித் தந்தருளுவார் பெருமாள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
சொர்க்கவாசலுக்கு அடுத்து ஸ்ரீஆண்டாள் குடியிருக்கிறாள். ஆடிப்பூரத்து நாயகி கொலுவிருக்கிறாள். நாச்சியார், மணமகள் கோலத்தில் அழகு கொஞ்சக் காட்சி தருகிறார். கிழக்கு பார்த்த நிலையில், திரிபங்க நிலையில், அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீஆண்டாள்.
திருநீர்மலை திருத்தலத்துக்கு தொடர்ந்து வந்து, பெருமாளையும் தாயாரையும் மனதார வழிபடுவோம். மங்காத ஐஸ்வரியங்களையெல்லாம் தந்தருளுவார்கள் என்று போற்றுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT