Published : 10 Mar 2021 11:13 AM
Last Updated : 10 Mar 2021 11:13 AM
மகிமை மிக்கது மகா சிவராத்திரி. இந்த நன்னாளில், நம்மால் முடிந்த அளவுக்கு வில்வம் சார்த்தி சிவனை வழிபடுவோம். குரங்கிற்கு மோட்சம் தந்து அருளிய சிவனார், நமக்கும் அருளுவார். மகா சிவராத்திரி நாளில், வில்வம் சார்த்தி மகேஸ்வர வழிபாடு செய்வோம். 11ம் தேதி வியாழக்கிழமை, மகா சிவராத்திரி.
மாசி மாதம் என்பது வழிபாட்டுக்கான மாதம். மாசி மாதம் என்பது பூஜைகளுக்கான மாதம். மாசி மாதத்தில் வருகிற மகம் நட்சத்திரம் ரொம்பவே விசேஷம். இதனை மாசி மகம் என்றே போற்றுகிறார்கள்.
அதேபோல், மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதத்தில் வருகிற சிவராத்திரி, ரொம்பவே விசேஷமானது. இதனை மகா சிவராத்திரி என்று கொண்டாடுகிறோம்.
மகா சிவராத்திரி அன்று விரதம் மேற்கொள்வதும் சிவ தரிசனம் செய்வதும் அளப்பரிய பலன்களைத் தரும். மகா சிவராத்திரி விரதம் மேற்கொண்டு இந்திரன் வரம் பெற்றார். மகாவிஷ்ணு மகா சிவராத்திரி விரதம் இருந்து சிவ பூஜைகள் செய்து வரம் பெற்றார். மகாலக்ஷ்மியை மணம்புரிந்தார்.
அதேபோல், பிரம்மாவும் மகா சிவராத்திரி விரதம் மேற்கொண்டார். சரஸ்வதி தேவியை திருமணம் புரிந்தார் என்கிறது புராணம்.
இப்படி எத்தனையோ தெய்வங்கள் மகா சிவராத்திரி விரதம் இருந்திருக்கிறார்கள். சிவனருளைப் பெற்றிருக்கிறார்கள்.
குரங்கு ஒன்று, மகா சிவராத்திரி நாளில் செய்த காரியத்தால், மிகப்பெரிய வரத்தைப் பெற்றது எனும் புராணத்தை அறிவீர்கள்தானே.
அடர்ந்த வனம் அது. அங்கே உள்ள மரத்தின் மீது அமர்ந்திருந்த குரங்கு, நள்ளிரவில் தூக்கம் வராமல் தவித்தது. மரத்தின் இலைகளைப் பறித்து கீழே போட்டபடியே இருந்தது. அப்படி கீழே போடப்படும் இலைகள் வெறும் இலைகள் அல்ல. அவை வில்வம். வில்வ இலை. அது வில்வமரம். அந்தக் குரங்கு வில்வ இலைகளைத்தான் பறித்துப் பறித்துப் போட்டது.
குரங்கு பறித்துப் போட்ட வில்வ இலைகள் தரையில் விழவில்லை. ஆமாம்... அந்த வில்வம் மரத்தடியில் சிவலிங்கம் இருந்தது. அந்த வில்வ இலைகள், சிவலிங்கத் திருமேனியில் விழுந்தபடியே இருந்தன. விடிய விடிய வில்வம் பறித்துப் போட்டுக் கொண்டே இருந்தது குரங்கு. தெரிந்தோ தெரியாமலோ சிவலிங்கத்துக்கு வில்வத்தைப் பறித்து போட்டப்படியே இருந்தது. அது சிவனாருக்கு செய்த அர்ச்சனையாகவே அமைந்துவிட்டிருந்தது.
அதுமட்டுமா? அன்றைய நாள் சிவராத்திரி. இதில் குளிர்ந்து போன சிவனார், அந்தக் குரங்குக்கு மோட்சம் அளித்தார் ஈசன். அன்றைய இரவில் குரங்கு எதுவும் சாப்பிடவுமில்லை. கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டே இருந்தது. வில்வத்தை சிவலிங்கத்தின் மீது அர்ச்சித்துக் கொண்டே இருந்தது. இதனால், அந்தக் குரங்கு விமோசனம் பெற்றது. மனிதப் பிறப்பெடுத்த குரங்கு... முசுகுந்தச் சக்கரர்த்தியானார்.
சிவராத்திரி விரத பலன் கிடைக்கப் பெற்ற அந்தக் குரங்கு, முசுகுந்தச் சக்கரவர்த்தியாகப் பிறக்க அருள்புரிந்தார். குரங்கு முகமும் மனித உடலும் கொண்டு, சோழச் சக்கரவர்த்தியாக வாழ்ந்தார் முசுகுந்தச் சக்கரவர்த்தி என விவரிக்கிறது புராணம்!
மகா சிவராத்திரி நன்னாளில், உண்ணா நோன்பு இருந்தும் உறங்காமல் கண் விழித்தும் வில்வம் சார்த்தியும் சிவபெருமானை வேண்டுவோம். குரங்கிற்கு அருளிய சிவபெருமான், நமக்கும் அருளுவார். நல்வழி காட்டுவார். நற்கதியை அளிப்பார். தென்னாடுடைய சிவனே போற்றி.
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றீ!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT