Published : 23 Feb 2021 01:13 PM
Last Updated : 23 Feb 2021 01:13 PM
மாசி எனும் மகத்தான மாதத்தில், இறை வழிபாட்டில் கவனம் செலுத்துவோம். உரிய ஸ்லோகங்களையும் பாடல்களையும் விஷ்ணு சகஸ்ர நாமம், கனகதாரா ஸ்தோத்திரம், அபிராமி அந்தாதி முதலானவற்றையும் ஜபித்து வருவது, நம்மை நல்வழிப்படுத்தும். சத்விஷயங்கள் அனைத்தையும் தந்தருளும் என்பது ஐதீகம்!
மாசி மாதத்துக்கு ஏராளமான சிறப்புகள் உள்ளன. மாசி மாதம் என்பது விசேஷமான மாதம். வழிபாட்டுக்கான மாதம். ஆலயத்தில் சென்றும் வீட்டில் இருந்தபடியும் பூஜைகள் செய்யக் கூடிய மாதம். தெய்வங்களுக்கு உரிய ஸ்லோகங்களையும் காயத்ரியையும் ஜபித்து வேண்டிக்கொள்கிற மாதம்.
மாசி மாதத்தில் உபநயனம், புதுமனைப் புகுவிழா, புதிய கலைகளைக் கற்றறிதல், புதிய கல்வியைத் தேர்வு செய்து படித்தல் என்பவையெல்லாம் செய்வதற்கு விசேஷமான மாதம்.
அகத்திய மாமுனிவர் சிவனாரை நோக்கி கடும் தவம் இருந்து அவருக்கு ரிஷபாரூடராக சிவபெருமான் திருக்காட்சி தந்தருளியது மாசி மாதத்தில்தான்!
பெண்கள் வழிபாடுகளில் அதீத கவனம் செலுத்தக் கூடிய அற்புதமான மாதம். இந்த மாதத்தில்தான், காரடையான் நோன்பும் சாவித்திரி விரதமும் வருகின்றன. மாசி மகம் எனும் புண்ணிய நன்னாளில், காம தகன விழா என சிவாலயங்களில் விமரிசையாக நடைபெறுகின்றன.
மாசி மாதத்தில் வீடு குடி போவது என்பது உயிர்ப்பான, உயிரோட்டமான விஷயமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. வாடகை வீடோ சொந்த வீடோ... மாசி மாதத்தில் குடியேறினால், இல்லத்தில் சுபிட்சம் நிலவும் என்றும் கடன் தொல்லைகள் அனைத்தும் நிவர்த்தியாகும் என்றூம் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மாசி மாதத்தை மாங்கல்ய மாதம் என்றே சொல்லுவார்கள். மாசி மாதத்தின் வெள்ளிக்கிழமையில் சுமங்கலிகளுக்கு மஞ்சள் சரடு, குங்குமம், மஞ்சள், வளையல், கண்ணாடி, ஜாக்கெட் பிட் முதலானவற்றை வழங்குவதும், அவர்களுக்கு பாதபூஜை செய்து நமஸ்கரிப்பதும் தாலி பாக்கியத்தைத் தந்தருளும்; மாங்கல்ய வரத்தைக் கிடைக்கச் செய்யும் என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள்.
மாசி வெள்ளிக்கிழமைகளில், ஏதேனும் ஒருநாளில், சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு முதலான மங்கலப் பொருட்களுடன் புடவை வைத்துக் கொடுப்பதும் தம்பதி இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும். சந்ததிகள் சிறக்கவும் செழிக்கவுமாக வாழ்வார்கள் என்பது ஐதீகம். அதனால்தான் மாசி மாதத்தை மாங்கல்ய மாதம் என்றே போற்றுகிறார்கள்.
மாதந்தோறும் மகம் நட்சத்திர நாள் உண்டு என்றாலும் மாசி மாதத்து மகம் நட்சத்திரம் ரொம்பவே விசேஷமானது. மாசி மகம் நன்னாளில் தீர்த்த நீராடுவது புண்ணியங்கள் நிறைந்தது. மாசி மக நட்சத்திர நாளில், அருகில் உள்ள ஆறு, குளங்களில், நதிகளில் நீராடுவது நம் பாவங்களையெல்லாம் போக்கும். காவிரி, கங்கை, தாமிரபரணி முதலான புண்ணிய நதிகளில் நீராடி ஆலயம் சென்று வணங்கித் தொழுதால், நம் ஏழு தலைமுறைப் பாவங்களும் விலகும். பித்ரு தோஷங்கள் அனைத்தும் நீங்கும். கிரகங்களால் உண்டான தோஷங்கள் அனைத்தும் காணாமல் போகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மாசி எனும் மகத்தான மாதத்தில், இறை வழிபாட்டில் கவனம் செலுத்துவோம். உரிய ஸ்லோகங்களையும் பாடல்களையும் விஷ்ணு சகஸ்ர நாமம், கனகதாரா ஸ்தோத்திரம், அபிராமி அந்தாதி முதலானவற்றையும் ஜபித்து வருவது, நம்மை நல்வழிப்படுத்தும். சத்விஷயங்கள் அனைத்தையும் தந்தருளும் என்பது ஐதீகம்!
27.2.2021 சனிக்கிழமை மாசி மக நன்னாள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT