Published : 05 Nov 2015 10:58 AM
Last Updated : 05 Nov 2015 10:58 AM

திருத்தலம் அறிமுகம்: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயம் - தலவிருட்சம் நான்கு

வருணனின் மைந்தன் வாருணி துர்வாச முனிவரின் தவத்தைக் கலைத்த பாவத்திற்காக ஆட்டுத் தலையுடனும் யானை உடம்புடனும் இருக்கச் சபிக்கப்பட்டான். அப்படிச் சபிக்கப்பட்ட இடம் தான் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் திருக்கோயில்.

சூரியன் பூஜித்த தலம்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ளது திருவாடானை. இங்குள்ள ஆதிரெத்தினேஸ்வரர் திருத்தலம் தேவாரப் பாடல் பெற்றது. தேவாரப் பாடல்களில் 120 பாடல்கள் அதிபலன் கூடியவை. அவற்றில் முக்கியமானது திருஞானசம்பந்தர் பாடிய திரு வாடானை திருப்பதிகம். திருஞான சம்பந்தர், சேக்கிழார் பெருமான், அருணகிரிநாதர், குமரகுருபரர், வள்ளலார் என அத்தனை பேராலும் பாடல்பெற்ற திருத்தலம் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் திருத்தலம். பிரம்மாவின் வழிகாட்டுதல்படி நீலரத்தின மணியால் சூரியன் ஆதிரெத்தினேஸ்வரருக்குப் பூஜை செய்ததால் இதை ஆதிரெத்தினபுரம் என்றும் சொல்கிறது புராணம்.

இத்திருத்தலத்தைச் சுற்றி 64 வகையான மூலிகைகளும் 54 வகையான மலர்களும் உள்ளன. மணிமுத்தாறு, சூரிய தீர்த்தம், வருண தீர்த்தம், அகத்திய தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், வாருணி தீர்த்தம், காமதேனு தீர்த்தம் ஆகிய ஏழு தீர்த்தங்களும் திருக்கோயிலைச் சுற்றிலும் உள்ளன. பெரும்பாலும் திருக்கோயில்களில் ஒரே ஒரு தல விருட்சம் தான் இருக்கும். ஆனால், ஆதிரெத்தினேஸ்வரருக்கு பாரிஜாதம், குருக்கத்தி, கடம்பம், வில்வம் ஆகிய நான்கு தல விருட்சங்கள்.

நீலரத்தினக்கல் லிங்கம்

என்றும் பதினாறாய் வாழும் வரம் பெற்ற மார்க்கண்டேயன் தனது பெற்றோருடன் வந்து இங்கு தவம் செய்ததாக சொல்லப்படுகிறது. இங்குள்ள ஆதிரெத் தினேஸ்வரர் லிங்கம் நீலரத்தினக் கல்லால் வடிக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பு. தேவி, இங்கே சிநேக வல்லி அம்மையாக வீற்றிருக்கிறாள். வைகாசி விசாக திருவிழா பத்து நாட்கள், ஆடிப் பூரத் திருவிழா பத்து நாட்கள், மூன்று நாள் திருக்கல்யாண உற்சவம், நவராத்திரித் திருவிழா பத்து நாட்கள்.

சாபம் நீங்கிய தலம்

துர்வாச முனிவரால் சபிக்கப்பட்ட தனது மைந்தன் வாருணிக்கு சிவபெருமானிடம் சாப விமோசனம் கேட்கிறார் வருணன். 48 நாட்கள் ஆதிரெத் தினேஸ்வரர் கோயிலில் உள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி ஆதிரெத்தினேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வர சாபம் நீங்கும் என்று உபாயம் சொன்னார் சிவபெருமான். அதுபடியே வாருணிக்கு சாபம் நீங்கியதால் இத்திருத்தலத்தை நோய்நொடி தீர்க்கும் திருத்தலம் இன்றைக்கும் துதிக்கப்படுகிறது. இங்குள்ள தலவிருட்சங்களின் வேரிலிருந்து திருமண் எடுத்து உடம்பில் பூசிக்கொண்டாலும் தண்ணீரில் கலந்து பருகினாலும் நோய் நொடிகள் பறந்து போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x