Published : 12 Nov 2015 12:15 PM
Last Updated : 12 Nov 2015 12:15 PM
திருவண்ணாமலையில் எத்தனையோ சித்தர்கள், மகான்கள் இருந்துள்ளார்கள். இன்றும் இருக்கிறார்கள். அனைவரும் அறிந்த மகான் ரமண மகரிஷி, சேஷாத்திரி சுவாமிகள், விசிறி சாமியார் என்ற அந்த வரிசை நீள்கிறது. இந்த ஊரில் வாழ்ந்த பெண் சித்தர்களில் இருவர் குறிப்பிடத்தக்கவர்கள். ஒருவர் பெரிய கோபுரம் கட்டிய அம்மணியம்மாள் என்பவர். மற்றொருவர் பெண் சித்தர் சிவஞானி சடையாச்சியம்மாள். இவர் சடை சாமியார் என்றும் அழைக்கப்பட்டுவந்தார்.
இவரது இயற்பெயர் சண்முகத்தம்மாள். இவரது சொந்த ஊர் ராஜபாளையம் என்றாலும் இவரது ஜீவ சமாதி உள்ள இடம் திருவண்ணாமலை. தனது நாற்பதாம் வயதில் திருவண்ணாமலை வந்த இவர் இல்லற வாழ்க்கையைத் துறந்து துறவு பூண்டவர்.
திருவண்ணாமலையில் முலைப்பால் தீர்த்தம், பலாமரத்தடி குகை ஆகியவற்றில் வாழ்ந்துவந்தார். அண்ணாமலையாருக்குத் தும்பைப் பூவால் கட்டிய மாலையை தினமும் சாற்றிவந்தார். ஈசனை எண்ணிப் பல மணி நேரம் தியானம் செய்யும் வழக்கம் கொண்டவர். தும்பைப் பூ போட்டால், துன்பம் தீரும், இது சிவனுக்குப் பிரியமானது என்று பக்தர்களுக்கு எடுத்துரைப்பாராம் இந்த அம்மையார்.
வெயில், மழை, புயல் காற்று என்று எந்த இயற்கைச் சீற்றத்திற்கும் அஞ்சாமல் தினந்தோறும் கோயிலுக்கு வந்த இந்த அம்மை, நடுவில் ஒரு வார காலம் தரிசனம் செய்யக் கோயிலுக்கு வரவில்லை. அம்மைக்கு என்ன ஆனதோ என்று அர்ச்சகர் கவலையுற்றார். அன்று அர்ச்சகர் கனவில் தோன்றிய சிவன் குளத்தில் நீருக்குள் அவர் அமிழ்ந்திருப்பதாக எடுத்துக் கூறினாராம். குளத்தில் உள்ள படிக்கட்டுகளுக்கு அடியில் உள்ள இடைவெளியில் மாட்டிக்கொண்டபடியே படுத்த நிலையில் தியானத்தில் ஆழ்ந்துவிட்டாராம் சடையாச்சி அம்மையார்.
ஐந்து நாட்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்தபொழுதும், அவர் உயிருடன் மீட்க்கப்பட்டாராம். அதன் பிறகு பல ஆண்டுகள் வாழ்ந்த இவர் திருவண்ணாமலையிலேயே ஜீவ சமாதி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இவரின் சடை பதினாறு அடி நீளமும், ஒரு அடி அகலமும் கொண்டு இருந்தததால் சடையாச்சி அம்மையார் என்ற பெயர் ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT