Published : 25 Feb 2021 04:11 PM
Last Updated : 25 Feb 2021 04:11 PM
மாசிப் பெருவிழா பிரம்மோத்ஸவ தருணத்தில், திருவொற்றியூர் கோயிலில் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தை தரிசிப்போம். கல்யாண மாலை தோள் சேருவது உறுதி!
சென்னைக்கு அருகே உள்ளது திருவொற்றியூர். இந்தத் தலத்தின் நாயகனான சிவனாரையும் நாயகியான உமையவளையும் ஒருமுறையேனும் தரிசித்தால், மெய்சிலிர்த்துப் போவோம். வாழ்வில் சகல நன்மைகளையும் பெற்று இனிதே வாழ்வோம். முக்கியமாக, இங்கே சிவ பார்வதிக்கு நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தைத் தரிசித்தால், விரைவில் கல்யாண மாலை தோள் சேரும் என்பது ஐதீகம்.
மிகப்பிரமாண்டமான ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் சிவனாரின் திருநாமம் ஸ்ரீஆதிபுரீஸ்வரர். தியாகராஜர் என்றும் திருவொற்றீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பாளின் திருநாமம் ஸ்ரீதிரிபுரசுந்தரி.
அற்புதமான இந்தத் தலத்தில், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் பெருமான் முதலான மூவரும் தேவாரம் பாடிப் பரவசம் அடைந்துள்ளனர். அதுமட்டுமா? சிவபெருமானையே தன் தோழனாக பாவித்த சுந்தரர், சங்கிலி நாச்சியாரைத் திருமணம் புரிந்து கொண்ட திருத்தலமும் இதுதான்! பட்டினத்தார், சிவனாரைத் தொடர்ந்து தரிசித்து வந்தார். இங்கேயே இந்தப் புண்ணிய பூமியிலேயே முக்தி அடைந்தார்.
சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளியுள்ள ஆதிபுரீஸ்வரருக்கு கார்த்திகை பெளர்ணமி நன்னாளில், கவசம் எடுக்கப்பட்டு, புனுகு சாம்பிராணி தைலாபிஷேகம் விமரிசையாக நடைபெறுகிறது. வருடத்தில், இதையொட்டிய மூன்று நாட்கள் மட்டும் கவசமில்லாத சிவலிங்கத் திருமேனியைத் தரிசிக்கலாம்.
அம்பாள் திரிபுரசுந்தரி. வடிவுடைநாயகி என்றும் அழைக்கப்படுகிறாள். அதேபோல், வட்டப்பாறையம்மன் சந்நிதியும் சாந்நித்தியம் மிக்கது என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.
இந்தத் தலத்தில், வருடந்தோறும் மாசிப் பெருந்திருவிழாவாக பிரம்மோத்ஸவ விழா கோலாகலமாக நடைபெறுகிறது. கடந்த 17ம் தேதியன்று தொடங்கி, 18ம் தேதி கொடியேற்றப்பட்டு தினமும் சிறப்பு ஆராதனைகள், திருவீதியுலாக்கள் என சிறப்புற நடைபெற்றுக்கொண்டிருக்கிறது பிரம்மோத்ஸவ மாசிப் பெருவிழா.
விழாவின் முக்கிய அம்சமாக, திருத்தேரோட்டமும் திருக்கல்யாண வைபவமும் திகழ்கிறது. 24ம் தேதி திருத்தேரோட்ட வைபவம் நடைபெற்றது. நாளைய தினம் 26ம் தேதி ஸ்ரீகல்யாண சுந்தரர் திருக்கல்யாண வைபவம் காலை 9 முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.
திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயிலில் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தை தரிசித்துப் பிரார்த்தித்தால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்பது ஐதீகம்.
சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமையில், மாசிப் பெருவிழா பிரம்மோத்ஸவ தருணத்தில், திருவொற்றியூர் கோயிலில் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தை தரிசிப்போம். கல்யாண மாலை தோள் சேருவது உறுதி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT