Published : 13 Mar 2021 09:32 AM
Last Updated : 13 Mar 2021 09:32 AM
அஞ்சனை மைந்தன் என்றும் ராமபக்தன் என்றும் கொண்டாடப்படுகிற அனுமனுக்கு மூன்று மாலைகள் அணிவித்து வேண்டிக்கொள்வது ரொம்பவே விசேஷம். தொடர்ந்து அனுமனை தரிசித்து வந்தால், எடுத்த காரியங்கள் அனைத்தும் ஜெயமாகும். தடைகள் அனைத்தும் அகலும். குடும்பத்தில் நிம்மதியும் அமைதியும் குடியேறும் என்பது ஐதீகம்.
மாசி மாதம் எல்லா தெய்வங்களையும் வணங்குவதற்கு உரிய விசேஷமான மாதம். இந்த மாதத்தில் நாம் செய்யும் வழிபாடுகள் அனைத்தும் மும்மடங்கு பலன்களைக் கொடுப்பவை.
அனுமன் வழிபாடு எப்போதுமே வலிமையை தரக்கூடியது. நம் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளையும் எதிர்ப்புகளையும் கூட பலமிழக்கச் செய்துவிடுவார் ஆஞ்சநேயப் பெருமான். புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில், அனுமன் வழிபாடு செய்வது சிறப்புக்கு உரியது.
அஞ்சனையின் மைந்தனான ஆஞ்சநேயப் பெருமானுக்கு தன்னுடைய திருநாமத்தைச் சொல்லி வேண்டிக் கொள்வது கூட அத்தனை சந்தோஷமாக இருக்காதாம். ‘ஸ்ரீராமஜெயம்’ என்று சொல்லிக் கொண்டே இருந்தால், மகிழ்ந்து நமக்கு அருளுவாராம் அனுமன். அதேபோல், ஸ்ரீராமஜெயம் எழுதி, அதை மாலையாக்கி அனுமனுக்கு சார்த்தினால், குளிர்ந்து நமக்கு அருளிச் செய்வார் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.
தொழிலில் தொடர்ந்து நஷ்டம் என்று வருந்துபவர்கள், வாழ்வில் எதற்கெடுத்தாலும் தடையாகவே இருக்கிறது என்று கலங்குபவர்கள், தொடர்ந்து ஆஞ்சநேயப் பெருமானை வணங்கி வந்தால், அவரின் செந்தூரப் பிரசாதத்தை நெற்றியில் இட்டு வந்தால், விரைவில் காரியங்கள் அனைத்தும் ஜெயமாகும். தொழிலில் லாபம் கிடைக்கப் பெறுவோம் என்கிறார் நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் கோயிலின் ஸ்ரீநிவாச பட்டாச்சார்யர்.
எளிமையான வழிபாடுகளில் அனுமன் வழிபாடும் ஒன்று. ‘அனுமன் சாலீசா’ பாராயணம் செய்து வேண்டிக்கொள்ளலாம். அல்லது அதனை ஒலிக்க விட்டுக் கேட்டபடி அனுமனை வழிபாடு செய்யலாம்.
அனுமனுக்கு மூன்று மாலைகள் விசேஷம். துளசி மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளலாம். வெற்றிலை மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளலாம். வடை மாலை அணிவித்து அலங்கரித்து நம் கோரிக்கைகளை அவரிடம் வைத்து முறையிட்டுப் பிரார்த்திக்கலாம். மேலும் வெண்ணெய்க் காப்பு சார்த்தி வேண்டுவதும் எண்ணற்ற பலன்களைத் தரும். தம்பதி இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள் என்கிறார்கள் பக்தர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT