Published : 24 Feb 2021 05:08 PM
Last Updated : 24 Feb 2021 05:08 PM
மாசி மகம் நட்சத்திர நன்னாளில், நிறைந்த பெளர்ணமி நாளில், இல்லத்தை சுத்தமாக்கி, விளக்கேற்றி குலதெய்வ வழிபாடு செய்வோம். அருகில் உள்ள சிவாலயத்துக்கும் பெருமாள் கோயிலுக்கும் சென்று சிவனாரையும் பெருமாளையும் மனதார வழிபடுவோம். பிறவிப்பயனை அடையலாம். வழக்கு முதலான சிக்கல்களில் இருந்து விடுபடலாம். குடும்பத்தில் தீயசக்திகள் அண்டாமல் குலதெய்வம் நம்மைக் காத்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
மாசி மாதம் என்றாலே மகம் நட்சத்திரம் நினைவுக்கு வரும். மகம் நட்சத்திரம் என்றாலே மாசி மகம் நினைவுக்கு வரும். மாசி மகம் என்றாலே வடக்கே நடைபெறுகிற கும்பமேளாவும், தெற்கே கும்பகோணத்தில் நடைபெறுகிற மகாமகத் திருவிழாவும் நினைவுக்கு வரும்.
மாதந்தோறும் மகம் நட்சத்திரம் வரும். மாசி மாதத்தில் வருகிற மகம் நட்சத்திர நாள், மாசி மகம் என்று கொண்டாடப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம் என்று போற்றப்படுகிறது.
மாசி மாதத்தின் மகம் நட்சத்திர நாளில், தமிழகத்தின் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளும் ஆராதனைகளும் நடைபெறும். இந்த நாளில், ஏராளமான பக்தர்கள், விரதம் மேற்கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். வீட்டில் மாவிளக்கிட்டு படையலிட்டு குலதெய்வத்தை வழிபடும் வழக்கமும் உண்டு.
மாசி மக நன்னாளில், குலதெய்வ வழிபாடு செய்வது நம் குலத்தைக் காக்கும். வம்சத்தை தழைக்கச் செய்யும். வாழ்வாங்கு வாழ வைக்கும். வம்சம் வாழையடி வாழையென தழைத்து வளரும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மாசி மாதத்தில், மஞ்சள் சரடு மாற்றிக்கொள்வார்கள் பெண்கள். காலையும் மாலையும் வீட்டு வாசலிலும் பூஜையறையிலும் விளக்கேற்றி, சர்க்கரைப் பொங்கல் அல்லது பால் பாயசம் முதலான நைவேத்தியங்கள் செய்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவதும் முன்னோர்களுக்கு நமஸ்கரித்து பிரார்த்தனைகள் செய்வதும் இதுவரை இருந்த தடைகளையெல்லாம் தகர்த்து அருளும் என்பது ஐதீகம்.
மாசி மக நாளில், பெண் தெய்வங்களையும் கிராம தேவதைகளையும் வழிபடுவது மிகுந்த சக்தியை வழங்கும். குடும்பத்தில் ஒற்றுமையை மேம்படுத்தும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேற்றுமைகள் அகலும்.
அனைத்து சிவாலயங்களிலும் விசேஷ வழிபாடுகள் அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடந்தேறும். அதேபோல், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூருக்கு அருகில் உள்ள திருக்கோஷ்டியூர் ஸ்ரீசெளம்ய நாராயண பெருமாள் கோயிலில், பத்து நாள் விழாவாக மாசிப் பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெறும்.
இந்த நாளையொட்டி, மாசி மகத்துக்கு முந்தைய நாள், மாசி மகம், இதற்கு அடுத்தநாள் என மூன்று நாட்களில் ஏதேனும் ஒருநாளில்,. கோயிலின் தெப்பக்குளத்தில், விளக்கேற்றிவிடுவார்கள் பக்தர்கள். குறிப்பாக, பெண்கள் விளக்கேற்றிவிட்டு, அங்கிருந்து ஏதேனும் ஒரு விளக்கை எடுத்து வந்து, வீட்டுப் பூஜையறையில் தீப தூப ஆராதனைகள் செய்து வருவார்கள். இதனால், குடும்பத்தில் வாட்டிக் கொண்டிருந்த கடன் முதலான தொல்லைகளில் இருந்து விடுபடலாம். வீட்டில் இதுவரை தடைப்பட்டிருந்த திருமணம் முதலான சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும் என்பது ஐதீகம்.
மாசி மகம் நட்சத்திர நன்னாளில், நிறைந்த பெளர்ணமி நாளில், இல்லத்தை சுத்தமாக்கி, விளக்கேற்றி குலதெய்வ வழிபாடு செய்வோம். அருகில் உள்ள சிவாலயத்துக்கும் பெருமாள் கோயிலுக்கும் சென்று சிவனாரையும் பெருமாளையும் மனதார வழிபடுவோம். பிறவிப்பயனை அடையலாம். வழக்கு முதலான சிக்கல்களில் இருந்து விடுபடலாம். குடும்பத்தில் தீயசக்திகள் அண்டாமல் குலதெய்வம் நம்மைக் காத்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT