Published : 12 Mar 2021 11:07 AM
Last Updated : 12 Mar 2021 11:07 AM
என்னைத் தேடிக்கொண்டே இரு. நான் அதையெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அதுமட்டுமல்ல... உன் கர்ம வினைகளில் இருந்தும் பாவங்களில் இருந்தும் உன்னை முழுமையாக காப்பேன். உனது பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள். என்னிடத்தில் ஐக்கியமாகி விடு. நான் உன்னைப் பார்த்துக்கொள்வேன். துயரப்படாதே!’ என அருளியுள்ளார் சாயிபாபா.
பாபா, தன் பக்தர்களை குழந்தையாகவே பாவிக்கிறார். ஒரு குழந்தையிடம் காட்டுகிற வாஞ்சையுடன் நேசிக்கிறார். கருணையும் கனிவுமாக குழந்தையை வளர்ப்பது போல், நம்மையும் வளர்த்து வாழச் செய்கிறார் பகவான் சாயிபாபா.
’என்னைத் தேடி நீ அலைந்து கொண்டே இருக்கிறாய். எங்கெங்கோ அலைகிறாய். என் அன்புக் குழந்தையே! என்னைப் பார்க்க வேண்டும் என்று எப்போது உன் உள்மனம் என்னைத் தேடத் தொடங்கிவிட்டதோ, அப்போதே உன்னுடைய ஆழ்மனத்தில் தேங்கிக் கிடந்த தவறுகளும் உனக்கு நினைவுக்கு வந்திருக்கும். அதற்காக நீ வருத்தப்படு. தவறு செய்துவிட்டோமே என்று கண்ணீர் விடு. உன்னுடைய தவறால், வார்த்தையால், செயலால் எவரையெல்லாம் நோகப் பண்ணினாயோ... அவர்களுக்கு மானசீகமாக மன்னிப்புக் கேள்’ என்கிறார் பகவான் சாயிபாபா.
பகவான் சாயிபாபா, மக்களுக்கும் கடவுளுக்கும் இடையே இருந்து ஆன்மிகத்தை, பக்தியை விதைத்த அற்புத மகான். பின்னர் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாகவே போற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
’’பாவங்களும் மூட்டையாக இருக்கிறது. புண்ணியங்களும் அப்படித்தான் இருக்கிறது. பாவம் என்பது பெருஞ்சுமை. புண்ணியம் என்பது சுகமான சுமை. கடவுளைத் தேடத் தொடங்குகிற வேளையில், பெருஞ்சுமை எனும் பாவமூட்டையின் கனமானது குறைந்துகொண்டே வரும். அப்போது புண்ணியத்தின் பலனைக் கொடுப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். நினைத்துப் பார்க்க முடியாதபடி பல அற்புதங்களை உனக்காக நிகழ்த்துவேன்’ என அருளியுள்ளார் ஷீர்டி சாயிபாபா. .
’என்னைத் தேடி தேடி ஓய்ந்து போய்விட்டாய். களைத்து விட்டாய். நான் உனக்குள்ளேயே இருக்கிறேன். ஒருநாள் இதை உணர்ந்து மகிழ்வாய். அதுவரை பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இரு’ என்கிறது சாயி சத்சரித்திரம்.
’சித்திரமாக இருந்தாலும் சிலை வடிவில் இருந்தாலும் எனது ரூபத்திற்கு உயிர் கொடுத்து நீ வாசம் செய்யும் இடத்தில் இருந்து கொண்டு உன்னை வழிநடத்திக் கொண்டிருக்கிறேன். கலங்காதே. கவலைப்படாதே! நான் உன் கண்ணெதிரேதான் இருக்கிறேன். உன் வீட்டில்தான் வாசம் செய்கிறேன். நீ இருக்கும் இடத்தில் எதுவும் உன்னை நெருங்காமல் இருக்க, துன்புறுத்தாமல் இருக்க காவலாக இருக்கிறேன்.
என்னைத் தேடிக்கொண்டே இரு. நான் அதையெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அதுமட்டுமல்ல... உன் கர்ம வினைகளில் இருந்தும் பாவங்களில் இருந்தும் உன்னை முழுமையாக காப்பேன். உனது பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள். என்னிடத்தில் ஐக்கியமாகி விடு. நான் உன்னைப் பார்த்துக்கொள்வேன். துயரப்படாதே!’ என அருளியுள்ளார் சாயிபாபா.
சாய்ராம் என்று சொல்லி பாபாவைச் சரணடைவோம். பாவங்களில் இருந்து நம்மை மீட்டெடுப்பார் சாயிபாபா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT