Last Updated : 23 Feb, 2021 11:29 AM

 

Published : 23 Feb 2021 11:29 AM
Last Updated : 23 Feb 2021 11:29 AM

தோஷங்கள் நீக்கும் அஷ்ட நாகர்கள் தரிசனம்!  ஊரைக் காக்கும் உடுமலை மாரியயம்மன்!  

உடுமலை மாரியம்மன், ஊரையும் எங்களையும் காத்தருளும் காவல்தெய்வம் எனப் போற்றுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள். குடும்பப் பிரச்சினையால் இல்லத்தில் நிம்மதி இல்லை என்று கலங்குபவர்கள், கருத்து வேற்றுமையால் பிரிந்த தம்பதியர், தீயசக்திகளின் ஆதிக்கத்தால் மனக்கிலேசத்துடன் இருப்பவர்கள், உடுமலைபேட்டை நாயகியை, மாரியம்மனை வழிபட்டால் போதும்... விரைவில் தீயவை விலகும். தடைப்பட்ட மங்கல காரியங்கள் வீட்டில் நிகழும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள் என்பது நம்பிக்கை.

பழநியை அடுத்து உள்ளது உடுமலைபேட்டை. பொள்ளாச்சிக்கும் அருகில் அமைந்திருக்கிறது இந்த ஊர். உடுமலைப்பேட்டை நகரில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில், கிழக்கு நோக்கியபடி அற்புதமாகக் காட்சி தருகிறாள் ஸ்ரீமாரியம்மன்.

சுமார் முந்நூறு வருடங்கள் பழைமை வாய்ந்த ஆலயம். ஸ்ரீசக்திவிநாயகர், ஸ்ரீசெல்வமுத்துக்குமரன், ஸ்ரீமாரியம்மன் ஆகியோர் தனித்தனிச் சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர். மாரியம்மனே பிரதான நாயகி. முதன்மை நாயகி.

மேலும் குளிகன், வாசுகி, சங்கபாலன், அனந்தன், மகாபத்மன், தட்சகன், பத்மன், கார்க்கோடகன் என அஷ்ட நாகர்களும் ஸ்தல விருட்சமான அரசமரத்தடியில் இருந்தபடி, தங்களை வணங்கும் அன்பர்களின் தோஷங்கள் அனைத்தையும் போக்கி அருளுகின்றனர்.

செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்களும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன. மாதந்தோறும் பௌர்ணமி நாளில் பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்து பிரார்த்திக்கிறார்கள் பக்தர்கள். இதனால் வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் காணாமல் போகும். கஷ்டங்களும் துக்கங்களும் காணாமல் போகும் என்பது ஐதீகம்!

இங்கே நடைபெறும் விசேஷ ஹோமத்தில் கலந்துகொண்டால், கல்வியிலும் உத்தியோகத்திலும் சிறந்து விளங்கலாம். ஆடி மாதத்தில் வரும் நாக பஞ்சமி நாளில், அஷ்ட நாகர்களுக்கும் பால் முதலான அபிஷேகமும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. இதில் கலந்துகொண்டு ஸ்ரீமாரியம்மனை வணங்கி பிரார்த்தனை செய்து வந்தால், முன் ஜென்மப் பாவங்களும் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அதேபோல், மாசி வெள்ளிக்கிழமையில் ஏராளமான பெண்கள் இங்கு வந்து வேண்டிச் செல்கின்றனர். ஆடி மாத வெள்ளிக்கிழமையில் கூழ் வார்க்கும் வைபவம் கோலாகலமாக நடைபெறுகிறது. தவிர ஆடிப்பூரம், ஆடி அமாவாசை ஆகிய நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக, குடும்பம் குடும்பமாக வந்து தங்கள் வேண்டுதல்களை வைத்துச் செல்கின்றனர். நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் ஸ்ரீமீனாட்சி, ஸ்ரீகாமாட்சி, ஸ்ரீவிசாலாட்சி, ஸ்ரீமூகாம்பிகை என ஒன்பது அலங்காரங்களில் ஜொலிப்பாள் ஸ்ரீமாரியம்மன்.

மேலும், அப்போது 15 நாள் நடைபெறும் திருவிழா, அமர்க்களமாக நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நாளில் உடுமலை, பொள்ளாச்சி, மடத்துக்குளம் என சுற்றுவட்டார ஊர்களில் இருந்தெல்லாம் குடும்பத்துடன் வந்து தரிசித்துச் செல்கின்றனர்.

குடும்பப் பிரச்சினையால் இல்லத்தில் நிம்மதி இல்லை என்று கலங்குபவர்கள், கருத்து வேற்றுமையால் பிரிந்த தம்பதியர், தீயசக்திகளின் ஆதிக்கத்தால் மனக்கிலேசத்துடன் இருப்பவர்கள், உடுமலைபேட்டை நாயகியை, மாரியம்மனை வழிபட்டால் போதும்... விரைவில் தீயவை விலகும். தடைப்பட்ட மங்கல காரியங்கள் வீட்டில் நிகழும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள் என்பது நம்பிக்கை.

கண்ணில் நோய் வந்து அவதிப்படுவோர் இங்கு வந்து கண்மலர் வாங்கி காணிக்கை செலுத்துவதும் வழக்கத்தில் உள்ளது.
உடுமலைபேட்டை மாரியம்மனையும் அஷ்ட நாகர்களையும் வணங்குவோம். தோஷ நிவர்த்தி கிடைக்கப்பெற்று இனிதே வாழ்வோம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x