Published : 13 Mar 2021 03:45 PM
Last Updated : 13 Mar 2021 03:45 PM
பங்குனி மாதப் பிறப்பில் தர்ப்பணம் முதலான முன்னோர் வழிபாட்டில் ஈடுபடுவோம். முன்னோர்களின் ஆசியைப் பெறுவோம்.
ஏராளமான வழிபாடுகள் இருக்கின்றன. ஆலயங்களில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்குச் சென்று தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்போம். பரிகாரத் தலங்களுக்குச் சென்று வழிபடுவோம். இஷ்டதெய்வங்கள் குடிகொண்டிருக்கும் கோயில்களுக்குச் சென்று வழிபடுவதைத் தொடருவோம்.
இப்படி எந்த ஆலயத்துக்குச் சென்றும் வழிபடலாம். எந்த வழிபாட்டை வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். அதேசமயம், முக்கியமான இரண்டு வழிபாடுகள் இருக்கின்றன. முதலாவது குலதெய்வ வழிபாடு. நாம் எந்தக் கோயிலுக்குச் சென்று வழிபாடுகள், பரிகாரங்கள் மேற்கொண்டாலும் நம்முடைய குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபடுவதுதான் மிக மிக முக்கியம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். குலதெய்வக் கோயிலுக்கு வருடத்துக்கு நான்கு முறையேனும் சென்று குடும்பமாக தரிசிக்க வேண்டும் என்கிறார்கள் முன்னோர்கள்.
குலதெய்வக் கோயிலுக்குச் செல்வதும் தரிசிப்பதும் எவ்வளவு முக்கியமோ, அந்தக் கோயிலுக்கு நம்மால் முடிந்த திருப்பணி உதவிகளைச் செய்வதும் மின் விளக்கு சந்நிதி முதலான பணிகளை மேற்கொள்வதும் தண்ணீர் குழாய் பொருத்திக் கொடுப்பதும் மாதிரியான பணிகளைச் செய்து தருவது மகா புண்ணியம் என்கிறார்கள். குலதெய்வ வழிபாட்டைச் செய்யாமல் நாம் செய்கிற எந்த வழிபாடுகளும் பலன்களைத் தராது என்றும் அறிவுறுத்துகின்றனர்.
அப்பேர்ப்பட்ட குலதெய்வமே நமக்கு பலன் தராமல் இருக்கும் சூழலும் உண்டு. அந்தச் சூழலை நாம் ஒருபோதும் ஏற்படுத்திவிடக் கூடாது. அதாவது, முன்னோர்களை தவறாமல் வழிபட்டுவந்தால்தான் குலதெய்வமே குளிர்ந்து போவார்கள், அருளுவார்கள் என்பதாக ஐதீகம்.
முன்னோர் வழிபாடு மிக மிக அவசியமானது. ஒருவருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் உள்ளன என்கிறது சாஸ்திரம். மாதந்தோறும் அமாவாசை, ஒவ்வொரு தமிழ்மாதத்தின் முதல்நாள் பிறப்பு, கிரகண காலங்கள், திதி, மகாளய பட்ச காலத்தின் பதினைந்து நாட்கள் என தர்ப்பணம் செய்யவேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம்.
நாளைய தினம் 14ம் தேதி மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் பிறக்கிறது. இந்தநாளில், முன்னோர்களை ஆராதிப்போம். அவர்களை நினைத்து தர்ப்பணம் முதலான காரியங்களைச் செய்வோம். அவர்களின் பெயர்களைச் சொல்லி எள்ளும் தண்ணீரும் விடுவோம். காகத்துக்கு உணவிடுவோம். முடிந்தால், ஒரு நான்குபேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குவோம். இதில் குளிர்ந்து போய் முன்னோர்கள் நம்மையும் நம் சந்ததியையும் சிறப்புற செம்மையாக வாழ அருளுவார்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT