Published : 03 Mar 2021 01:09 PM
Last Updated : 03 Mar 2021 01:09 PM
மாசி மாத சஷ்டியில் ஞானகுரு முருகக் கடவுளை வணங்குவோம். வீடு மனை யோகம் தந்திடுவார் வேலவன்.
மாசி மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய மாதம். பூஜைகளுக்கும் ஹோமங்களுக்கும் உகந்த மாதம். உபநயனம் முதலான வைபவங்களை நடத்துவதற்கான மாதம். கலைகளையும் புதிதான கல்வி முதலான விஷயங்களையும் கற்றுக் கொள்ளத் தொடங்குவதற்கான மாதம் என்றெல்லாம் போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மாசி மாதத்தின் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் விசேஷமானது. ஆடி வெள்ளி எப்படி விசேஷமானதாகப் போற்றப்படுகிறதோ அதேபோல, மாசி மாத செவ்வாய்க்கிழமை சிறப்புக்கு உரிய நாளாகக் கொண்டாடப்படுகிறது.
மாசி மாதம் என்பது சிவபெருமானுக்கு உரிய மாதம். மாதந்தோறும் வருகிற சிவராத்திரி விரதம் மேற்கொண்டு சிவபூஜை செய்வதற்கு உகந்த நாளாகப் போற்றப்படுகிறது என்றாலும் மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று வழிபடப்படுகிறது.
மாசி மாதத்தில், பல ஆலயங்களில் மாசிப் பெருந்திருவிழா என்றும் மாசித் திருவிழா என்றும் பிரம்மோத்ஸவ விழா என்றும் விமரிசையாக நடந்தேறும். மாசிக்கயிறு பாசி படியும் என்பார்கள். மாசி மாதத்தில்தான் காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது.
அம்பாளுக்கு உகந்த மாதமாகவும் சிவனாருக்கு உகந்த மாதமாகவும் அமைந்திருக்கும் மாசி மாதத்தில், முருகப்பெருமானை வழிபடுவது சிறப்புவாய்ந்தது. குறிப்பாக, மாசி சஷ்டி மகத்துவம் மிக்கது. சஷ்டியில் கந்தனை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் பறந்தோடும் என்பது ஐதீகம்.
மாசி மாதத்தின் சஷ்டி நாளைய தினம் 4.3.2021. முருகப்பெருமான், குருவாகவும் திகழ்கிறார். குருவுக்குக் குருவாகவும் அற்புதங்கள் நிகழ்த்தியுள்ளார் என விவரிக்கிறது புராணம்.
அப்பன் சிவனாருக்கே பிரணவப் பொருளை எடுத்துரைத்தவராயிற்றே வேலப்பன். அதனால்தான் முருகக் கடவுளுக்கு சுவாமிநாத சுவாமி எனும் திருநாமம் அமைந்தது. மேலும் ஞானகுரு என்று முருகனைப் புகழ்கிறார்கள் பக்தர்கள்.
நாளைய தினம் 4ம் தேதி சஷ்டி. வியாழக்கிழமையும் கூட. வியாழக்கிழமையை குருவாரம் என்பார்கள். குருவார நன்னாளில், ஞானகுருவெனத் திகழும் முருகக் கடவுளைப் போற்றுவோம். கண்ணாரத் தரிசிப்போம். கந்தசஷ்டி கவசத்தை வாயாரப் பாடுவோம். நம் கவலைகளையும் துக்கங்களையும் மனதாரச் சொல்லிப் பிரார்த்திப்போம்.
முருகப்பனுக்கு செவ்வரளி முதலான மலர்களைச் சூட்டி, சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வழிபடுவோம். அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று தொடர்ந்து வேண்டிக்கொண்டால், வீடு மனை வாங்கும் யோகத்தைத் தந்தருளுவார் வள்ளி மணாளன். துக்கத்தைப் போக்கி அருளுவார். கஷ்டத்தை நீக்கி அருளுவார் கந்தகுமாரன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT