Published : 26 Feb 2021 05:22 PM
Last Updated : 26 Feb 2021 05:22 PM
மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி இன்று நடைபெற்றது. இதில் அதிகாலை முதல் மாலை வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று மாசி மக விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதேவிழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாசி மக விழாவினை முன்னிட்டு,கடந்த பிப்.17 முதல் ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கவுதமேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் உள்ளிட்ட 6 சிவாலயங்களில் பத்து நாள் உற்சவம் நடைபெற்றது.
விழாவின் 5-ம் நாள் ஓலைச்சப்பரமும், 9 ம் நாள் விழாவில் திருத்தேரோட்டமும் நடைபெற்றது. மீதமுள்ள பாணபுரிஸ்வரர், கம்பட்டவிஸ்வநாதர், கொட்டையூர் கோடீஸ்வரர், சாக்கோட்டை அமிர்தகலசநாதர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர் ஆகிய 6 சிவன் கோயில்களில் மாசி மகத்தன்று மட்டும் ஏகதினம் உற்சவமாகக் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று காலை ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கெளதமேஸ்வரர், பாணபுரீஸ்வரர், அமிர்தகலசநாதர், கம்பட்டவிஸ்வநாதர், கோடீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 12 சிவன் கோயிலிருந்து சுவாமிஅம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பட்டு, ரிஷப வாகனங்களில் மகாமக குளத்தின் நான்கு கரையில் எழுந்தருளினர்.
பின்னர் அந்தந்தக் கோயிலின் அஸ்திரதேவர்களுக்கு 21 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அஸ்திரதேவர்கள் மகாமகக் குளத்தில் நீராடியதைத் தொடர்ந்து நான்கு கரைகள் மற்றும் குளத்தில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாமகக் குளத்தில் பக்தர்கள் நீராட அனுமதி இல்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று தெரிவித்திருந்தார். இதற்கு பக்தர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இன்று காலை முதல் பக்தர்கள் நீராட போலீஸார் அனுமதி அளித்தனர்.
சக்கரபாணி கோயில் தேரோட்டம்
மாசி மகத்தை முன்னிட்டு இன்று காலை கும்பகோணம் சக்கரபாணி கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரின் வடம்பிடித்து இழுத்தனர். மாசிமக உற்சவத்தின் முக்கிய நாளான நேற்று காலை சக்கரபாணிசுவாமி சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயாருடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். பின்னர் காலை 8.30 மணியளவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேர் வடம்பிடித்து இழுத்தனர்.
பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவம்
அதே போல் மாசிமகத்தை முன்னிட்டு கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு 5 நாட்கள் கோயிலுக்குள்ளேயே உள்புறப்பாடு நடைபெற்றது. இறுதி நாளான இன்று, கோயிலின் பின்புறமுள்ள பொற்றாமரைக் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
இதில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சாரங்கபாணி சுவாமி தெப்பத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். காலை, மாலை தெப்ப உற்சவம் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT