Last Updated : 15 Feb, 2021 01:35 PM

 

Published : 15 Feb 2021 01:35 PM
Last Updated : 15 Feb 2021 01:35 PM

பிரம்மஹத்தி தோஷம் தீர்க்கும் பிராகார வலம்;   நமசிவாய சொல்லி பலிபிடத்தில் நமஸ்காரம்

சிவ வழிபாடு என்பது சிந்தையில் தெளிவைத் தரும். ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளும் என்கிறது சிவ புராணம். சிவ வழிபாட்டை பூர்த்தி செய்யும் விதமாக மூன்று முறை பிராகார வலம் வந்து வேண்டிக்கொண்டால், நினைத்த காரியங்கள் அனைத்தும் ஈடேற்றித் தருவார் சிவபெருமான். ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறலாம்.

சோம வாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமை சிவபெருமான் குடிகொண்டிருக்கும் தலங்களுக்குச் சென்று தரிசிப்பதும் வழிபடுவதும் மிகுந்த பலன்களைத் தந்தருளக் கூடியவை. சித்தமெல்லாம் சிவமயம் என்பார்கள் சிவனடியார்கள். முக்தி கிடைக்க, சிவமே கதியென்பார்கள்.
மாத சிவராத்திரியில், சிவ வழிபாடு செய்யலாம். நமசிவாய மந்திரம் சொல்லி சிவலிங்கத் திருமேனியை தரிசித்துப் பிரார்த்தனை செய்வது, பீடைகளை விலக்கும்; தரித்திரத்தைப் போக்கும். இல்லத்தில் நல்ல அதிர்வுகளை உண்டுபண்ணும்.

அதேபோல், சிவ வழிபாட்டில் பிரதோஷம் என்பதும் மிக மிக முக்கியமானது. திரயோதசி திதியில் வருகின்ற பிரதோஷத்தன்று சிவனாருக்கும் நந்திதேவருக்கும் பதினாறு வகையான அபிஷேகங்கள் நடைபெறும். இந்த அபிஷேக ஆராதனையைக் கண்ணாரத் தரிசிப்பதே மகா புண்ணியம் என்பார்கள்.

சிவாலயங்களில் பாடல் பெற்ற திருத்தலங்கள் என உண்டு. 274 பாடல் பெற்ற திருத்தலங்கள் உள்ளன என விவரிக்கிறார்கள் சிவாச்சார்யர்கள். அதேபோல், வைப்புத்தலங்கள் என்று இருக்கின்றன. அதாவது அந்த ஆலயத்துக்கு நால்வர்கள் நேரடியாக வராமல், வேறொரு ஆலயத்தில் இருந்தபடியே அந்தத் தலம் குறித்தும் பாடியுள்ளனர். இதனை வைப்புத்தலங்கள் என்று போற்றுகின்றனர்.

பாடல் பெற்ற தலங்கள், வைப்புத் தலங்கள் என்பவற்றுடன் இந்த இரண்டுமில்லாத ஆலயங்களும் ஏராளமாக இருக்கின்றன. எந்த சிவாலயமாக இருந்தாலும் நாம் எத்தனை முறை பிராகார வலம் வருகிறோம் என்பதைக் கொண்டு அவற்றுக்கான பலன்கள் உள்ளன என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சிவன் கோயிலுக்குச் சென்று பிள்ளையார் தொடங்கி வழிபடுவோம். சிவனாரையும் கோஷ்ட தெய்வங்களையும் வழிபடுவோம். அம்பாளை தரிசிப்போம். இதன்பின்னர், பிராகார வலம் வந்து, கொடிமரம், பலி பீடம் இருக்குமிடத்தில் நமஸ்கரிக்க வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சிவ வழிபாட்டை பூர்த்தி செய்யும் விதமாக மூன்று முறை பிராகார வலம் வந்து வேண்டிக்கொண்டால், நினைத்த காரியங்கள் அனைத்தும் ஈடேற்றித் தருவார் சிவபெருமான். ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறலாம்.

ஐந்து முறை பிராகார வலம் வந்து சிவனாரை நமஸ்கரித்து வேண்டிக்கொண்டால், எடுத்த காரியத்திலெல்லாம் வெற்றிக் கிடைக்கப் பெறலாம். காரியத்தடைகள் அனைத்தும் அகலும். ஏழு முறை பிராகாரத்தை வலம் வந்து கொடிமரத்துக்கு அருகில், பலிபீடத்துக்கு அருகில் நமஸ்கரித்து வேண்டிக்கொண்டால், நற்குணங்கள் கொண்ட வாழ்க்கைத் துணை அமைவார்கள். நல்ல வித்துகளாக வாரிசுகள் இருப்பார்கள். தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும் என்கிறார் பாஸ்கர குருக்கள்.

ஒன்பது முறை பிராகார வலம் வந்து வேண்டிக்கொண்டால், சந்தான பாக்கியம் கிடைக்கும். சந்ததி, வாழையடி வாழையென செழிக்கும். வளமுடனும் நலமுடனும் வாழச் செய்வார் ஈசன்.

11 முறை பிராகார வலம் வந்து பிரார்த்தனை செய்தால், நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழலாம். சகல சம்பத்துகளுடன் வாழ அருளுவார் தென்னாடுடைய சிவனார்.

பதிமூன்று முறை பிராகார வலம் வந்து நமஸ்கரித்து பிரார்த்தனை செய்தால், குடும்பத்தில் மூதாதையர்களுக்கு இருந்த குலதெய்வ தோஷம், பித்ரு தோஷம் முதலானவையெல்லாம் நீங்கிவிடும்.

பதினைந்து முறை வலம் வந்து நமஸ்கரித்து சிவபெருமானை வேண்டிக்கொண்டால், அசையும் சொத்துக்களும் அசையாச் சொத்துகளும் கிடைக்கப் பெற்று, கடன் தொல்லையில் இருந்து மீண்டு வாழலாம்.

பதினேழு முறை பிராகார வலம் வந்து வேண்டிக்கொண்டால், செல்வம் பெருகும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். மூன்று தலைமுறைக்கான சொத்துகள் சேரும். வம்சம் தழைத்தோங்கும் என்பது உறுதி.

108 முறை பிராகார வலம் வந்தால், பிரம்மஹத்தி முதலான சகல தோஷங்கள் அனைத்தும் விலகும் என்றும் ஆயிரத்து எட்டு முறை பிராகார வலம் வந்து பிரார்த்தனை செய்து நமஸ்கரித்தால், இந்த இப்பிறவிலும் ஏழ் பிறவியிலும் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெறலாம் என்றும் முக்தி நிச்சயம் என்றும் பாஸ்கர குருக்கள் விவரித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x