Last Updated : 07 Mar, 2021 09:28 AM

 

Published : 07 Mar 2021 09:28 AM
Last Updated : 07 Mar 2021 09:28 AM

மாசி மாதத்தில் குலதெய்வ வழிபாடு; குலம் தழைக்கும்; வம்சம் சிறக்கும்! 

மாசி மாதத்தில் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்யவேண்டும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்றோ குலதெய்வத்தை வீட்டில் இருந்தபடியோ குடும்பத்தினர் அனைவரும் இணைந்து வழிபட வேண்டும். நம் குலம் தழைக்கும். வம்சம் சிறக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். குலதெய்வ வழிபாட்டைச் செய்வதால், மனம் குளிர்ந்து நம்மையும் நம் குடும்பத்தையும் நம் வம்சத்தையும் குலதெய்வம் காத்தருளுவார் என்பது ஐதீகம். முக்கியமாக, குலதெய்வ வழிபாட்டைச் செய்யும் போதெல்லாம் நம் முன்னோர்கள் அதாவது பித்ருக்கள், நம்மை ஆசீர்வதித்து அருளுவார்கள். தெய்வமாகவே இருந்து நம்மை எப்போதும் காப்பார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

வழிபாடு என்பது மிக முக்கியமானது. நம் கர்ம வினைகளை அகற்றவும் நாம் எப்போதோ, எந்த ஜென்மத்திலோ செய்த பாவ புண்ணியங்களுக்கு உரிய பலன்களைக் கொடுப்பதும் நம்முடைய வழிபாடுகளால் கெடுபலன்கள் குறைவாகவும் நற்பலன்கள் அதிகமாகவும் நிகழ்கின்றன என்கிறது சாஸ்திரம்.

வழிபாடுகளில் இஷ்ட தெய்வ வழிபாட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்குச் செல்வதும் பரிகாரத் திருத்தலங்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்வதும் என நம் வழிபாடுகள் அமைந்திருக்கின்றன. இவற்றையெல்லாம் விட மிக மிக முக்கியமான வழிபாடாக குலதெய்வ வழிபாட்டைச் சொல்கிறார்கள் முன்னோர்கள்.

குலதெய்வம் என்பது சக்தி வாய்ந்த தெய்வமாகப் போற்றப்படுகிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் குலதெய்வம் என்பது அமைந்திருக்கும். வாழையடி வாழையாக வம்சம் வளருவது போல், குலதெய்வ வழிபாடும் தொடர்ந்து கொண்டே இருக்கும். நம்முடைய வம்சம், வாழையடி வாழையாக செழித்து வளருவதற்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருப்பது குலதெய்வ வழிபாடு என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
பெரும்பாலும் குலதெய்வம் என்பது கிராம தெய்வங்களாக, கிராம தேவதைகளாகவே அமைந்திருக்கும். இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில், பெண் தெய்வமாகவே அமைந்திருக்கும். இன்றைக்கு தெய்வங்களாக வணங்கப்பட்டு வருவோர், ஒருகாலத்தில் தெய்வத்துக்கு நிகரான, தெய்வம் என்று எல்லோரும் வணங்கக் கூடிய வகையில், வாழ்ந்தவர்களாகவே இருப்பார்கள்.

அதனால்தான், நம் குடும்பத்தில் எப்போதோ சாந்நித்தியத்துடன் வாழ்ந்து வழிகாட்டியவரை, குலதெய்வம் என்று சொல்கிறோம். வணங்குகிறோம். போற்றுகிறோம். ‘எங்க குலவம்சத்தை நீதான் காக்கணும்’ என்று உருகி உருகிப் பிரார்த்தனைகள் செய்கிறோம்.
குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து செய்து வரவேண்டும். சமயம் கிடைக்கும்போதெல்லாம் குலதெய்வத்தை தரிசித்து வருவதை வழக்கமாகக் கொள்ளவேண்டும். வீட்டில் விசேஷம், வைபவம் நடக்கும் போதெல்லாம் முன்னதாக, ‘இந்த விழா நல்லவிதமாக நடப்பதற்கு, எப்போதும் போலவே பக்கத்துணையாக இருக்கவேண்டும்’ என்று வேண்டிக்கொண்டு விசேஷத்தை நடத்த வேண்டும்.

வருடத்துக்கு ஒருமுறையேனும் குலதெய்வக் கோயிலுக்குச் செல்லவேண்டும். குடும்ப முறைப்படி மாவிளக்கு ஏற்றுவதோ, பொங்கல் படையலிடுவதோ செய்யவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

குலதெய்வத்தை எந்தநாளும் வணங்கலாம். எப்போது வேண்டுமானாலும் தரிசிக்கலாம். முக்கியமாக, மாசி மாதம் என்பது குலதெய்வத்தை வணங்குவதற்கு அற்புதமான மாதம். மாசி மாதத்தில் ஏதேனும் ஒருநாளில், குலதெய்வத்தை வழிபடுவோம். குலதெய்வக் கோயிலுக்குச் சென்றும் வழிபடலாம். வீட்டில் விளக்கேற்றி, மாவிளக்கிட்டு குடும்பமாக அமர்ந்து பிரார்த்தனை செய்துகொள்ளலாம்.

குலதெய்வ வழிபாட்டைச் செய்வதால், மனம் குளிர்ந்து நம்மையும் நம் குடும்பத்தையும் நம் வம்சத்தையும் குலதெய்வம் காத்தருளுவார் என்பது ஐதீகம். முக்கியமாக, குலதெய்வ வழிபாட்டைச் செய்யும் போதெல்லாம் நம் முன்னோர்கள் அதாவது பித்ருக்கள், நம்மை ஆசீர்வதித்து அருளுவார்கள். தெய்வமாகவே இருந்து நம்மை எப்போதும் காப்பார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x