Published : 22 Feb 2021 02:45 PM
Last Updated : 22 Feb 2021 02:45 PM
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் பங்குனி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பஞ்சபூதங்களில் நீருக்குரிய ஸ்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான விழா இன்று (பிப். 23) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தையொட்டி சுவாமி, அம்மன், விநாயகர், சோமஸ்கந்தர், பிரியாவிடை அம்மன் ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் காலை 6.40 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரம் அருகே எழுந்தருளினர். கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. காலை 7.15 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பங்குனி பெருவிழாவையொட்டி, மார்ச் 11-ம் தேதி எட்டுதிக்கும் கொடியேற்றத்துடன் பங்குனி தேர் திருவிழா தொடங்குகிறது. அன்று காலை தேருக்கு முகூர்த்தக்கால் நடப்படுகிறது. அன்றிரவு சோமஸ்கந்தர் புறப்பாடும், 12-ம் தேதி சூரியபிரபை மற்றும் சந்திரபிரபை வாகனங்களிலும், 13-ம் தேதி பூத மற்றும் காமதேனு வாகனங்களிலும், 14-ம் தேதி கைலாச மற்றும் கிளி வாகனங்களிலும், 15-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும் சுவாமி மற்றும் அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். அன்று இரவு தெருவடைச்சான் நடைபெறவுள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் மார்ச் 16-ம் தேதி நடைபெறுகிறது. மார்ச் 17-ம் தேதி வெள்ளி மஞ்சத்திலும், 18-ம் தேதி வெள்ளிகுதிரை வாகனம் மற்றும் பல்லக்கிலும், 19-ம் தேதி அதிகார நந்தி மற்றும் சேஷவாகனங்களிலும் சுவாமி, அம்மன் ஆகியோர் எழுந்தருளி வீதி உலா காட்சி நடைபெறும்.
மார்ச் 20-ம் தேதி காலை நடராஜர் ஊடல் உற்சவத்தைத் தொடர்ந்து நண்பகல் தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. மாலையில் ஏகசிம்மாசனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். இதனை தொடர்ந்து, சொக்கர் உற்சவம், மௌனோத்ஸவம், சண்டிகேஸ்வரர் உற்சவம் ஆகியவை நடைபெறவுள்ளன.
மார்ச் 30-ம் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. அதையொட்டி, சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரங்களில் வீதி உலா வருகின்றனர். ஏப்ரல் 1-ம் தேதி மண்டலாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.
இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் ஊழியர்கள் செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT