Last Updated : 16 Mar, 2021 08:56 AM

 

Published : 16 Mar 2021 08:56 AM
Last Updated : 16 Mar 2021 08:56 AM

பங்குனி செவ்வாயில் அழகன் முருகனுக்கு அரோகரா

பங்குனிச் செவ்வாயில், அழகன் முருகனை ஆராதிப்போம். தரிசித்துப் பிரார்த்திப்போம். பங்குனிச் செவ்வாய்க்கிழமையில், அருகில் உள்ள முருகப்பெருமான் கோயிலுக்குச் சென்று கண்ணாரத் தரிசிக்கலாம். செவ்வரளி மாலை சார்த்தி மனதார வேண்டிக்கொள்ளலாம். பங்குனிச் செவ்வாயில் அழகன் முருகனை தரிசிப்போம். அல்லல்களையெல்லாம் தீர்த்து வைப்பான் முத்துக்குமரன்!

பங்குனி மாதம் குளிரெல்லாம் முடிந்து கோடைக்குத் தயாராகும் மாதம். நீர்ப்பிடிப்புடன் இருக்கும் பூமியெல்லாம் வெப்பத்தால் இளகி, மண்ணும் நீருமாக பூமிக்குள் நிறைந்திருக்கும் மாதம். பங்குனி மாதத்தில்தான் பால் குடம் ஏந்தியும் அம்மனுக்கும் முருகனுக்கும் பாலபிஷேகம் செய்தும் வணங்கி வழிபடுவார்கள் பக்தர்கள்.

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் செவ்வாய் பகவானுக்கும் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானுக்கும் உகந்தநாள் என்று போற்றுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

செவ்வாய் பகவானை வழிபடுவது, கிரக தோஷங்களைப் போக்கவல்லது. குறிப்பாக, செவ்வாய் முதலான தோஷங்களை நீக்கி அருளக்கூடியது என்கிறது ஜோதிட சாஸ்திரம். மேலும் செவ்வாய் பகவானின் அருளும் முருகப்பெருமானின் பேரருளும் இருந்துவிட்டால், வீடு மனை யோகமெல்லாம் கிடைத்துவிடும் என்பதும் எதிர்ப்புகளும் தடைகளும் இல்லாமல் போய்விடும் என்றும் சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

முருகப்பெருமானுக்கு ஆறுபடைவீடுகள் என்பார்கள். மேலும் பல பிரசித்தி பெற்ற திருத்தலங்கள் அமைந்திருக்கின்றன. வயலூர், திருமருகல், திருப்போரூர், நெல்லை இலஞ்சி, ஊத்துமலை, குமரகிரி, எண்கண், எட்டுக்குடி, குன்றக்குடி முதலான எண்ணற்ற திருத்தலங்களில் முருகப்பெருமான் அழகுற கோயில் கொண்டு, பக்தர்களை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.

முருகப்பெருமானுக்கு அனைத்து சிவாலயங்களிலும் தனிச்சந்நிதியே உள்ளது. பல சிவன் கோயில்களில், முருகப்பெருமான் இன்னும் இன்னுமான சாந்நித்தியத்துடன் கொலுவிருந்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கிறார்.

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் என்றாலும் அங்கே பிரதான தெய்வமாக பிரம்மா தனிச்சந்நிதியில் திகழ்ந்தாலும் இங்கே உள்ள முருகப்பெருமான், அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார்.

பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திர நாளில் முருகப்பெருமானுக்கு விமரிசையாக பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெறும். அதேபோல், பங்குனிச் செவ்வாய்க்கிழமையில், அருகில் உள்ள முருகப்பெருமான் கோயிலுக்குச் சென்று கண்ணாரத் தரிசிக்கலாம். செவ்வரளி மாலை சார்த்தி மனதார வேண்டிக்கொள்ளலாம்.

பங்குனிச் செவ்வாயில் அழகன் முருகனை தரிசிப்போம். அல்லல்களையெல்லாம் தீர்த்து வைப்பான் முத்துக்குமரன்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x