Published : 23 Feb 2021 10:35 AM
Last Updated : 23 Feb 2021 10:35 AM
மாசி மாதம் மகத்துவம் நிறைந்த மாதம். புண்ணியம் நிறைந்த மாதம். தவ வழிபாட்டுக்கு உரிய மாதம். கலை கல்வியை கற்கக் கூடிய மாதம் என்கிறது சாஸ்திரம். இந்த மாதத்தில் வருகிற மாசி மகா நட்சத்திர நாளும் மகா சிவராத்திரி விழாவும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
அதேபோல், சோமவாரம் விசேஷம். சோமவாரம் என்றால் திங்கட்கிழமை என்று அர்த்தம். எல்லா திங்கட்கிழமையும் சிவனாரை தரிசிப்பது பலன்களைத் தந்தருளும் என்றாலும் கார்த்திகை சோம வாரமும் மாசி சோம வாரமும் சிவ வழிபாட்டுக்கு உரிய சிறப்பு மிக்க நாளாக போற்றப்படுகிறது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மாசி சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமையில், காலை, மதியம் உச்சிகால பூஜை, மாலை மற்றும் இரவு அர்த்த ஜாமத்தின் போது சிவனாருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.
சென்னை தாம்பரத்தை அடுத்து உள்ள சோமங்கலம் ஸ்ரீசோமநாதர் ஆலயம், ஓசூர் ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் கோயில், தஞ்சாவூர் மாவட்டம் திங்களூர் சிவன் கோயில் மற்றும் அனைத்து சிவாலயங்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும். சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.
இந்த நாளில், சிவனாருக்கு வில்வார்ச்சனை செய்து வழிபட்டால், சந்திர பலம் பெருகும் என்பது ஐதீகம்! மேலும் சந்திர தோஷம் நீங்கப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அதேபோல், சிவனாரும் உமையவளும் ஒருசேரக் குடிகொண்டிருக்கும் திருச்செங்கோடு ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் தலத்திலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இதேபோல், கோயில் நகரம் கும்பகோணம் அருகில் உள்ள திருமணஞ்சேரி, திருச்சி அருகில் உள்ள திருப்பைஞ்ஞீலி ஸ்ரீஞீலிவனநாதர், சென்னை நங்கநல்லூர் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர், கும்பகோணம் சோமநாத சுவாமி முதலான திருமண வரம் தரக்கூடிய திருத்தலங்களில் அன்றைய தினம், மாலையில் மாசி சோம வார பூஜையில் கலந்துகொண்டு ஈசனுக்கு வில்வார்ச்சனையும் அம்பாளுக்கும் குங்கும அர்ச்சனையும் செய்து வழிபடுவோம்.
சோம வார பூஜையால், கல்யாணத் தடை அகலும். விரைவில் வீட்டில் கெட்டிமேளம் கேட்கும். தாலி பாக்கியம் கிடைக்கும்; தாலி பாக்கியம் நிலைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
காஞ்சி சங்கர மடத்தில், சந்திரசேகர விக்கிரகத்திருமேனிக்கு மாசி மாதத்தில் விசேஷ பூஜைகள் நடைபெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT