Published : 27 Feb 2021 03:54 PM
Last Updated : 27 Feb 2021 03:54 PM
ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சித்திரைத் தேரில் காட்சி தந்த அம்மனை வழிபட்டனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று (பிப். 27) காலை இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நடைபெற்றது.
இதற்காக, ஆனைமலை - சேத்துமடை சாலையில் உள்ள குண்டத்து காட்டில் 52 அடி நீளத்தில் 11 அடி அகலத்தில் குண்டம் அமைக்கப்பட்டது. அதில், பக்தர்கள் காணிக்கையாக அளித்த சுமார் 15 டன் விறகு கொண்டு தீ வளர்க்கப்பட்டது. இதனைக் காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் நேற்று இரவிலிருந்து குண்டம் பகுதியில் குவிந்தனர்.
குண்டம் இறங்கும் பக்தர்கள் இன்று (பிப். 27) காலை ஆனைமலை உப்பாற்றில் புனித நீராடி, சிறப்புப் பூஜை செய்தனர். பின்னர், கழுத்தில் செவ்வரளி மாலை அணிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், குண்டம் மைதானத்தை வந்தடைந்தனர். அம்மனின் சூலாயுதத்துக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பின்னர், அம்மன் அருளாளி குப்புசாமி, மல்லிகைப்பூ பந்தை குண்டத்தில் உருட்டிவிட்டு அம்மனின் உத்தரவு பெற்ற பின்னர், தலைமை முறைதாரர் மனோகரன் முதலில் குண்டத்தில் இறங்கினார். அதைத் தொடர்ந்து, அம்மன் அருளாளி குப்புசாமி, மயான அருளாளி அருண் ஆகியோர் குண்டத்தில் இறங்கினர்.
இன்று மதியம் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர். இவ்விழாவில், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி, வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு, கோயில் உதவி ஆணையர் சி.கருணாநிதி உள்ளிட்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
குண்டம் இறங்கும் விழாவையொட்டி இன்று அம்மனுக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. குண்டம் இறங்கிய பக்தர்களுக்கு வெண்ணை பிரசாதமாக வழங்கப்பட்டது. குண்டம் திருவிழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT