Last Updated : 12 Feb, 2021 02:01 PM

 

Published : 12 Feb 2021 02:01 PM
Last Updated : 12 Feb 2021 02:01 PM

உங்கள் குலதெய்வத்துக்கு மாசி பிறப்பில் வழிபாடு! 

உங்கள் குலதெய்வத்துக்கு வழிபாடு செய்வது என்பது மிக மிக முக்கியம். மாசி மதம் பிறக்கும் வேளையில், மாசி மாதப் பிறப்பு நாளில், மறக்காமல் குலதெய்வ வழிபாடு செய்யவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

தெய்வத்தை வழிபாடு செய்வது என்பதுதான் நம் இந்தப் பிறவியின் மிகப்பெரிய நோக்கம். வழிபாடுகள் என்பவை, ஒரே காரணத்துக்காக மட்டும் என்றாலும் கூட ஒவ்வொரு வழிபாடுக்ளும் ஒவ்வொரு விதமானவை. உரிய தெய்வங்களுக்கான உரிய வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. அதன்படி அந்தந்த தெய்வங்களை அந்த வழிபாட்டு முறைகளுடனும் உரிய மந்திரங்களுடனும் வழிபடவேண்டும்.

இஷ்ட தெய்வம் என்று நாம் சில தெய்வங்களை வழிபடலாம். சில ஆலயங்களுக்குச் சென்று தரிசித்து வழிபடலாம். பரிகாரக் கோயில்களுக்கும் பலன்கள் தரக்கூடிய கோயிலுக்கும் சென்று அடிக்கடி வழிபடுவோம்.

அதேபோல், அருகில் உள்ள கோயில்களுக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்போம். அங்கே சிறப்பு பூஜைகளில் பங்கேற்போம். பூஜைக்குத் தேவையான பொருட்களை வழங்குவோம். கண்ணாரத் தரிசித்து மனதாரப் பிரார்த்தனைகள் மேற்கொள்வோம்.

இப்படி எத்தனை விதமாக தெய்வ வழிபாடுகள் செய்தாலும் இஷ்ட தெய்வ பிரார்த்தனைகளை மேற்கொண்டாலும் முக்கியமான வழிபாடுகள் என்று இரண்டு விஷயங்களை ஆச்சார்யர்கள் சொல்லிவைத்திருக்கிறார்கள்.

முதலாவது முன்னோர் வழிபாடு. பித்ருக்கள் வழிபாடு. முன்னோர் வழிபாட்டைச் செய்யச் செய்ய, நம் பாவங்களும் தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். அதேபோல, குலதெய்வ வழிபாடு என்பது ரொம்பவே மகத்துவம் மிக்கது. எண்ணற்ற பலன்களைக் கொண்டது.

குலதெய்வ வழிபாட்டை நாம் ஒருபோதும் செய்யாமல் இருக்கக் கூடாது. வருடத்துக்கு ஒருமுறையேனும் குலதெய்வ வழிபாட்டை, பிரார்த்தனை, குலதெய்வ தரிசனத்தை மேற்கொள்ளச் சொல்லி வலியுறுத்துகிறது தர்ம சாஸ்திரம்.

வருடம் ஒருமுறை என்றில்லாமல் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் குலதெய்வத்தை பிரார்த்தனை செய்யவேண்டும். வணங்கவேண்டும். நம்மால் முடிந்த அளவுக்கு குலதெய்வக் கோயிலுக்கு ஏதேனும் திருப்பணிகள் மேற்கொள்ளவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மாசி மாதப்பிறப்பு என்பது நாளைய தினம் 13ம் தேதி பிறக்கிறது. மாசிப் பிறப்பு நாளில் நம் வீட்டின் குலதெய்வத்தை வணங்குவோம்.

குலதெய்வப் படத்துக்கு பூக்களிட்டு பிரார்த்தனை செய்வோம். மாவிளக்கு ஏற்றி வழிபடுவார்கள் பக்தர்கள்.

மாசி மாதப் பிறப்பில், குலதெய்வக்குப் படையலிட்டு வழிபடுகிறவர்களும் உண்டு. இந்தநாளில், பொங்கல் படையல் செய்து வழிபடுவதும் மாவிளக்கேற்றி வழிபடுவதும் நம் குலத்தையே காத்தருளும் என்பது ஐதீகம்.

மாசிப் பிறப்பு என்பதும் மாசி மாதம் என்பதும் குலதெய்வ வழிபாட்டுக்கு உகந்த மாதம். மறக்காமல் குலதெய்வ வழிபாடு செய்வோம். நம் சந்ததி சீரும் சிறப்புமாக வளரும் செழிக்கும் என்பது உறுதி!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x