Published : 09 Mar 2021 02:43 PM
Last Updated : 09 Mar 2021 02:43 PM
மகா சிவராத்திரி நாளில், ருத்ரம் பாராயணம் செய்வோம். நமசிவாயம் சொல்வோம். அன்றைய நாளில், இரவில் நடைபெறும் ஒவ்வொரு கால பூஜையைத் தரிசித்துப் பிரார்த்தனைகள் செய்வோம். பிறவிப்பயன் அனைத்தையும் தந்து அருளுவார் தென்னாடுடைய சிவனார்.
அம்மை உமையவளுக்கு நவராத்திரி. அப்பன் சிவனுக்கு சிவராத்திரி என்பார்கள். அம்பிகைக்கு நவராத்திரி... ஆலகாலவிஷம் உண்ட ஈசனுக்கு ஒரே ராத்திரி... சிவராத்திரி என்பார்கள். மாதந்தோறும் சிவராத்திரி வரும். இது ரொம்பவே விசேஷம். மாசி மாதத்தில், தேய்பிறை சதுர்த்தசி நாளில் வருகிற சிவராத்திரி மகா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது.
ஊழிக்காலத்தில் பிரளயத்தின் போது அகண்ட பிரமாண்ட உலகமே அழிந்தது. மீண்டும் இந்த உலகம் இயங்கவேண்டும் என உமையவள் விரதம் இருந்தார். சிவபெருமானின் இடபாகத்தைப் பெற்றாள். அந்த நன்னாளே மகா சிவராத்திரித் திருநாள் என்று விவரிக்கின்றன ஞானநூல்கள்.
இன்னொன்றும் விவரிக்கிறது புராணம்.
பிரம்மாவும் விஷ்ணுவும் சிவபெருமானின் அடிமுடி தேடிய கதையை அறிந்திருப்போம். அடியையும் காண முடியாமல், முடியையும் தொடமுடியாமல் தவித்துப் பிரமித்தார்கள் பிரம்மாவும் விஷ்ணுவும். அவ்வளவு பிரமாண்டமாக, நெருப்புப் பிழம்பாக, அக்னி மலையாக விஸ்வரூபமெடுத்து தரிசனம் தந்தார் ஈசன். அதுவே மகாசிவராத்திரி என்றும் விவரிக்கிறது புராணம்! மகா சிவராத்திரி மகிமை மிக்க நாளாக போற்றப்படுகிறது. மகா சிவராத்திரி நன்னாளில், இரவில் ஒவ்வொரு கால பூஜையாக விமரிசையாக நடைபெறும். மகா சிவராத்திரி நாளில், இரவில் கண்விழித்து, ஆலயத்தில் நடைபெறும் பூஜையைக் கண்ணாரத் தரிசித்துப் பிரார்த்தனை செய்வது நூறு மடங்கு பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.
சிவனாருக்கு உகந்தது வில்வம். சிவபெருமானுக்கு உரிய மகா சிவராத்திரி நாளில், வில்வம் சார்த்தி சிவலிங்கத் திருமேனியைத் தரிசிப்பதும் அன்றைய சிவபூஜையில் கலந்துகொள்வதும் கண் விழிப்பதும் இந்தப் பிறவிக்கடமையை நிறைவேற்றுவதாக அமையும். கர்மவினைகளையெல்லாம் களையச் செய்து அருளுவார் மகேஸ்வரன் என்று போற்றுகிறார்கள் சிவனடியார்கள்.
11ம் தேதி வியாழக்கிழமை மகா சிவராத்திரி. இந்தநாளில், ருத்ரம் பாராயணம் செய்வோம். நமசிவாயம் சொல்வோம். அன்றைய நாளில், இரவில் நடைபெறும் ஒவ்வொரு கால பூஜையைத் தரிசித்துப் பிரார்த்தனைகள் செய்வோம். பிறவிப்பயன் அனைத்தையும் தந்து அருளுவார் தென்னாடுடைய சிவனார்.
தேவாரப் பதிகங்கள் பாடுவோம். சிவனாருடன் நந்திதேவரையும் அம்பாளையும் வணங்கித் தொழுவோம். சிவலிங்கத் திருமேனிக்கு ஒரு கைப்பிடி அளவு வில்வம் வழங்குவோம். வளமும் நலமும் பெற்று இனிதே வாழ்வோம்! நம் வாழ்வையே உயர்த்தித் தந்தருளுவார் சிவனார்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT