Published : 11 Feb 2021 12:55 PM
Last Updated : 11 Feb 2021 12:55 PM
பித்ருக்களை நினைப்பதும் அவர்களை ஆராதிப்பதும் நம்முடைய வாழ்வை இன்னும் இன்னுமாக உயர்த்தும். முன்னுக்குக் கொண்டு வரும். அவர்களை நினைத்து நாம் செய்கிற எந்தவொரு தர்மகாரியமும் அவர்களுக்கு போய்ச் சேரும். அவையெல்லாம் புண்ணியமாக நம்மை வந்தடையும் என்கிறது சாஸ்திரம்.
பித்ரு தோஷம் என்பது அனைத்துத் தடைகளையும் தரக்கூடிய மிக முக்கியமான தோஷம். அதேபோல், பித்ரு வழிபாடு என்பது அனைத்து தடைகளையும் தோஷங்களையும் விலக்கி அருளக்கூடிய மிக முக்கியமான வழிபாடு என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.
பெற்றோர்களுக்கு உணவு தராமலும் உடுத்துவதற்கு உடைகள் தராமலும் நிம்மதியாக தங்குவதற்கு இடம் தராமலும் முக்கியமாக அன்பு காட்டாமலும் எவர் இருந்தாலும் அவர்கள், பித்ரு காரியங்களை முறையே செய்தாலும் பயனில்லை. குலதெய்வ வழிபாட்டை முறைப்படி செய்தாலும் பலனிருக்காது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அதேபோல், பித்ரு காரியங்களும் பித்ரு ஆராதனைகளும் எந்த வீட்டில் குறைவின்றி செய்யப்படுகிறதோ, அவர்களின் வீட்டில் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும் என்பதும் குலதெய்வத்தின் சக்தியானது வியாபித்திருக்கும் என்பதும் ஐதீகம்.
வீட்டில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு சக்தி உண்டு. அதேசமயம் கோயில்களிலும் ஆறு குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளிலும் செய்யப்படும் தர்ப்பணம் சிராத்த்தம் முதலான காரியங்களுக்கு இன்னும் வலிமையும் பலனும் உண்டு என்கின்றன சாஸ்திரங்கள்.
அமாவாசை நன்னாளில், முன்னோர்களின் பெயர்களைச் சொல்லி எள்ளும் தண்ணீரும் விடவேண்டும். அந்த எள்ளையும் தண்ணீரையும் பெற்றுச் செல்வதற்காக, நம்முடைய முன்னோர்கள், நம் வீட்டு வாசலுக்கு வந்து நிற்பார்கள். நாம் தர்ப்பணம் செய்தால், அதை மிகுந்த சந்தோஷத்துடனும் நிறைவுடனும் பெற்றுக் கொண்டு ஆசீர்வதிப்பார்கள். அதேசமயம், நாம் அமாவாசை முதலான நாட்களில் தர்ப்பணமோ, திதியோ, சிராத்தமோ செய்யாமல் போனால், வீட்டு வாசலில் வந்து நிற்கிற முன்னோர்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வார்கள். இந்த ஏமாற்றம் வேதனையைக் கொடுக்கும். துக்கத்தைக் கொடுக்கும். கோபத்தைக் கொடுக்கும். இதுவே பித்ரு தோஷமாக உருப்பெறுகிறது என்றும் பித்ரு சாபமாக மாறுகிறது என்றும் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
நாம் அமாவாசை முதலான தர்ப்பண காரியங்களின் போது கொடுக்கப்படுகிற உணவுகளும் எள்ளும் தண்ணீருமானது உரியவர்களுக்கு எப்படிப் போய்ச் சேரும் என்று பலரும் கேட்கலாம். இறந்தவர்களின் கோத்திரம், பெயர், தந்தை பெயர் தாயார் பெயர் எனச் சொல்லி, எள்ளும் தண்ணீரும் விடுகிறோம். படையலிடுகிறோம். ஆகவே அந்த உணவானது நம் முன்னோர்களுக்கு போய்ச் சேருகின்றன என உறுதிபடத் தெரிவித்துள்ளார்கள் ஆச்சார்யர்கள்.
பித்ருக்களை நினைப்பதும் அவர்களை ஆராதிப்பதும் நம்முடைய வாழ்வை இன்னும் இன்னுமாக உயர்த்தும். முன்னுக்குக் கொண்டு வரும். அவர்களை நினைத்து நாம் செய்கிற எந்தவொரு தர்மகாரியமும் அவர்களுக்கு போய்ச் சேரும். அவையெல்லாம் புண்ணியமாக நம்மை வந்தடையும் என்கிறது சாஸ்திரம்.
அமாவாசை முதலான நாட்கள், தமிழ் மாதப் பிறப்பு முதலான நாட்கள் உள்ளிட்ட நாட்களில், முன்னோர்களை மறக்காமல் வழிபடுவோம். தர்ப்பணம் செய்வோம். அவர்களின் பரிபூரண ஆசியைப் பெறுவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT