Last Updated : 24 Feb, 2021 03:31 PM

 

Published : 24 Feb 2021 03:31 PM
Last Updated : 24 Feb 2021 03:31 PM

மாசி மக நாளில் சிவனாருக்கு வில்வார்ச்சனை!  மங்கல வாழ்வு தருவர்; மங்காத செல்வ்ம் தருவார்! 

மாசி மக நன்னாளில்... சிவாலயத்துக்குச் செல்வதும் சிவலிங்கத் திருமேனியை வில்வார்ச்சனை செய்து கண்ணாரத் தரிசித்து மனதாரப் பிரார்த்தனை செய்வதும், மங்கல காரியங்களை நடத்தித் தரும். மங்காத செல்வத்தைத் தந்தருளும் என்பது ஐதீகம்!

மாசி மகம் என்றாலே தென்னகத்தில் நினைவுக்கு வருவது கும்பகோணம் புண்ணிய க்ஷேத்திரம். மாதந்தோறும் மகம் நட்சத்திரம் வரும். மாசி மாதத்தில் வருவது மாசி மகம் என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது. பனிரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை வருவதை மகாமகம் என்று அழைக்கிறோம்.

இப்படியாக மாசி மாதத்துக்கும் மாசி மகத்துக்குமான பெருமைகள் இருக்கின்றன. கோயில் நகரம் கும்பகோணத்தில் மாசி மகத்துக்குத் தொடர்பு கொண்ட திருத்தலம் ஸ்ரீஆதி கும்பேஸ்வரர் கோயில்.

இந்தக் கோயில் மட்டுமின்றி, ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயில், ஸ்ரீநாகேஸ்வரர் கோயில், ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயில், ஸ்ரீஅபிமுகேஸ்வரர் கோயில், ஸ்ரீவியாழ சோமேஸ்வரர் முதலான கோயில்களில் மாசி மக நன்னாளில், சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும்.
மாசி மக நாளில், இந்தத் தலங்களுக்குச் சென்று தரிசித்து மனதார பிரார்த்தனை செய்துகொள்ளலாம். மகாமகக் குளத்தில் நீராடி, அருகருகில் அமைந்திருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவார்கள் பக்தர்கள்.

அதேபோல், ஸ்ரீகெளதமேஸ்வரர் கோயில், ஸ்ரீபாணபுரீஸ்வரர் கோயில், ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயில், ஸ்ரீஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோயில், கோடீஸ்வரர் கோயில், ஸ்ரீஅமிர்தகலச நாதர் கோயில் முதலான கோயில்களிலும் மாசி மகத்தை முன்னிட்டு விழாக்களும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும்.

மாசி மக நாளில், காவிரியில் அல்லது மகாமகத் திருக்குளத்தில் நீராடிவிட்டு, இந்தக் கோயில்களுக்குச் சென்று சிவ தரிசனம் செய்வதும், நமசிவாயம் சொல்லி சிவனாரைப் பிரார்த்திப்பதும் அளவற்ற பலன்களை அள்ளித் தரும். பிரம்மஹத்தி முதலான தோஷங்கள் விலகும். கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

மாசி மக நாளில், உங்களால் முடிந்த அளவுக்கு, அருகருகே உள்ள இந்தக் கோயில்களுக்குச் சென்று, ஒரேயொரு வில்வமேனும் சார்த்தி வேண்டிக்கொள்ளலாம். அதேபோல், நம் வீட்டுக்கு அருகில் உள்ள சிவாலயத்துக்குச் செல்வதும் சிவலிங்கத் திருமேனியை வில்வார்ச்சனை செய்து கண்ணாரத் தரிசித்து மனதாரப் பிரார்த்தனை செய்வதும், மங்கல காரியங்களை நடத்தித் தரும். மங்காத செல்வத்தைத் தந்தருளும் என்பது ஐதீகம்!

27ம் தேதி மாசி மகத் திருநாள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x