Last Updated : 09 Mar, 2021 05:04 PM

 

Published : 09 Mar 2021 05:04 PM
Last Updated : 09 Mar 2021 05:04 PM

மாசி நிறைவு பிரதோஷம்; மகா சிவராத்திரி

மாசி மாதத்தின் பிரதோஷமும் மகா சிவராத்திரியும் அடுத்தடுத்த நாள் வருகிறது. 10ம் தேதி பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டு சிவ தரிசனம் செய்வோம். மறுநாள் 11ம் தேதி வியாழக்கிழமை மகா சிவராத்திரி. இந்த இரண்டு நாட்களும் அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று சிவபூஜையில் கலந்துகொள்வோம். சிவபெருமானுக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளை கண்ணாரத் தரிசித்து மனதார பிரார்த்தனை மேற்கொள்வோம்.

மாதந்தோறும் அமாவாசைக்கு முந்தைய மூன்றாவது நாளும் பெளர்ணமிக்கு முந்தைய மூன்றாவது நாளும் திரயோதசி திதியானது வரும். திரயோதசி என்பதே பிரதோஷம் என அழைக்கப்படுகிறது.

பிரதோஷம் என்பது சிவனாருக்கு உரிய மிக முக்கியமான நாள். திதியில் திரயோதசி, நட்சத்திரத்தில் திருவாதிரை என சிவபெருமானை போற்றி வணங்கக் கூடிய நாட்கள் ஏராளம் அமைந்திருக்கின்றன.

திரயோதசி நாளில், பிரதோஷம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான காலம். இந்த நேரத்தில், அனைத்து சிவன் கோயில்களிலும் பிரதோஷ பூஜை விமரிசையாக நடைபெறும். நந்திதேவருக்கும் சிவலிங்கத் திருமேனிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.

அப்போது இறைவனுக்கும் நந்திதேவர் பெருமானுக்கும் 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். நந்திதேவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளலாம். அதேபோல் சிவபெருமானுக்கு செவ்வரளி மலர்களும் வில்வமும் சார்த்தி பிரார்த்தனை செய்துகொள்ளலாம்.

மாசி மாதத்தின் நிறைவுப் பிரதோஷமானது 10ம் தேதி புதன்கிழமை வருகிறது. இந்தநாளில், சிவாலயம் சென்று சிவனாரை கண் குளிர தரிசனம் செய்யலாம். மனதார பிரார்த்தனைகள் செய்து கொள்ளலாம்.

மாசி மாதத்தில் சிவபெருமானுக்கு இன்னொரு விசேஷமான நாள்... மகா சிவராத்திரி. மாதந்தோறும் சிவராத்திரி வரும் என்றாலும் மகா சிவராத்திரி மாசி மாதத்தில்தான் வரும். இந்த அற்புதமான நாளில், விரதம் மேற்கொள்வார்கள் பக்தர்கள்.

வழக்கமாக, காலையில் நடை திறக்கப்பட்டு மதியம் நடை சார்த்தப்படும். பின்னர் மாலையில் திறக்கப்பட்டு இரவு 8 முதல் 9 மணிக்குள் நடை சார்த்தப்படுவது வழக்கம். ஆனால் மகா சிவராத்திரிப் பெருவிழா நாளன்று, இரவில் நடை திறந்திருக்கும். அப்போது ஒவ்வொரு கால பூஜையும் விமரிசையாக நடந்தேறும்.

மகா சிவராத்திரி நாளில், காலை முதலே விரதம் மேற்கொள்வார்கள் பக்தர்கள். இரவு தரிசனம் முடிந்து, மறுநாள் காலையில் விரதத்தை நிறைவு செய்கிற பக்தர்களும் உண்டு.

11ம் தேதி வியாழக்கிழமை மகா சிவராத்திரி. 10ம் தேதி புதன்கிழமை பிரதோஷமும் 11ம் தேதி குருவார வியாழனில், மகா சிவராத்திரியும் வருகிறது. அற்புதமான இந்த இரண்டு வைபவங்களையும் மனமொருமித்து சிவ சிந்தனையில் திளைப்போம். வாழ்வில் சகல யோகங்களையும் ஞானத்தையும் தந்தருளுவார் சிவனார்!

தென்னாடுடைய சிவனே போற்றி.
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x