Published : 12 Mar 2021 03:03 PM
Last Updated : 12 Mar 2021 03:03 PM
கணவரின் ஆயுளை பலப்படுத்தும் விரதமான காரடையான் நோன்பு வருகிற 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தநாளில், உரிய முறைப்படி நோன்பு பூஜையை பெண்கள் மேற்கொண்டால், கணவரின் ஆயுள் நீடிக்கும். பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்று போற்றுகிறது சாஸ்திரம்.
கணவரும் மனைவியுமாக இணைந்தும் இயைந்தும் வாழ்வதே இல்லறம். ஒருவரின்றி ஒருவரில்லை என்று இணையாகவும் விட்டுக்கொடுத்தும் வாழ்வதே வாழ்க்கையின் தாத்பரியம். திருமணமாகியிருக்கும் எல்லா பெண்களையும் வாழ்த்தும் போது சொல்லக் கூடிய மிக முக்கியமான வாசகம்... ‘தீர்க்கசுமங்கலி பவ’.
அப்படி தீர்க்கசுமங்கலியாகத் திகழ வேண்டும் என்பதுதான் பெண்களின் மிகப்பெரிய ஆசை, கனவு, விருப்பம். அதற்கு கணவரின் ஆயுள் பலம் வேண்டும். அதைப் பெறுவதற்குத்தான் விரதங்களும் பூஜைகளும் மந்திரங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கின்றன. அப்படியான வழிபாடுகளில் மிக முக்கியமானது என்று பெண்களால் போற்றப்படுவதுதான் ‘காரடையான் நோன்பு’.
பங்குனி மாதம் பிறக்கும் நேரமும், மாசி மாதம் முடியும் நேரமும் கூடுகின்ற தருணம்தான் காரடையான் நோன்பு எனும் பண்டிகை கொண்டாடப்படுகிறது. . இதுகுறித்து பலவிதமான முறையில் சரிதங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.
ஒருகாலத்தில்... அசுபதி எனும் மன்னன் ஆட்சி செய்து வந்தான். நல்லாட்சி புரிபவன் என்று மக்களால் பேரெடுத்தான். மக்களிடம் பேரன்பும் கடவுளின் பக்தியும் கொண்டிருந்தான். ஆனாலும் மன்னனுக்கும் மகாராணிக்கும் ஒரேயொரு குறை... குழந்தை இல்லையே என்பதுதான்.
சதாசர்வ காலமும் இறை சிந்தனையுடன் இருந்தான். ஆலயங்களுக்குத் திருப்பணிகள் மேற்கொண்டான். தானங்கள் செய்தான். தருமங்கள் செய்தான். ஒருகட்டத்தில்... இறையருளாலும் தரும புண்ணிய பலன்களாலும் யாக ஹோம விரதங்களாலும் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு சாவித்திரி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார்கள்.
அன்பும் அரவணைப்புமாக, பண்பும் தெய்வ பக்தியுமாக குழந்தை சாவித்திரி வளர்ந்தாள். உரிய வயதை அடையும் தருணத்தில், அவளின் திருமணம் முதலான எதிர்காலம் குறித்து அறிய விரும்பினார் மன்னர். அப்போது அங்கே நாரதர் வந்தார். ‘சத்தியவான் என்பவன் பெற்றோரை தெய்வமாக மதித்து வாழ்பவன். அவனை கணவனாக அடைவாள்’ என்று சொன்னார். இதைக் கேட்டு மகிழ்ந்து போனார் மன்னர். ‘அதேசமயம், சத்தியவான் குறைந்த ஆயுளைக் கொண்டவன். அவனுக்கு ஆயுசு கெட்டி இல்லை என்பதையும் தெரிவித்தார்.
இதைக் கேட்டு கலங்கி நொறுங்கிப் போனார் மன்னர். ஆனாலும் விதியை எதிர்கொள்ளும் துணிவுடன் சகலத்தையும் அணுகினார். அதன்படி சத்தியவானுக்கும் சாவித்திரிக்கும் திருமணம் நடந்தேறியது.
பின்னர் கணவனுடன் அவனுடைய நாட்டுக்குச் சென்றாள் சாவித்திரி. கண் பார்வை அற்ற கணவனின் தாய், தந்தையரைப் பேணிக் காத்தாள். இந்த நிலையில், மன்னன் ஒருவன் சத்தியவானை நாடு கடத்தினான். தாய், தந்தை மற்றும் மனைவி சாவித்திரி முதலானோருடன் காட்டில் குடில் அமைத்து வாழ்ந்துவந்தான். காட்டில் மரம் வெட்டி, நாட்டிற்குள் சென்று விற்றுப் பிழைப்பு நடத்திவந்தான். சாவித்திரிக்கு மட்டுமே அவனது வாழ்நாளின் இறுதி நாள் தெரியும். வேறு எவருக்கும் அவனின் ஆயுசு விவரம் தெரியாது.
அதனால் அன்றைய தினம் அவன், மரம் வெட்டக் கிளம்பும்பொழுது தானும் உடன் வருவதாகச் சொன்னாள் சாவித்திரி. மாமியார், மாமனாருக்கு உணவு தயாரித்துக் கொடுத்துவிட்டு சத்தியவானுடன் புறப்பட்டாள்.
காட்டில் நல்ல முதிர்ந்த மரத்தைத் தேர்ந்தெடுத்த சத்தியவான் அதனை வெட்டத் தொடங்கினான். அருகே இறை தியானத்தில் இருந்தாள் சாவித்திரி. மதிய வேளை வந்தது. இருவரும் சாப்பிட்டார்கள். உண்ட களைப்பில் சாவித்திரியின் மடியில் அப்படியே தலைவைத்துப் படுத்தான். தூங்கியவன் அப்படியே ஒரேயடியாகக் கண் மூடினான். இறந்துபோனான். யம தர்மன், சத்தியவானின் உயிரைக் கொண்டுசெல்வதை சாவித்திரியால் பார்க்க முடிந்தது.
மடியில் தலை வைத்து இருந்த சத்தியவானின் தலையை இறக்கித் தரையில் வைத்துவிட்டு, கண்ணில் தெரிந்த யமனின் பின்னே சென்றாள் சாவித்திரி. பின் தொடரும் காலடிச் சத்தம் கேட்ட யமன் திரும்பிப் பார்த்தான். சாவித்திரி கை கூப்பினாள். கூப்பிய கையை இறக்கவே இல்லை அவள்!
பத்தினிப் பெண்களால் மட்டுமே தன்னைக் காண முடியும் என்பதால், என்னைக் காணும் வல்லமை பெற்ற நீ தீர்க்க சுமங்கலியாக வாழ்க என வாழ்த்தினான் யமதர்மன். கணவன் உயிர் மீள இந்த வரம் ஒன்றே போதும். ஆனாலும் தனது மாமியார், மாமனாருக்கு பார்வை திரும்ப வேண்டும் என்றும், தனக்கும் சத்தியவானுக்கும் நூறு பிள்ளைகள் பிறக்க வேண்டும் என்றும் வரம் பெற்றாள் சாவித்திரி. ‘அப்படியே ஆகட்டும்’ என அருளினான் யம தருமன்.
உடனே விழித்தெழுந்தான் சத்தியவான். இருவரும் வீட்டிற்குத் திரும்பிய தருணத்தில், இருட்டத் தொடங்கியது. அன்றைய தினம் மாசி மாதத்தின் கடைசி நாள். பங்குனி மாதமும் பிறக்கத் தொடங்கியிருந்தது. இரு மாதமும் கூடும் நேரம் அது. அதுவே காரடையான் நோன்பு என்று கொண்டாடப்படுகிறது. பூஜிக்கப்படுகிறது. விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் பிறக்கிறது. இந்த நன்னாளில், காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது.
கணவர் சத்தியமூர்த்தியை சாவித்திரி மீட்பத்ற்கு நோன்பிருந்தாள். அதுவே காரடையான் நோன்பு விரதம்.
கணவரின் ஆயுள் அதிகரிக்கவும் மாங்கல்ய பலம் பெருகவும் காரடையான் நோன்பு கடைபிடியுங்கள். சத்தியவானை மீட்ட சாவித்திரியின் சரிதம் கேளுங்கள். இன்னும் புண்ணியமும் பலனும் கிடைக்கப் பெறுவீர்கள். தீர்க்க ஆயுளுடன் மாங்கல்ய பலத்துடன் திகழ்வீர்கள்.
14.3.2021 ஞாயிற்றுக்கிழமை காரடையான் நோன்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT