Last Updated : 15 Feb, 2021 04:59 PM

 

Published : 15 Feb 2021 04:59 PM
Last Updated : 15 Feb 2021 04:59 PM

இன்னல்களையெல்லாம் தீர்ப்பாள் ஏகெளரி! 

வல்லம் ஏகெளரியம்மனை பஞ்சமி திதியில் தரிசிப்பது சிறப்புக்கு உரியது. அதேபோல், செவ்வாய்க்கிழமையும் பஞ்சமியும் இணைந்த நாளிலும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் தரிசித்து மனமுருகப் பிரார்த்தனை செய்தால், நம்மையும் நம் இல்லத்தையும் நம் வம்சத்தையும் வாழ்வாங்கு வாழச் செய்வாள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

தஞ்சாவூரில் இருந்து திருச்சி செல்லும் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது வல்லம். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் அமைந்துள்ளது ஏகெளரியம்மன் கோயில். தஞ்சாசுரன் எனும் அரக்கனைக் கொன்று ஒழித்தவள் இவள்தான் என்கின்றன புராணங்கள்.
அதுமட்டுமா? தஞ்சாசுரனை அழித்த தலம் என்பதால்தான் அந்த ஊர் தஞ்சாவூர், தஞ்சை என்றானதாகவும் சொல்லப்படுகிறது.

ஏகெளரி அம்மன் உக்கிர தெய்வங்களில் முக்கியமானவளாகக் கருதப்படுகிறாள். அசுரனை அழித்தும் கூட இவளின் உக்கிரம் தணியவில்லை. கோபம் குறைந்தபாடில்லை. அப்படி உக்கிரமும் உஷ்ணமுமாக இருந்தவளைப் பார்த்து, ‘ஏ கெளரி...’ என்று குரல் உயர்த்தினார் சிவபெருமான். அதில் மந்திரத்துக்குக் கட்டுபட்டது போல், அமைதியானார் என விவரிக்கிறது ஸ்தல புராணம்.

சோழர்கள் காலத்தில், இந்தக் கோயிலுக்கு வந்து, ஆயுதங்களை வைத்து படையலிடுகிற பழக்கம் இருந்தது. யுத்தத்திற்குச் செல்வதற்கு முன்னதாக, வல்லம் ஏகெளரியம்மன் கோயிலுக்கு வந்து வாள், அம்பு, ஈட்டி, குத்தீட்டி, கத்தி முதலான ஆயுதங்களை வைத்து படையலிட்டு வேண்டிக்கொள்வார்கள்.

அப்போது படையல் நடக்கின்ற வேளையில், ஆட்டமும் பாட்டமுமாக திருவிழா போல் நடத்துவார்களாம். அதேபோல், போரில் வெற்றி பெற்றுவிட்டால், நேராக அன்னையிடம் வந்துவிடுவார்கள். மீண்டும் ஆயுதங்களை வைத்து பிரார்த்தனைக்கு நன்றி தெரிவித்துக் கிளம்புவார்கள்.
கரிகாலச் சோழன் காலத்துக் கோயில் என்று வல்லம் ஏகெளரியம்மன் கோயிலின் ஸ்தல புராணம் விவரிக்கிறது. இந்தக் கோயிலுக்குள் கிராம தெய்வங்கள் மிகுந்த சாந்நித்தியத்துடன் திகழ்கின்றனர் என்கிறார்கள்.

மாதந்தோறும் பெளர்ணமியில், ஏகெளரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன. எருமைக்கிடா காணிக்கை கொடுப்பதும் வேறு எந்தத் தலத்திலும் இல்லாத ஒன்று என்கின்றனர் பக்தர்கள்.

வல்லம் ஏகெளரியம்மனை பஞ்சமி திதியில் தரிசிப்பது சிறப்புக்கு உரியது. அதேபோல், செவ்வாய்க்கிழமையும் பஞ்சமியும் இணைந்த நாளிலும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் தரிசித்து மனமுருகப் பிரார்த்தனை செய்தால், நம்மையும் நம் இல்லத்தையும் நம் வம்சத்தையும் வாழ்வாங்கு வாழச் செய்வாள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

அமாவாசை, பெளர்ணமி, செவ்வாய், வெள்ளி முதலான முக்கிய தினங்களில், தஞ்சாவூர், பாபநாசம், கந்தர்வகோட்டை, செங்கிப்பட்டி, திருவையாறு, நடுக்காவிரி, திருமானூர் முதலான சுற்றுவட்டார ஊர்களில் இருந்தெல்லாம் ஏராளமான பக்தர்கள் வந்து ஏகெளரியம்மனைத் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இன்னல்களையெல்லாம் தீர்த்தருளும் ஏகெளரியம்மனை வணங்குவோம். செந்நிற மலர்கள் சூட்டி பிரார்த்திப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x