Last Updated : 16 Feb, 2021 12:43 PM

 

Published : 16 Feb 2021 12:43 PM
Last Updated : 16 Feb 2021 12:43 PM

முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்! 

திருவாரூரையும் திருவாரூரைச் சுற்றியுள்ள விடங்கர் கோயில்களையும் ஒரேநாளில் சென்று தரிசிக்கலாம். அப்படி தரிசிப்பது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. சப்த விடங்க தலங்கள் என்று போற்றப்படும் இந்த ஏழு தலங்களையும், ஒரேநாளில் தரிசிப்பது மகா புண்ணியம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சிவனாரின் கோயில்களில்தான் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரிவுகளாக, பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. காவிரியின் வடகரைக் கோயில்கள், தென் கரைக் கோயில்கள், பாடல் பெற்ற தலங்கள், வைப்புத் தலங்கள் என்றெல்லாம் இருக்கின்றன.

அதேபோல், சிவபெருமானின் பரிகாரக் கோயில்களும் வெகு பிரசித்தம். சிவன் கோயில்தான் என்றாலும் அம்பாளே பிரதானம் என்றிருக்கும் ஆலயங்களும் இருக்கின்றன. முருகப்பெருமானே முக்கியமான தெய்வம் என்று புகழப்படும் கோயில்களும் உண்டு.

விநாயகர் பிரசித்தி பெற்ற கோயில்கள் உண்டு. பிரம்மா பிரபலமாக இருக்கும் ஆலயமும் உண்டு. பைரவர், சிறப்பு மிக்கவராகவும் சரபேஸ்வர மூர்த்தி விசேஷமானவராகவும் இருக்கும் கோயில்கள் குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது.

இதேபோல் சிவன் கோயில்களில், சப்த விடங்கத் தலங்கள் என்று இருக்கின்றன. திருவாரூர், திருக்காராயில், நாகப்பட்டினம், திருநல்லார், திருக்கோளிலி, வேதாரண்யம் மற்றும் திருவாய்மூர் முதலான தலங்கள், சப்த விடங்க திருத்தலங்கள் என்று போற்றப்படுகின்றன.
இதுகுறித்து சுவாரஸ்மான புராண சரிதம் ஒன்று உண்டு.

சிவ வடிவத்தை மகாவிஷ்ணு இந்திரனுக்கு வழங்கியிருந்தார். அந்த விடங்கரின் திருமேனியை இந்திரன் அனுதினமும் பூஜித்து வந்தான். ஆரூரை தலைமையிடமாகக் கொண்டு, முசுகுந்த சக்கரவர்த்தி ஆட்சி செய்து வந்தார். அவர், அசுரர்களை அழிப்பதற்காக, தேவர்களுக்கு மிகப்பெரிய உதவிகள் செய்தார். அரக்கக் கூட்டத்தையே அழித்தார்.

அதற்குப் பரிசாக, ‘என்ன வேண்டும் முசுகுந்தா’ என்று கேட்டார் இந்திரன். ‘நீங்கள் பூஜிக்கும் விடங்கரை, தியாகராஜ சுவாமியின் ரூபத்தை வழங்கினாலே போதும்’ என்றார்.

இதைக் கேட்டு அதிர்ந்து போனார் இந்திரன். வலிமை மிக்க விடங்கரை கேட்கிறாரே... என்று கலங்கினார். உடனே இந்திரனுக்கு யோசனை வந்தது. மகாவிஷ்ணு அளித்த விடங்கரைப் போலவே இன்னும் ஆறு விடங்கர்களை அப்படியே செய்துவைப்போம். இவற்றில் உண்மையான விடங்கரை, கண்டுபிடித்து எடுத்துக் கொள் என்றார்.

மறுநாள்... ஏழு விடங்கர் திருமேனிகள் வைக்கப்பட்டிருந்தன. முசுகுந்த சக்கரவர்த்தி மிகுந்த சிவபக்தர். தன் மூச்சும்பேச்சும் சிவபெருமானாகவே கொண்டு வாழ்ந்தவர். சதாசர்வ காலமும் சதாசிவத்தையே நினைத்துக் கொண்டிருக்கும் முசுகுந்த சக்கரவர்த்திக்கு, உண்மையான விடங்கர் திருமேனி தெரியாமல் இருக்குமா என்ன?

ஏழு விடங்கர்கள் இருந்தார்கள். அவர்களில், மகாவிஷ்ணு இந்திரனுக்கு அளித்த விடங்கரை, மூல விடங்கரைச் சரியாக எடுத்தார் முசுகுந்த சக்கரவர்த்தி. வியந்து மலைத்த இந்திரன், ஏழு விடங்கர்களையும் முசுகுந்த சக்கரவத்திரிக்கு வழங்கினான் என்கிறது ஸ்தல புராணம்.
அந்த ஏழு விடங்கர் திருமேனிகளையும் முசுகுந்த சக்கரவர்த்திக்கே வழங்கினார். மூலவிடங்கர், திருவாரூரில் வைக்கப்பட்டார் என்றும் மற்ற ஆறு விடங்கர் திருமேனிகளையும் அடுத்தடுத்த ஊர்களில் உள்ள ஆலயங்களில் வைத்தார் என்றும் விவரிக்கிறது புராணம்.

’ஆரூரா... தியாகேசா...’ என்று அழைக்கப்படும் திருவாரூர், பிறக்க முக்தி தரும் தலம் என்கிறது ஸ்தல புராணம். அதாவது திருவாரூரில் பிறந்தாலே முக்தி நிச்சயம் என்பதாக ஐதீகம்.

திருவாரூரையும் திருவாரூரைச் சுற்றியுள்ள விடங்கர் கோயில்களையும் ஒரேநாளில் சென்று தரிசிக்கலாம். அப்படி தரிசிப்பது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. சப்த விடங்க தலங்கள் என்று போற்றப்படும் இந்த ஏழு தலங்களையும், ஒரேநாளில் தரிசிப்பது மகா புண்ணியம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x