Published : 24 Feb 2021 02:37 PM
Last Updated : 24 Feb 2021 02:37 PM
மாசி மாதம் மகத்தான மாதம். மாசி மாதத்தில் நம்முடைய வழிபாடுகளும் பூஜைகளும் மும்மடங்கு பலன்களைக் கொடுக்கும் என்பது ஐதீகம். மாசி மாதத்தின் செவ்வாய்க்கிழமை மிக விசேஷமான நாள்.
அதேபோல், மாசி மாதத்தில் வெள்ளிக்கிழமைகளில், சுமங்கலிகளை அழைத்து அவர்களுக்கு பாத பூஜை செய்து, அவர்களுக்கு முடிந்தால் மங்கலப் பொருட்களுடன் புடவை வைத்துக் கொடுக்கலாம். அல்லது மங்கலப் பொருட்களுடன் ஜாக்கெட் பிட் வைத்து தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள் சரடு, குங்குமம், மஞ்சள் முதலானவற்றை வழங்கி நமஸ்கரிக்கலாம். சுமங்கலிகளை நமஸ்கரிப்பது விசேஷம். அதுவும் மாசி மாதத்தில் வேண்டிக்கொள்வது இன்னும் மகத்தான பலன்களைத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
மாசி மாதத்தின் மகம் நட்சத்திரம் ரொம்பவே மகத்தானது. மாதந்தோறும் மகம் நட்சத்திர நாள் உண்டு என்றபோதும் மாசி மாதத்தின் மகம் நட்சத்திர நாள், மாசி மகம் என்றே போற்றப்படுகிறது. இந்தநாளில், புண்ணிய நீராடுவது பாவங்களைப் போக்கும்; புண்ணியங்களைத் தந்தருளும் என்கின்றன ஞானநூல்கள்.
மாதந்தோறும் சிவராத்திரி நன்னாள் வருவது உண்டு. ஆனாலும் மாசி மாதத்தில் வருகிற சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது. மகா சிவராத்திரி நன்னாளில், சிவனாருக்கு நள்ளிரவிலும் பூஜைகள் நடைபெறும். விடிய விடிய ஒவ்வொரு கால பூஜையும் விமரிசையாக நடைபெறும்.
மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜகத்தையே ஆள்வார்கள் என்றொரு சொல் உண்டு. அதேபோல், மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. மாசி மாதத்தில்தான் பெண்கள் ’காரடையான் நோன்பு’ எனும் பூஜையைச் செய்வார்கள். புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொண்டு வயது முதிர்வது சிறப்பானது.
மாசி மகம் என்பது விசேஷமான நாள். இந்தநாளில் செய்யும் தானங்களும் தர்மங்களும் பெருகும் என்பது ஐதீகம். மாசி மக நன்னாளில், புனித நீராடுவது விசேஷம். நம் வீட்டுக்கு அருகில் உள்ள ஆறு குளங்களில், நதிகளில் நீராடினாலே புண்ணியம்தான். முக்கியமாக, கோயில் நகரம் கும்பகோணத்தில் உள்ள மகாமகத் திருக்குளத்தில் நீராடுவது நம் பாவங்களையெல்லாம் நிவர்த்தியடையச் செய்யும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மாசி மக நாளில், குலதெய்வத்தைத் தரிசிப்பதும் மகத்தான பலன்களைக் கொடுக்கக் கூடியது. எனவே மாசி மகம் நன்னாளில், புனித நீராடுவோம். குலதெய்வத்தை வணங்குவோம்.
27ம் தேதி சனிக்கிழமை மாசி மகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT