Published : 12 Nov 2015 11:50 AM
Last Updated : 12 Nov 2015 11:50 AM
உலக அதிசயங்களில் இல்லாத அற்புதங்களென்று, தஞ்சைப் பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில்களுடன் ரனக்புர் சமணக் கோயிலையும் சொல்லலாம். ராஜஸ்தான் மாநிலத்தில் பாலி மாவட்டத்தில் ரனக்புர் உள்ளது. இங்குதான் சமணர்களின் முதலாம் தீர்த்தங்கரர் வாலறிவன் விருஷப தேவருக்கான கோயில் அமைந்துள்ளது. ஆரவல்லி மலைத் தொடரின் மேற்குப் பகுதியில் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டது.
மார்வார் பகுதியை ஆண்ட ராணா கும்பா மன்னனிடம் கோயிலை எழுப்ப சேட் தர்மசா என்பவர் நிலம் கேட்டார். அரசனின் பெயரை அப்பகுதிக்குச் சூட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன் மாகை நதிக்கரையோரம் நிலம் ஒதுக்கப்பட்டது. நாற்பத்தியெட்டாயிரம் சதுர அடியில் கோயில் அமைத்துக் கட்டிமுடிக்க அறுபத்தைந்து ஆண்டுகள் ஆயிற்று. தர்மசாவின் கனவில் தோன்றிய தேவ ஊர்தியைப் போல் கோயில் உருவாக்கப்பட்டதாம்.
முக்குடை வேந்தன் ஆதிபகவன்
தீபகா என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த ஆலயம், மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடனும் அழகியத் தோற்றத்துடனும் மிளிருகிறது. முழுக்க முழுக்க சலவைக்கற்களால் கட்டப்பட்டு சிற்பக்கலைக்கு ஒப்பற்ற எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இக்கோயிலின் மூலவர் சமண நெறியைத் தோற்றுவித்த முக்குடை வேந்தர் ஆதிபகவன் ஆவார்.
இவ்வாலயத்தை, ஆயிரத்து நானூற்று நாற்பத்துநான்கு தூண்கள் தாங்கி நிற்கின்றன. இத்தூண்கள் மிகவும் ஆச்சரியமானவை. ஒவ்வொரு தூணின் அமைப்பும் மற்றொரு தூணின் வடிவத்திலிருந்து வேறுபட்டது. ஒவ்வொன்றும் ஒருவிதம். அவற்றின் அமைப்பு பிரமிப்பூட்டுவதாக உள்ளது. கோயிலின் நாற்புறமும் வித்தியாசமான நுழைவாயில்கள் உள்ளதால் சௌமுகா கோயில் எனப்படும். எவ்வழியில் சென்றாலும் அருள்மழை பொழியும் அறநாயகன் ஆதிபகவனைச் சென்றடையும். இக்கோயிலின் இருபத்தொன்பது கூடங்களும் 80 அரைவட்டக் கோபுரங்களும் வியப்பில் ஆழ்த்துகின்றன.கோயிலின் அனைத்துப் பக்கங்களும் மேற்கூரைகளும் கல்லிலே கலைவண்ணம் காட்டி கம்பீரமாக நிற்கின்றன. நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய, கூம்பு வடிவக் கோபுரங்களும் அரைவட்டக் கோபுரங்களும் திணறடிக்கின்றன.
இந்த ஆலயத்திலுள்ள 1008 தலை பாம்புடைய பாரீசர் சிலை மிகவும் நேர்த்தியானது. நாற்பத்தைந்தடி உயரத்தில் தெய்வ மகளிர் நடன நிலையில் குழலூதும் சிலைகள் பார்ப்போரை தேவருலகத்திற்கே அழைக்கின்றன.கற்பனையும் கலையும் கைகோக்கும் சிலைகள் இவை. குவிமாடங்களும், தோரண வளைவுகளும் கல்லில் செதுக்கியதாகத் தோன்றாமல் துணியில் செய்யப்பட்ட இழைப்பின்னல் போல் காட்சி தருகின்றன. மிக நுண்ணிய துல்லிய சிற்ப வேலைப்பாடுகள் காண்போரை ‘தோள் கண்டார் தோளே கண்டார்’ என்பது போல வசீகரிக்கின்றன. தலா நூற்றியெட்டு கிலோ உள்ள இரு ஆலயமணிகள் தெய்வீக ஒலியை எழுப்புகின்றன.
எல்லையற்ற பிரமாண்டம்
இங்குள்ள தூண்கள் சூரியவொளி படும்போது, பொன்னிறத்திலிருந்து வெளிறிய நீலமாக மாறி அசத்துகின்றன. பிரமாண்டமான வடிவில் நிற்கும் இக்கோவில், மனிதரால் உருவாக்கப்பட்டதா எனும் ஐயத்தை ஏற்படுத்துகிறது. இவ்வளாகத்திலேயே பொறிவாயில் ஐந்தவித்த புனித தீர்த்தங்கரர்கள் நேமிநாதருக்கும் பார்சுவநாதருக்கும் சூரிய பகவானுக்குமான கோயில்கள் பக்திப் பரவசமூட்டுகின்றன. இக்கோயில்களின் மகத்துவத்தைக் கௌரவிக்கும் வண்ணம் மத்திய அரசு தபால் தலை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT