Published : 24 Feb 2021 11:28 AM
Last Updated : 24 Feb 2021 11:28 AM
‘மாறாத பிரியம் வைப்பதுதான் பிறவிக்கான பயன்’ என காஞ்சி மகான் அருளியுள்ளார்.
நடமாடும் தெய்வம் என்று போற்றப்படுபவர் காஞ்சி மகா பெரியவா. ஆன்மிகத்தையும் சாஸ்திர சம்பிரதாயத்தையும் மனித வாழ்வையும் முக்கியமாக இறை பக்தியையும் மக்களுக்கு மிக எளிதாகச் சொல்லி அருளியவர் என்று மக்கள் கொண்டாடுகின்றனர். கடந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த மகான் என்று வணங்கி வருகின்றனர்.
காஞ்சி மகாபெரியவா நமக்கு வழங்கிய வாழ்வியல் நெறியை உள்ளடக்கியவைதான்... ‘தெய்வத்தின் குரல்’ எனும் பொக்கிஷ நூல். இதில் ஏராளாமான சத்விஷயங்களை அவர் நமக்கு போதித்து அருளியிருக்கிறார்.
பிறவி என்பது கடனைக் கழிப்பதற்காகவே எடுக்கப்படுகிறது என தர்மசாஸ்திர நூல்கள் விவரிக்கின்றன. முந்தைய பிறவியின் பயனாகவும் வினையாகவும் இந்தப் பிறவியை நாம் எடுக்கிறோம். அடுத்த பிறவி என்று இல்லாமல் இருப்பதற்காகத்தான் பூஜைகளும் வழிபாடுகளும் தானங்களும் தர்மங்களும் வகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்கின்றன ஞானநூல்கள்.
காஞ்சி மகான் என்று போற்றி வணங்கப்படும் மகா பெரியவா, ‘தெய்வத்தின் குரல்’ எனும் நூலில், பிறவி குறித்தும் பிறவியில் நமக்கு உண்டான முக்கியமான கடமை குறித்தும் மிக எளிமையாக விளக்கியிருக்கிறார்.
காஞ்சி மகான் சொல்கிறார்...
‘’பிறவி எடுத்திருப்பதன் பிரயோஜனமே யாரிடமாவது ஒருவரிடம் மாறாத பிரியம் வைப்பதுதான். நாம் பிரியம் வைக்கிற பொருள், நம்மோடு எந்தக் காலத்திலும் சண்டைக்கு வராததாக இருக்கவேண்டும். நம்மை விட்டு எக்காலத்திலும் பிரிந்து போகாததாக இருக்கவேண்டும்.
அந்த வஸ்துவிடம் பிரியம் வைத்தால்தான் நம் ஜன்மம் பிரயோஜனம் உடையதாகும். நாம் எல்லோரும் எந்த வஸ்துவினிடம் இருந்து உண்டாகி, எந்த வஸ்துவினோடு முடிவில் ஐக்கியமாகி விடுகிறோமோ, அந்த வஸ்துவினிடம் வைக்கிற பிரியம்தான் சாஸ்வதமானது. அந்த வஸ்துவைத்தான் ஸ்வாமி என்கிறோம்’’.
இவ்வாறு ‘தெய்வத்தின் குரல்’ நூலில், காஞ்சி மகான் அருளியிருக்கிறார். இப்படி எளிமையும் இனிமையுமாக மகா பெரியவா சொல்லி அருளிய ஆன்மிக விஷயங்களும் பக்தி மார்க்க சிந்தனைகளும் வாழ்க்கைப் பாடங்களும் ஏராளமாக இருக்கின்றன.
காஞ்சி மகானைப் போற்றுவோம். அவர் அருளிய கருத்துகளை உள்வாங்கி இந்த வாழ்க்கையைக் கடைத்தேற்றுவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT