Published : 11 Feb 2021 03:23 PM
Last Updated : 11 Feb 2021 03:23 PM
தை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையில் மறக்காமல் அம்பாளை தரிசனம் செய்யுங்கள். நம் அல்லல்களையெல்லாம் தீர்த்துவைப்பாள் அன்னை. துக்கத்தையெல்லாம் போக்கி அருளுவாள் தேவி.
பிரபஞ்சத்துக்கே சக்தியாக விளங்குபவள் பராசக்தி. பிரபஞ்ச சக்தியாக மட்டுமல்ல... உலகாளும் ஈசனுக்கே சக்தியைக் கொடுப்பவளாகத் திகழ்கிறாள் உமையவள். அதனால்தான் வழிபாடுகள் பல இருந்தாலும் வழிபாட்டு வகைகள் பல இருந்தாலும் சாக்த வழிபாட்டுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சக்தி வழிபாட்டை சாக்த வழிபாடு என்று போற்றுகிறது சாஸ்திரம்.
இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்றாக மூன்றாகப் பிரிந்து நமக்குத் தேவைப்படுகிற தருணங்களிலெல்லாம் அந்தச் சக்தியை வழங்கி அருளிக்கொண்டே இருக்கிறாள் அம்பாள்.
மயிலையில் கற்பகாம்பாளாக இருக்கிறாள். மதுரையில் மீனாட்சியாக இருக்கிறாள். திருச்சியில் அகிலாண்டேஸ்வரியாகவும் திருவேற்காட்டில் கருமாரி அன்னையாகவும் திருவொற்றியூரில் வடிவுடைநாயகியாகவும் திருநெல்வேலியில் காந்திமதி அன்னையாகவும் சங்கரன்கோவிலில் கோமதி அம்பாளாகவும் என இன்னும் இன்னுமாக தன் சக்தியை வியாபித்து, அருளாட்சி செய்துகொண்டிருக்கிறாள் அன்னை.
திருமீயச்சூரில் லலிதாம்பிகை எனும் திருநாமத்துடன் கோயில் கொண்டிருக்கிறாள். காசியில் விசாலாட்சியாகவும் ராமேஸ்வரத்தில் பர்வதவர்த்தினியாகவும் குமரியில் பகவதி அன்னையாகவும் என அம்பாளின் அழகு வடிவங்கள் ஆயிரமாயிரமாக அமைந்திருக்கின்றன. பல்லாயிரக் கணக்கான கோயில்களில், நின்ற திருக்கோலத்தில், நம்மையெல்லாம் அருள்பாலித்து கடைத்தேற்ற தயாராக இருக்கிறாள் தேவி. இந்த அத்தனை சக்திகளுக்கும் சக்தி பீடங்களுக்கும் தலைவியாகத் திகழ்கிறாள் காஞ்சி காமாட்சி.
அம்பாள் என்பவளாகட்டும் மாரியம்மன், காளியம்மன், செல்லியம்மன் என்று போற்றப்படுகிற பெண் தெய்வங்களாகட்டும்... இவர்கள் அனைவரையும் செவ்வாய்க்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் தவறாமல் வணங்கிவருவது எண்ணற்ற நல்லதுகளைக் கொடுக்கும்.
அதிலும் தை மாதத்தின் வெள்ளிக்கிழமையில் அம்பாளை வணங்குவது அளப்பரிய பலன்களைக் கொடுக்கவல்லது. ஆனந்தத்தையும் நிம்மதியையும் வழங்குவாள் அன்னை என்று போற்றுகின்றனர் சாக்த வழிபாட்டு அன்பர்கள்.
தை மாதத்தின் வெள்ளிக்கிழமைகளில், அருகில் உள்ள அம்பாள் கோயிலுக்குச் சென்று வணங்கலாம். தரிசிக்கலாம். பிரார்த்திக்கலாம். காலையும் மாலையும் வீட்டில் விளக்கேற்றி, செம்மண் கோலமிட்டு, அம்பாள் படங்களுக்கு செந்நிற மலர்கள் சூட்டி வழிபடலாம்.
நாளைய தினம் 12ம் தேதி வெள்ளிக்கிழமை... தை மாதத்தின் வெள்ளிக்கிழமை. தை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை. நம் வாழ்வை வளமாக்க அம்பாள் தயாராக இருக்கிறாள். அவளின் ஆலயத்துக்குச் செல்லுவோம். அவளின் திருச்சந்நிதியில் நின்று நம் கோரிக்கைகளை, வேண்டுதல்களை, பிரார்த்தனைகளை அவளிடம் முன்வைப்போம். செந்நிற மலர்கள் அம்பாளுக்கு உகந்தவை. அரளி முதலான மலர்களைச் சூட்டி அன்னையை அலங்கரிப்போம்.
லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் ஒலிக்க விட்டுக் கேட்பதும் நல்ல அதிர்வுகளை உண்டாக்கும். அபிராமி அந்தாதி பாராயணம் செய்வோம். சுமங்கலிகளுக்கு புடவை அல்லது ஜாக்கெட் பிட், வளையல், குங்குமம், மஞ்சள், வெற்றிலை, பாக்கு முதலான மங்கலப் பொருட்களை வழங்கி நமஸ்கரிப்போம். இதனால் நம் தாலி பாக்கியம் நிலைக்கும். மணமாகாத பெண்களுக்கு தாலி பாக்கியம் கிடைக்கும்.
இல்லத்தில் சுபிட்சத்தைக் கொடுத்திடும் அன்னையை, சக்தியை, பராசக்தியை மனதார வழிபடுவோம். தை வெள்ளியில் ஆத்மார்த்தமாக வணங்குவோம். நம்மையும் நம் சந்ததியையும் சிறப்புடனும் சுபிட்சத்துடனும் இனிதே வாழச் செய்து அருளுவாள் அம்பாள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT