Published : 23 Feb 2021 10:09 AM
Last Updated : 23 Feb 2021 10:09 AM
மாசி மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய மாதம். மாசி மாதம் என்பது புதிய கலைகளையும் கல்விகளையும் கற்கத் தொடங்குகிற மாதம்.
மாசி மாதத்தின் முப்பது நாட்களுமே விசேஷமான நாட்கள்தான். எல்லா தெய்வங்களுக்கும் சிறப்பு மிக்க மாதம் என்று போற்றப்படுகிறது மாசி மாதம்.
திருமால், மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மக நட்சத்திரத் திருநாளில்தான் என்கிறது புராணம். .
மாசி மாதத்தில் வருகிற சங்கடஹர சதுர்த்தி மிக மிக விசேஷம். இந்த நாளில் விரதம் இருந்து வேண்டுவோருக்கும் பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வேண்டுவோருக்கும் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடச் செய்து அருளுவார் பிள்ளையாரப்பன்.
மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில்... தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள் என்கிறது புராணம். .
சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் ஏராளம். இப்படியான திருவிளையாடல்கள் பலவற்றை நிகழ்த்தியது மாசிமாதத்தில்தான். எனவே மாசி மாதம் முழுவதுமே சிவ வழிபாட்டுக்கு உரிய மாதம் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.
மாசி மாதத்தன்று மந்திர உபதேசம் பெறுவதும் உபநயனம் செய்வதும் சிறந்து என்று சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
ஆழ்வார்களில் ஒருவரான, குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில்தான் அவதரித்தார்.
அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான். எனவே, மாசி மாதத்திலும் மற்ற அனைத்து மாதங்களிலும் எல்லா நாளிலும் நம்மால் முடிந்த அளவுக்கு அன்னதானம் செய்வது விசேஷம். மும்மடங்கு பலன்களைத் தரும்.
அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா என்கிறோம். மாசி மாத பூச நட்சத்திர தினத்தில்தான் முருகப்பெருமான் சுவாமிமலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார்.
மாதந்தோறும் வருகிற ஏகாதசியே சிறப்புமிக்கதுதான். மாசி மாதத்தில் வருகிற ஏகாதசியில் விரதம் இருப்பது மகாபுண்ணியம். சகல தோஷங்களையும் போக்கும். பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில் தான் வருகின்றன.
உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசிமக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.அந்தத் துறைகளில், எடுத்துக்கொண்ட கல்வியில் மிகப்பெரிய உச்சம் தொடலாம்.
மாசி மாதத்தில் தெய்வ வழிபாடுகளிலும் பூஜைகளிலும் ஆத்மார்த்தமாக ஈடுபடுங்கள். உங்கள் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT