Published : 09 Mar 2021 06:21 PM
Last Updated : 09 Mar 2021 06:21 PM
11ம் தேதி வியாழக்கிழமை மகா சிவராத்திரி. அற்புதமான இந்தநாளில், அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று அன்றைய இரவுப் பொழுதில் ஒவ்வொரு கால பூஜையையும் தரிசிப்போம். முன் ஜென்ம வினைகளெல்லாம் விலகும். பிறவிப் பயனைத் தந்தருளுவார் என்று போற்றுகின்றனர் சிவனடியார்கள்.
மாசி மாதம் வழிபாட்டுக்கு உரிய மாதம். பூஜைகளுக்கும் ஹோமங்கள் செய்யவும் உகந்த மாதம். மாசி மாதத்தில் வருகிற சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று போற்றி வணங்கப்படுகிறது.
சிவபெருமானுக்கு நடைபெறும் பூஜைகள் ஏராளம். சிவாலயங்களில் திருவிழாக்கள், தேரோட்டம், தீர்த்தவாரி என வருடத்தின் பல நாட்கள் அமர்க்களப்பட்டாலும் எந்த விழாக்களுக்கும் இல்லாத சிறப்பு, மகா சிவராத்திரிக்கு உண்டு. இந்தநாளில் மட்டும்தான், சிவன் கோயில்களில் விடிய விடிய நடை திறந்திருக்கும். இரவில் ஒவ்வொரு கால பூஜையும் ஆகம விதிகளின்படி நடந்தேறும்.
மகா சிவராத்திரி நன்னாளில்தான், மகாவிஷ்ணு சிவபெருமானை நோக்கி தவமிருந்து சக்ராயுதத்தை வரமாகப் பெற்றார் என்கிறது புராணம். அதேபோல், ஸ்ரீலட்சுமி தேவி, தவமிருந்தாள். சிவ வரம் பெற்றாள். மகாவிஷ்ணுவை மணாளனாகப் பெற்றார்.
பெருமாள் மட்டுமா? குரு பிரம்மா என்று போற்றுகிறோம். வணங்குகிறோம். கொண்டாடுகிறோம். பிரம்மா சிவபெருமானை நோக்கி தவம் மேற்கொண்டார். தவத்தின் பலனாக, கலைகளின் கடவுளான ஸ்ரீசரஸ்வதிதேவியின் கரம்பற்றினார் என்றெல்லாம் விவரிக்கிறது புராணம்.
இத்தனை பெருமைகள் மிகுந்த மகா சிவராத்திரி நன்னாளில், நாமும் சிவனாரை நோக்கி விரதம் மேற்கொள்ளலாம். சிவ ஸ்துதிகள் பாராயணம் செய்யலாம். ருத்ரம் ஜபிக்கலாம். நமசிவாய திருநாமத்தைச் சொல்லிக்கொண்டிருக்கலாம். அன்றைய நாளில், சதாசர்வ காலமும் சதாசிவத்தையே நினைத்து பிரார்த்தனை செய்துகொள்ளலாம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
மகா சிவராத்திரி நன்னாளில், சிவாலயம் செல்வதும் சிவபெருமானை தரிசித்துப் போற்றுவதும் நற்பலன்களை வழங்கும் என்கிறார் சித்தநாத குருக்கள். அன்றைய நாளில், இரவு பத்து மணிக்குத் தொடங்கி, ஒவ்வொரு கால பூஜையும் விடிய விடிய நடைபெறும். இந்த பூஜைகள் ஒவ்வொன்றையும் தரிசிக்க ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கப்பெறலாம் என்கிறார்.
மாசி மகா சிவராத்திரிப் பெருவிழா, 11ம் தேதி வியாழக்கிழமை வருகிறது. குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையும் மகா சிவராத்திரியும் இணைந்த அற்புதமான நன்னாளில், ஞானகுருவாகத் திகழும் தென்னாடுடைய சிவனாருக்கு அபிஷேகப் பொருட்கள் வழங்கலாம். பால், தயிர், திரவியப் பொடி, அரிசிமாவு, தேன், விபூதி, சந்தனம், நெல்லிப்பொடி முதலான அபிஷேகப் பொருட்களை வழங்குங்கள். சகல யோகங்களும் தந்தருளுவார் ஈசன். கடன் முதலான சிக்கல்களிலிருந்து மீளச் செய்து அருளுவார் சிவனார். வில்வம், செவ்வரளி முதலான மலர்களை சிவலிங்கத் திருமேனிக்கு சார்த்தி வழிபடுங்கள். இல்லத்தில் நிம்மதியும் நிறைவும் தந்தருளுவார் பரமசிவம்.
11ம் தேதி வியாழக்கிழமை மகா சிவராத்திரி. அற்புதமான இந்தநாளில், அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று அன்றைய இரவுப் பொழுதில் ஒவ்வொரு கால பூஜையையும் தரிசிப்போம். முன் ஜென்ம வினைகளெல்லாம் விலகும். பிறவிப் பயனைத் தந்தருளுவார் என்று போற்றுகின்றனர் சிவனடியார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT